'கோப் 26' கிளாஸ்கோ மாநாடு இன்று ஆரம்பம் : ஜனநாயக விரோத அரசாங்கங்களின் நடவடிக்கைகளை மூடிமறைப்பதை காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாட்டாளர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 31, 2021

'கோப் 26' கிளாஸ்கோ மாநாடு இன்று ஆரம்பம் : ஜனநாயக விரோத அரசாங்கங்களின் நடவடிக்கைகளை மூடிமறைப்பதை காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாட்டாளர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்

(நா.தனுஜா)

'கோப் 26' கிளாஸ்கோ மாநாடு இன்றையதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில், சேதன விவசாய நடைமுறையை துரிதகதியிலும் சர்வாதிகார முறையிலும் திணிப்பதற்கு முயன்று, அதில் தோல்வியடைந்திருக்கும் இலங்கை போன்ற ஜனநாயக விரோத அரசாங்கங்களின் நடவடிக்கைகளை மூடிமறைப்பதை காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாட்டாளர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக் குழுவின் சிரேஷ்ட ஆலோசகர் அலென் கீனென் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இன்றையதினம் (31 ஆம் திகதி) ஆரம்பமாகின்றது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் காலநிலை மாற்றத்தைக் கையாள்வதில் நைதரன் வாயுவின் தேவைப்பாடு உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன.

இம்மாநாட்டில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவும் கலந்துகொள்ளவுள்ள நிலையில், இது குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அலென் கீனென் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, சில வேளைகளில் நைதரசனைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகள் சாத்தியப்படலாம். ஆனால் சேதன விவசாய நடைமுறையை துரிதகதியிலும் சர்வாதிகார முறையிலும் திணிப்பதற்கு முயன்று, அதில் தோல்வியடைந்திருப்பது மாத்திரமன்றி, சேதனப் பயிர்ச் செய்கைக்கு மாற்றமடையும் செயற்திட்டத்திலும் பாதிப்பேற்படுவதற்குக் காரணமாகியிருக்கக் கூடிய இலங்கை போன்ற ஜனநாயக விரோத அரசாங்கங்களின் நடவடிக்கைகளை மூடிமறைப்பதை காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாட்டாளர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இலங்கை அரசாங்கமானது ஒரே இரவில் வலுக்கட்டாயமாக சேதன விவசாயத்திற்கு மாறுகின்ற தமது தோல்வியடைந்த கொள்கைக்கும் அப்பாற்சென்று, தற்போது 'கோப் 26' மாநாட்டின் ஓரங்கமாக நைதரசனின் அவசியத்தை வலியுறுத்துவதானது சிறுபான்மையினத்தவருக்கு எதிரான அதன் கொள்கைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை சீர்குலைத்தல் ஆகியவற்றிலிருந்து சர்வதேசத்தை திசைதிருப்புவதற்கான ஒரு முயற்சியாகவே நோக்கப்பட வேண்டியிருக்கின்றது.

காலநிலை மாற்றம் தொடர்பில் உடனடி நடவடிக்கை அவசியம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் இல்லை. ஆனால் இலங்கையில் ராஜபக்ஷ அரசாங்கத்தினால் ஊக்குவிக்கப்படும் சர்வாதிகாரத்தை மையப்படுத்திய தேசியவாதம் மற்றும் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒருபோதும் நிலைபேறான தீர்வுகளைக் கண்டறியவோ அல்லது கட்டியெழுப்பவோ முடியாது என்று அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment