சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அவசர தீர்மானங்களை எடுக்க வேண்டாம் - ஜனாதிபதிக்கு மருத்துவர் ஹெரிஸ் பத்திரகே கடிதம் - News View

Breaking

Saturday, September 11, 2021

சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அவசர தீர்மானங்களை எடுக்க வேண்டாம் - ஜனாதிபதிக்கு மருத்துவர் ஹெரிஸ் பத்திரகே கடிதம்

பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கு முன்னர் அது பற்றி வைத்திய நிபுணர்களின் தீர்மானங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு சிறுவர் நல விசேட மருத்துவர் ஹெரிஸ் பத்திரகே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

பல்வேறு நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் மற்றும் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு மாத்திரம் தடுப்பூசி வழங்குவதற்கு பிரிட்டன் நடவடிக்கை மேற்கொண்டது.

எனினும் நாட்டிலுள்ள அனைத்து சிறுவர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முழுமையாக நிறுத்தப்பட்டதென அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுவர்கள் தொடர்பில் கொவிட் தடுப்பூசிகள் ஆய்வு மட்டத்தில் உள்ளமையினால் அது தொடர்பில் இதுவரையில் விஞ்ஞான ரீதியான சாட்சிகள் இல்லை.

தடுப்பூசிகளின் குறுகிய காலம் மற்றும் நீண்ட கால முடிவுகள் தொடர்பில் இன்னமும் உரிய முறையில் கருத்து வெளியிட முடியாதென வைத்தியர் பத்திரகே தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் வேகமாக மரபணு மாற்றிக் கொள்ளும் கொவிட்19 வைரஸ் திரிபுகள் பல இதுவரையிலும் உருவாகியுள்ளது. கொவிட்19 தொற்றுக்காக வழங்கப்படும் தடுப்பூசிகளின் வெற்றிகரமான செயற்பாடு தொடர்பில் மீண்டும் ஆராயும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

எனவே, சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அவசர தீர்மானங்கள் எடுக்க வேண்டாமென அவர் தனது கடிதம் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினகரன் 

No comments:

Post a Comment