இலங்கை மத்திய வங்கி ஆளுநர் தற்காலிக தீர்வுகளை அறிவித்து மக்களை ஏமாற்ற வேண்டாம் : நியாயமற்ற முறையில் அறவிடப்படும் தண்ட வட்டியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - லீசிங், கடன் தவணைப் பணம் செலுத்துவோரின் ஒன்றிணைந்த சங்கம் - News View

Breaking

Saturday, October 2, 2021

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் தற்காலிக தீர்வுகளை அறிவித்து மக்களை ஏமாற்ற வேண்டாம் : நியாயமற்ற முறையில் அறவிடப்படும் தண்ட வட்டியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - லீசிங், கடன் தவணைப் பணம் செலுத்துவோரின் ஒன்றிணைந்த சங்கம்

(நா.தனுஜா)

லீசிங் அடிப்படையில் வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்கள் தவணைக் கட்டணத்தை உரிய காலப்பகுதியில் செலுத்தா விட்டாலும், நீதிமன்றக் கட்டளையின்றி அவர்களிடமிருந்து வாகனங்களை மீள் கையகப்படுத்துவதை 6 மாத காலத்திற்கு இடைநிறுத்துமாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அறிவித்திருக்கின்றார். இவ்வாறு தற்காலிக தீர்வுகளை அறிவித்து நாட்டு மக்களை ஏமாற்ற வேண்டாம்.

மாறாக லீசிங் மற்றும் கடன் வழங்கல் வங்கிகளால் நியாயமற்ற முறையில் அறவிடப்படும் தண்ட வட்டியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று லீசிங் மற்றும் கடன் தவணைப் பணம் செலுத்துவோரின் ஒன்றிணைந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் இன்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இது குறித்துத் தெளிவுபடுத்திய அவ்வமைப்பின் செயலாளர் சந்தருவன் பொதுப்பிட்டிய மேலும் கூறியதாவது,

கொவிட்-19 வைரஸ் பரவலையடுத்து நாட்டிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகர்கள், முயற்சியாளர்கள் அனைவரும் நாளாந்தம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே வீழ்ச்சிகண்டிருக்கின்ற பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சிறிய, நடுத்தர வணிகர்கள் மற்றும் முயற்சியாளர்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்பதை நாம் ஏற்கனவே நிதியமைச்சரிடமும் மத்திய வங்கியின் ஆளுநரிடமும் சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.

அதற்கு அவசியான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர்களிடம் வலியுறுத்தியிருக்கின்றோம். ஆனால் தற்போதுவரை எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

நாம் அரசாங்கத்தின் பணத்தை எம்மிடம் தருமாறு கோரவில்லை. மாறாக லீசிங் மற்றும் கடன் வழங்கல் வங்கிகளை ஒழுங்குபடுத்தி, அவற்றினால் நியாயமற்ற முறையில் அறவிடப்படும் தண்ட வட்டியை இல்லாதொழிக்குமாறுதான் கோருகின்றோம்.

தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் லீசிங் முறையில் வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்கள் தவணைக் கட்டணத்தை செலுத்துவது தாமதமடைந்தால், நீதிமன்றக் கட்டளையின்றி வாகனங்களை மீள் கையகப்படுத்துவதை 6 மாத காலத்திற்கு இடைநிறுத்துமாறு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள செயற்திட்டத்தில் குறிப்படப்பட்டுள்ளது. இவ்வாறு தற்காலிகமான இடைநிறுத்தங்களை அறிவித்து எம்மை ஏமாற்ற வேண்டாம் என்று அவரிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை சுமார் ஒன்றரை வருட காலம் சகித்துக் கொண்டிருந்த நாட்டு மக்கள் தற்போது பொறுமையை இழந்திருக்கின்றார்கள். எனவே மக்கள் கிளர்ந்தெழுவதற்கு முன்னர் இப்பிரச்சினைக்கு உரியவாறான நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெருக்கடியிலிருக்கும் வணிகங்களுக்குக் கடனுதவிகளை வழங்கவிருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்திருக்கின்றார்கள். ஆனால் புதிதாக கடன்களை வழங்குவதற்குப் பதிலாக, ஏற்கனவே கடன் சுமையால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment