இலங்கையில் பசு வதையை தடை செய்யும் வகையில் 5 சட்டங்களில் திருத்தம் செய்து வர்த்தமானிப்படுத்தி, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை : கண்டி திருமண / விவாகரத்து சட்டத்தில் திருத்தம் - இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 13 தீர்மானங்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 19, 2021

இலங்கையில் பசு வதையை தடை செய்யும் வகையில் 5 சட்டங்களில் திருத்தம் செய்து வர்த்தமானிப்படுத்தி, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை : கண்டி திருமண / விவாகரத்து சட்டத்தில் திருத்தம் - இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 13 தீர்மானங்கள்

இலங்கையில் பசு வதையை தடை செய்யும் பொருட்டு, அது தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஏற்கனவே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில், அது தொடர்பான 5 சட்டங்கள்/ கட்டளைச்சட்டங்களில் திருத்தம் செய்து, அது தொடர்பிலான சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதனைத்தொடர்ந்து அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அது தொடர்பான அமைச்சரவை தீர்மானம்
உள்ளூர் விவசாயத்துறை மற்றும் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பசு வதை செய்வதை தடை செய்வதற்கும், அதற்கு ஏற்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளையும், விலங்கு அறுப்பு தொடர்பான உள்ளூராட்சி மன்றங்களால் நிறைவேற்றப்பட்டுள்ள துணைச் சட்டங்களைத் திருத்தம் செய்வதற்கும், 2020 செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்ட வரைஞர்களால் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்கள்/ கட்டளைச் சட்டங்களைத் திருத்தம் செய்வதற்கான சட்டமூலங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

272 ஆம் அத்தியாயத்தின் 1893 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க பசு வதை கட்டளைச் சட்டம்

1958 ஆம் ஆண்டு 29 ஆம் இலக்க விலங்குகள் சட்டம்

252 ஆம் அத்தியாயத்தின் மாநகர சபைகள் கட்டளைச் சட்டம்

255 ஆம் அத்தியாயத்தின் நகரசபைகள் கட்டளைச் சட்டம்

1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம்

குறித்த சட்டமூலம் அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு இணங்கவில்லை என சட்டமா அதிபர் உறுதிப்படுத்தியுள்ளார். அதற்கமைய, குறித்த சட்டமூலங்களை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்காகவும் பிரதமர் அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர் சமர்ப்பித்த கூட்டு யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

2. கண்டி திருமண/ விவாகரத்து சட்டத்தை திருத்தம் செய்தல்

1997 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க திருமணப் பதிவு செய்தல் (திருத்தப்பட்ட சட்டம்) மூலம் திருமணப் பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் 22 ஆம் உறுப்புரை திருத்தப்பட்டுள்ளதுடன், அதற்கமைய, சிறுவயதுத் திருமணங்களுக்கு பெற்றோரின் விருப்பு ஒப்புதல் அவசியமெனக் குறித்துரைக்கப்பட்டுள்ளது. குணரத்னம் எதிர் பதிவாளர் நாயகம் வழக்குத் தீர்ப்புக்கமைய 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு இலங்கையில் சட்டபூர்வ திருமணத்தைப் பதிவு செய்வதற்கு இயலாது.

அவ்வாறான திருமணத்திற்கு பெற்றாரின் விருப்பு ஒப்புதல் இருத்தல் சட்டத்தின் முன் செல்லுபடியற்றது. குறித்த வழக்குத் தீர்ப்புக்கமைய தகுதி வாய்ந்த அதிகாரம் படைத்தவர் ஒருவருடைய உடன்பாட்டுடன் சிறுவயதுக்காரர்களின் திருமணத்திற்கு அதிகாரம் வழங்கும் சட்டங்களுக்கு ஏற்புடைய உறுப்புரைகளை முடிவுறுத்த வேண்டியுள்ளது.

அதற்கமைய, தற்போது முஸ்லிம் திருமண மற்றும் திருமண முறிவு சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு இணையாக மலைநாட்டு திருமணம் மற்றும் திருமண முறிவு சட்டத்திற்கு ஏற்புடைய இசைவுகளை நீக்குவதற்கும், அதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கும் சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. குருணாகல் மாகாண பொது மருத்துவமனையில் பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நோயாளர் விடுதித் தொகுதியை முழுமையாக நிர்மாணித்தல்

குருணாகல் மாகாண பொது மருத்துவமனையானது 2,355 கட்டில்களையும், 57 நோயாளர் விடுதிகளையும், 28 விசேட அலகுகளையும் கொண்டமைந்துள்ள மருத்துவமனையாகும். குறித்த மருத்துவமனையின் அபிவிருத்தித் திட்டத்திற்கமைய 2007-2009 காலப்பகுதியில் புதிய நோயாளர் விடுதிகளை அமைப்பதற்கான ஐந்துமாடிக் கட்டிடமொன்றை கட்டம் கட்டமாக நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தாலும், குறித்த கட்டுமானங்களில் இரண்டு மாடிகள் மாத்திரமே இதுவரை பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

காலஞ்சென்ற ஐயிலின் டி மெல் பெண்மணியின் இறுதி விருப்பு ஆவணத்தின் பிரகாரம் குருணாகல் மருத்துவமனைக்கு நோயாளர் விடுதியொன்றையோ அல்லது கட்டிடமொன்றின் பகுதியையோ நிர்மாணிப்பதற்கான உதவித்தொகை ஒதுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பெண்மணியின் சொத்துக்களின் பொறுப்புதாரர்கள் இந்த ஐந்து மாடிக் கட்டடத்தின் நிர்மாணத்தைப் பூர்த்தி செய்து வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளனர்.

குறித்த உடன்பாட்டின் பிரகாரம் அத்திட்டத்தை 02 வருடங்களில் நடைமுறைப்படுத்தி பூர்த்தி செய்வதற்காக ஐயிலின் பெண்மணியின் சொத்துக்களின் பொறுப்புதாரர்களாக நியமிக்கப்பட்டுள்ள தரப்பினருடன் உடன்பாட்டு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. மாத்தறை மாவட்டத்தில் வெலிப்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் கைத்தொழில் வலயமொன்றை அமைத்தல்

பிரதேச செயலக மட்டத்தில் உற்பத்தி ஊக்குவிப்புக்களை மேம்படுத்தும் நோக்கில் கைத்தொழில் அமைச்சு பிரதேச கைத்தொழில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

தென் மாகாணத்தில் அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தித் திட்டங்களுக்கு இணையாக மாத்தறை மாவட்டத்திலுள்ள தொழிற்துறைகளை இலக்காகக் கொண்டு புதிய அபிவிருத்தி வலயமொன்றை வெலிப்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் சாலிமவுன்ட் தோட்டம்/ஹல்லல தோட்டத்தை மையமாகக் கொண்ட 200 ஏக்கர் காணியின் ஒரு பகுதியில் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, கைத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவைக் கருத்தில் கொண்டு குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கொள்கை ரீதியாக அங்கீகாரத்தை வழங்குவதற்கும், குறித்த வேலைத்திட்டத்திற்கும் அப்பிரதேசங்களில் அபிவிருத்திக்காக அடையாளங் காணப்பட்டுள்ள முன்னுரிமைக் கருத்திட்டங்களுக்குத் தேவையான காணித் துண்டுகளை, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான பெருந்தோட்டத்தில் பொருளாதார ரீதியாகப் பயனுள்ள வகையில் பயிரிடப்படாத பகுதிகளிலிருந்து ஒதுக்கிக் கொள்வதற்கான படிமுறைகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. மஹமோதர மகப்பேற்று மருத்துவமனையை மீள்நிர்மாணித்தல்

மஹமோதர மகப்பேற்று மருத்துவமனையின் கருத்திட்ட நிதியிடலுக்காக இலங்கை அரசாங்கம் மற்றும் ஜேர்மன் முகுறு வங்கிக்கும் இடையில் 28 மில்லியன் யூரோக்களுக்கான கடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், பின்னர், குறித்த கருத்திட்டத்திற்காக மேலதிக மிகைநிரப்புத் தொகையாக 13 மில்லியன் யூரோக்களைப் பெற்றுக் கொள்வதற்காக குறித்த வங்கியுடன் மேலதிகக் கடன் ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த கருத்திட்ட நடவடிக்கைகளைத் துரிதமாகப் பூர்த்தி செய்வதற்கு இயலுமான வகையிலும், பின்னர் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள மிகைநிரப்புத் தொகையான 13 மில்லியன் யூரோக்களை நன்கொடையாக மாற்றிக் கொள்வதற்கும் ஜேர்மன் அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த நன்கொடை ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சின் செயலாளருக்கு அதிகாரத்தை வழங்குவதற்காக நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

இலங்கை துறைமுக அதிகார சபையின் தேசிய துறைமுகங்கள் பிரதான திட்டங்கள் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கான சேவை வழங்குதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களை அபிவிருத்தி செய்வதற்கான அவசர தேவைகள் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, புளூமென்டல் பிரதேசத்தில் துறைமுகத்திற்கு அவசியமான சேவை வழங்கல் பிரிவொன்றை நடாத்திச் செல்வதற்;கு துறைமுக அதிகாரசபை திட்டமிட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது தற்போது புளூமென்டல் பிரதேசத்தில் அமைந்துள்ள துறைமுக அதிகாரசபையின் உத்தியோகபூர்வ இல்லத்தை பொருத்தமான இடத்தில் அமைக்க வேண்டிய தேவையுள்ளது.

ராகமை மஹர பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான 08 ஹெக்ரயார்களுடன் கூடிய காணியின் ஒருபகுதி கொழும்பு துறைமுகம் நிர்மாணிக்கப்பட்ட காலப்பகுதியில் கருங்கல் விநியோகிக்கும் தொழிலிடமாக பேணப்பட்டு வந்துள்ளதுடன், தற்போது இக்காணி எந்தவொரு வகையிலும் பயனுள்ள செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படாமலும் உள்ளது.

அதேபோல், குறித்த காணியில் தற்போது மழைநீர் நிரம்பிக் காணப்படுவதால், அந்நீர் நகர அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்கு பயன்படுத்தக் கூடிய வகையில் காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த காணித்துண்டை கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டமாக வதிவிட, நகர, கலாச்சார, நிறுவனங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய வகையில் அபிவிருத்தி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த முன்மொழிவுக் கருத்திட்டத்தை அரச தனியார் பங்குடமைக் கருத்திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்காக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. ஒரு துறைமுகத்திற்கு விசேட ஒரு கனரகப் பொறியியல் தொழிலகத்தை மாத்திரம் அமைப்பதற்கு அனுமதி வழங்கும் கொள்கையை திருத்தம் செய்தல்

ஒரு துறைமுகத்தில் ஒரு விசேட துறையில் ஒரு கனரகப் பொறியியல் தொழிலகத்தை மாத்திரம் அமைப்பதற்கான அனுமதி வழங்கலே தற்போது நடைமுறையிலுள்ள கொள்கையாகும்.

பங்களாதேஷ், இந்தியாவின் கிழக்குக் கரையோரப் பிரதேசம், மியன்மார் மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் துரித பொருளாதார வளர்ச்சியால் வங்காள விரிகுடா சார்ந்த வலயங்களை மையமாகக் கொண்ட துறைமுகங்களை விருத்தி செய்வதற்காக திருகோணமலை துறைமுகத்தின் அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தை தயாரிக்கும் போது திருகோணமலை துறைமுகத்தின் இயற்கையான அமைப்பு, குறித்த துறைமுகத்திற்கு அண்மையில் அமைந்துள்ள துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான 2000 ஹெக்ரயார் காணி மற்றும் துறைமுக சேவைகளை வழங்குவதற்காக நிலவுகின்ற முன்னேற்றகரமான உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் துறைமுகத்தை விருத்தி செய்வதற்காக விசேட வரையறைகள் இல்லாமல் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, துறைமுகம் சார்ந்த கனரகப் பொறியியல் தொழிலகத்தை ஆரம்பிப்பதற்கு ஆர்வம் காட்டும் முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்கும் நோக்கில் தற்போது காணப்படும் ஒரு துறைமுகத்திற்கு ஒரு உலோகத் தொழிற்சாலை எனும் கொள்கையை திருத்தம் செய்வதற்காக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. 2021 தென்மேற்குப் பருவக்காற்று காலத்தில் இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் கடற்கலன்களை சேவையில் ஈடுபடுத்தல்

வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான Mv. Ceylon Breeze மற்றும் Mv. Ceylon Princess போன்ற கடற்கலன்கள் இரண்டும் 2021ஃ2022 தென்மேற்குப் பருவக்காற்றுக் காலப்பகுதியில் (ஏப்ரல் நடுப்பகுதியிலிருந்து செப்டெம்பர் நடுப்பகுதி வரையான காலப்பகுதி) சேவையில் ஈடுபடுத்துவதற்காக பொருத்தமான கடற்கலன்களை வாடகைக்குப் பெறுபவர்களைத் தெரிவு செய்வதற்காக சர்வதேச மற்றும் உள்ளூர் 'கடற்கலன்கள் வாடகைக்கு பெறுபவர்கள்' மற்றும் 'வர்த்தக முகாமைத்துவக் கம்பனி' இற்கு விருப்பக்கோரல் கோரப்பட்டுள்ளது.

இப்பெறுகைக்காக 04 நிறுவனங்கள் விருப்பக் கோரலைச் சமர்ப்பித்துள்ளது. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய Mv. Ceylon Breeze மற்றும் Mv. Ceylon Princess எனும் இரண்டு கடற்கலன்களின் வர்த்தக முகாமைத்துவ ஒப்பந்தத்தை M/s Wallem shipping (Singapore) Pvt. Ltd. இற்கு வழங்குவதற்காக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. 2008 ஆம் ஆண்டு 36 ஆம் இலக்க நகரக் குடியிருப்புக்கள் அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தை திருத்தம் செய்தல்

நகரக் குடியிருப்புக்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் பணிகளைச் சரியான வகையில் மேற்கொள்வதற்கு இயலுமான வகையில் 2008 ஆம் ஆண்டு 36 ஆம் இலக்க நகரக் குடியிருப்புக்கள் அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தை திருத்தம் செய்வதற்காக 2019 பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரசபையின் பணிகளை முறையான வகையில் மேற்கொண்டு செல்வதற்காக அதன் சட்டத்தில் ஏற்படுத்த வேண்டிய மேலதிக சில திருத்தங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளது. குறித்த திருத்தங்களை உள்ளடக்கி 2008 ஆம் ஆண்டு 36 ஆம் இலக்க நகரக் குடியிருப்புக்கள் அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தை திருத்தம் செய்வதற்கும், அதற்காக திருத்தப்பட்ட சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. அருகிவரும் ஆபத்துக் கொண்ட விசேட விலங்கினங்கள் மற்றும் தாவர இனங்கள் தொடர்பான சர்வதேச வியாபாரம் பற்றிய சாசனத்தை (CITES) இலங்கையில் வலுவாக்கல் மற்றும் முறைமைப்படுத்துவதற்காக வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்

அருகிவரும் ஆபத்துக் கொண்ட விசேட விலங்கினங்கள் மற்றும் தாவர இனங்கள் தொடர்பான சர்வதேச வியாபாரம் பற்றிய சாசனத்தின் பங்காளி அரசாக இலங்கை 1979 ஆம் ஆண்டு மே மாதம் 04 ஆம் திகதி குறித்த சாசனத்தில் கையொப்பமிட்டுள்ளது.

குறித்த சாசனத்தின் உறுப்புரைகளை உள்ளூரில் வலுவாக்குவதற்கு இயலுமான வகையில் 2009 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க விலங்கினங்கள் மற்றும் தாவர இனங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக 2016 செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட திருத்தப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்ட மூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் வனவிலங்குகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. ஆபாசப் பேச்சுக்களைத் தடை செய்வதற்கு இணையாக தண்டனைச் சட்டக் கோவையை திருத்தம் செய்தல்

ஆபாசப் பேச்சுக்களைத் தடை செய்யும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக 2021 ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த புதிய சட்டம் அறிமுகப்படுத்துவதற்கு இணையாக தண்டனைச் சட்டக் கோவையின் 285, 286 மற்றும் 289 (அ) உறுப்புரைகளை முடிவுறுத்துவதற்காக சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்ட மூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

குறித்த சட்ட மூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. மோசடிகள் தடுப்புக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்தல்

நொத்தாரிசுகள் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக 2021 யூலை மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த திருத்தங்களுக்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, அதற்கு இணையாக மோசடிகள் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாம் உறுப்புரையுடன் சேர்க்கப்பட்டுள்ள திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், 4 மற்றும் 7 ஆம் உறுப்புரைகளும் திருத்தப்படல் வேண்டுமென அடையாளங் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, மோசடித் தடுப்புக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கும், அதற்காக திருத்தப்பட்ட சட்டமூலத்தை தயாரிப்பதற்கு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. இலங்கையில் உணவுப்பயிர் தேவைகள், நுகர்வு மற்றும் கிடைப்பனவு

உள்ளூர் உணவு உற்பத்தியின் வினைதிறனை அதிகரிப்பதற்காக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமையொழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலையீட்டுடன் தேசிய திட்டமிடல் திணைக்களம், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மற்றும் உணவு மற்றும் பயிர் உற்பத்தி தொடர்பான விவசாய, கால்நடை மற்றும் கடற்றொழில் துறைகளுக்கு ஏற்புடைய அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் உணவுப்பயிர் தேவைகள், நுகர்வு மற்றும் கிடைப்பனவு தொடர்பான ஒப்பீட்டு ரீதியான ஆய்வுக்கற்கை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

நெல், தானியம் உள்ளிட்ட அவரை இனப் பயிர்கள், மரக்கறி, பழவகைகள் மற்றும் தெங்கு போன்ற பயிர்ச்செய்கைகள், மீன்பிடி மற்றும் கால்நடை உற்பத்தி போன்ற அடிப்படை உணவுத் தொகுதி உள்ளடங்கலாக தயாரிக்கப்பட்டுள்ள இவ் அறிக்கையை ஆராய்ந்து, அதன் வழிகாட்டலுக்கமைய 2022 – 2024 காலப்பகுதிக்கான உணவுப்பயிர்களின் இலக்குகள் உள்ளிட்ட செயற்பாட்டுத் திட்டத்தை தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்காக மாவட்ட மற்றும் பிரதேச கமக்கார குழு மற்றும் பிரதேச வாழ்வாதாரக் குழுத் தலைவர்களுக்கும், மாவட்டச் செயலாளர்கள்/அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் தேவையான ஆலோசனைகள், பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமையொழிப்புக்கான ஜனாதிபதி செயலணியால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டம் தொடர்பாக நிதி அமைச்சர் அமைச்சரவையைத் தெளிவூட்டியதுடன், திட்டமிடப்பட்டுள்ளவாறு குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment