ரிஷாட் பதியுதீன் பிணை கோரும் வாதம் ஒத்தி வைப்பு : நீதிமன்றம் அறிவித்தும் 3 ஆவது முறையாகவும் எவரும் ஆஜராகவில்லை - News View

Breaking

Tuesday, October 5, 2021

ரிஷாட் பதியுதீன் பிணை கோரும் வாதம் ஒத்தி வைப்பு : நீதிமன்றம் அறிவித்தும் 3 ஆவது முறையாகவும் எவரும் ஆஜராகவில்லை

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு என கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிணைக் கோரிக்கை தொடர்பிலான வாதங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ரிஷாத் பதியுதீன் சார்பில் பிணை கோரி வாதங்களை முன் வைக்க ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தலைமையில் சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழுவினர் தயாராக இருந்த போதும், சட்டமா அதிபர் சார்பில் எவரும் ஆஜராகாமையால் இவ்வாறு குறித்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 8 ஆம் திகதி சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன் மன்றில் ஆஜராகவுள்ளதாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படியே 8 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் நீதிமன்றம் அறிவித்தும், சட்டமா அதிபர் சார்பில் எவரும் ஆஜராகாமை இது 3 ஆவது முறையாகும்.

கோட்டை நீதிவான் நீதிமன்றில் விசாரணையின் கீழ் உள்ள, கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் குறித்த வழக்குக் கோவை இன்று, கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் மீள விசாரணைக்கு வந்தது.

அதில் 7 சந்தேக நபர்கள் பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக ஏற்கனவே வேறு குற்றச்சாட்டில் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில் இன்றையதினம் 7 ஆவது சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன ஆஜரானார். விசாரணையாளர்கள் சார்பில் சி.ஐ.டி. அதிகாரிகள் ஆஜராகினர்.

கடந்த ஏப்ரல் மாதம் ரிஷாட் பதியுதீன் எம்.பி. கைது செய்யப்பட்டிருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு 16 வயது டயகம சிறுமி ஹிஷாலினி ஜூட் குமார் எரிகாயங்களுடன் மரணமடைந்த சம்பவம் தொடர்பிலான வழக்கில் ஒக்டோபர் 14ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment