இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்காததால் அரசுக்கு 7,000 கோடி ரூபா நட்டம் என்கிறார் பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 21, 2021

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்காததால் அரசுக்கு 7,000 கோடி ரூபா நட்டம் என்கிறார் பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர்

உலகச் சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதையடுத்து இலங்கையில் அதற்கேற்ப விலை அதிகரிக்கப்படாததால் ஒக்டோபர் மாதம் நிறைவடையும் போது ஆயிரம் கோடி ரூபா நட்டத்தை எதிர்கொள்ள நேருமென பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் நாட்டில் இதுவரை எரிபொருள் விலை அதிகரிக்கப்படாததால் கூட்டுத்தாபனம் தற்போது ஏழாயிரம் கோடி ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதையடுத்து நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படாததால் விற்பனை செய்யப்படும் டீசல் ஒரு லீட்டருக்கு முப்பது ரூபாவும் பெட்ரோல் ஒரு லீட்டருக்கு 20 ரூபாவும் நட்டம் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த நிலையில் தற்போது கூட்டுத்தாபனத்திற்கு ஏழாயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதுடன் அதில் 4,000 கோடி ரூபா உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ளதுடன் 3,000 கோடி ரூபா நட்டம் ரூபாவின் பெறுமதி குறைவடைந்ததன் காரணமாக ஏற்பட்டுள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார். 

உலக சந்தையில் தற்போது மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 80 அமெரிக்க டொலராகவும் சுத்திகரிக்கப்பட்ட டீசல் பீப்பா ஒன்றின் விலை 97 அமெரிக்க டொலராகவும் உள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் பீப்பா 96 டொலராக உயர்வடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கிணங்க எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கு பல தடவைகள் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதும் அரசாங்கம் அதற்கான தீர்மானத்தை இதுவரை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அதேவேளை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மக்கள் வங்கி, இலங்கை வங்கி ஆகிய வங்கிகளில் 3,600 கோடி ரூபாவை கடனாகப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் கொள்வனவின் போது பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment