(இராஜதுரை ஹஷான்)
சீனாவிலிருந்து நாட்டிற்கு வரும் கப்பலில் தீங்கு ஏற்படுத்தக் கூடிய ஏர்வீனியா பற்றீரியா அடங்கிய சேதனப் பசளை இருப்பதாக தேசிய தாவரங்கள், தொற்று நீக்கி மற்றும் தனிமைப்படுத்தல் சேவை நிலையம் அறிவித்துள்ளது. இந்த சேதனப் பசளையை விவசாயத்துறை அமைச்சு ஒருபோதும் ஏற்காது என தொடர்புடைய சீன நிறுவனத்திற்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளோம். அவ்வாறான பின்னணியில் மீண்டும் அதே உரம் நாட்டிற்கு வருவதாக குறிப்பிடப்படுகிறது. அந்த உரத் தொகையை துறைமுகத்தில் யார் பொறுப்பேற்கிறார்கள் என்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம் என விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் உதித் கே.ஜயசிங்க தெரிவித்தார்.
சீனாவிலிருந்து நாட்டிற்கு வரும் கப்பலில் தீங்கு விளைவிக்கக் கூடிய சேதனப் பசளை உள்ளடங்கப்பட்டுள்ளமை தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், பெரும்போகத்திற்கு தேவையான சேதனப் பசளை உரத்தை சீன நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக குறித்த நிறுவனத்திடமிருந்து உர மாதிரிகள் பெறப்பட்டு அவை ஆய்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டது.
பெற்றுக் கொள்ளப்பட்ட சேதனப் பசனை மாதிரிகளில் இலங்கையின் மண் வளத்திற்கும், காலநிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஏர்வினியா என்ற பற்றீரியா அடங்கியிருப்பது இருமுறை முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை ஆய்வுகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்திடமிருந்து உரத்தை பெற்றுக் கொள்ளும் தீர்மானம் இடை நிறுத்தப்பட்டதுடன்,பெற்றுக் கொள்ளப்பட்ட உர மாதிரிகளும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போது அதே உரத் தொகை மீண்டும் நாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சிகள் இடம்பெறுவதாக தேசிய தாவரங்கள், தொற்று நீக்கி மற்றும் தனிமைப்படுத்தல் சேவை நிலையம் விவசாயத்துறை அமைச்சுக்கு அறிவித்தது. அவ்வாறான முயற்சிகளை விவசாயத்துறை அமைச்சு முன்னெடுக்கவில்லை என உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளோம்.
இந்த உரத்தை நாட்டுக்குள் கொண்டுவர அனுமதிக்க வேண்டாம் என துறைமுக அதிகார சபைக்கு அறிவுறுத்தியுள்ளோம். ஒருவேளை நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டால் விவசாயத்துறை அமைச்சு அதனை பொறுப்பேற்காது, யார் பொறுப்பேற்கிறார்கள் என்பதை ஆராய்கிறோம்.
சீனாவிலிருந்து வருகை தரும் இந்த கப்பல் துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு ஆபர்மாஸ்டர் கெப்டன் நிர்மல்டி சில்வா துறைமுக சேவை தரப்பினருக்கு நேற்று முன்தினம் ஆலோசனை வழங்கியுள்ளார்.
20 ஆயிரம் மெற்றிக் தொன் சேதனப் பசளையுடன் குறித்த கப்பல் நேற்றுமுன்தினம் மாலை நாட்டை வந்தடையும் என தேசிய தாவரங்கள், தொற்று நீக்கி மற்றும் தனிமைப்படுத்தல் சேவை நிலையம் கொழும்பு துறைமுகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
சீனாவிலிருந்து வருகை தரும் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரிப்பதற்கு இதுவரையில் அனுமதி கோரப்படவில்லை. அத்துடன் வருகை தருவதாகவும் குறித்த நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவுமில்லை.
இந்த கப்பலை துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு துறைமுக சேவையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் முன்னெடுக்கப்பட வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளது.
பெரும்போகத்திற்கு தேவையான சேதனப் பசளையை சீன நாட்டின் நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்தது. அதற்கமைய சேதனப் பசளையை இறக்குமதி செய்வதற்கு முன்னர் அந்த உரங்களின் மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
சீன நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட சேதனப் பசளை மாதிரி உரத்தில் இலங்கையின் மண் வளத்திற்கும், காலநிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் அடங்கியிருப்பது இரண்டுமுறை முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் போது உறுதிப்படுத்தப்பட்டது.
ஆகையால் பெற்றுக் கொள்ளப்பட்ட உர மாதிரிகளை சீன நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பவும், குறித்த நிறுவனத்திடமிருந்து உரம் இறக்குமதி செய்வதை தடை செய்யவும் விவசாயத்துறை அமைச்சு தீர்மானித்தது.
அதனைத் தொடர்ந்து 'சர்வதேச தாவரவிலயல் பாதுகாப்பு பிரகடனத்தின்படி ஏர்வினியா பற்றீரியாவை கண்டறிவதற்கு குறைந்தது. 6 நாட்களேனும் தேவைப்படும். இருப்பினும் இறக்குமதி செய்யப்பட்ட உர மாதிரிகள் 3 நாட்களினால் பரிசோதனையை தொடர்ந்து பற்றீரியா காணப்படுவதாக இலங்கை தேசிய தாவரவியல் பரிசோதனை மையம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் காரணமாக விவசாயத்துறை அமைச்சு சீனாவின் ஷிங்டாவ் சீவின் நிறுவனத்திடமிருந்து உரத்தை பெற்றுக் கொள்வதை தடை செய்ய தீர்மானித்துள்ளது. இத்தீர்மானம் கேள்விக்குரியது என்பதுடன் மாத்திரமன்றி அது குறித்த கம்பனிக்கு பாரிய நிதி இழப்பை ஏற்படுத்தும்.
ஆகவே இலங்கை மற்றும் சீனக் கம்பனி ஆகிய இரு தரப்புக்களும் விஞ்ஞானபூர்வ அடிப்படையில் மற்றும் உண்மை தகவல்களுக்கு மதிப்பளித்து இப்பிரச்சினைக்கு ஒன்றினைந்து தீர்வு காண வேண்டும் என சுட்டிக்காட்டி கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிக்கை வெளியிட்டது.
இவ்வாறான பின்னணியில் பெரும்போகத்திற்கு தேவையான 'பொட்டாசியம் குளோரைட்' உரத்தை அரசாங்கம் லித்துவேனியா நாட்டிலிருந்து இறக்குமதி செய்தமை குறிப்பிடத்தக்கது.
சீன நிறுவனம் அரசாங்கம் தடை செய்ய உரத்தை மீண்டும் நாட்டிற்குள் கொண்டு வர முயற்சிப்பதாக எதிர்த்தரப்பினர் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான பின்னணியில் சீனாவின் குவின்ங்டாவோ நிறுவனம் மற்றும் அதன் உள்நாட்டு முகவர் நிறுவனம் ஆகிய தரப்பின் ஊடாக நாட்டுக்கு உயிரிய சேதனப் பசளை உரம் கொணடு வருவதற்கு எதிராக கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment