சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்தனர் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 30, 2021

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்தனர்

(எம்.எப்.எம். பஸீர்)

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் சென்று, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்திய சம்பவம் ஊடாக தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி, குறித்த சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகள் அடிப்படை உரிமை மீறல் மனுவினை தாக்கல் செய்துள்ளனர்.

பூபாலசிங்கம் சூரியபாலன், மதியரசன் சுலக்ஷன், கனேஷன் தர்ஷன், கந்தப்பு கஜேந்ரன், இராசதுரை திருவருள், கனேசமூர்த்தி சிதுர்ஷன், மெய்யமுத்து சுதாகரன், ரீ.கந்தரூபன் ஆகிய அரசியல் கைதிகளே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அரசியலமைப்பின் 17 ஆவது உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 126 ஆவது உறுப்புரை பிரகாரம் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு, சின்னதுரை சுந்தரலிங்கம் மற்றும் பாலேந்ரா சட்ட நிறுவனத்தின் சட்டத்தரணி ராஜ் மோஹன் பாலேந்ரா ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் எஸ்.சி.எப்.ஆர். 297/2021 எனும் இம்மனு சார்பில் மனுதாரர்களுக்காக சட்டத்தரணி கேசவன் சயந்தனுடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகவுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை, அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சர் எம்.எச்.ஆர். அஜித், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, நீதி அமைச்சர் அலி சப்றி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் மேல் நீதிமன்ற விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையிலும் வவுனியா நீதிவான் நீதிமன்றினாலும் வழங்கப்பட்டுள்ள உத்தரவுக்கு அமைய தாம் அநுராதபுரம் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி மாலை 6.05 மணியளவில், தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு வந்த முதல் பிரதிவாதி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை, தம்மை முழந்தாழிடச் செய்து மிக மோசமாக நடாத்தியதாக மனுதாரர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் செயற்படும் பூரண அதிகாரத்தை ஜனாதிபதி தனக்கு வழங்கியுள்ளதாக முதல் பிரதிவாதி லொஹான் ரத்வத்தை இதன்போது தெரிவித்ததாகவும், பின்னர் பூபாலசிங்கம் சூரியபாலன் எனும் கைதியின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தியதாகவும் மனுதரர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அதனால் தாங்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளதாகவும் மனுதரர்கள் கூறுகின்றனர்.

இதனால் அரசியலமைப்பு ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ள சித்திரவதைக்கு உள்ளாகாமல் இருப்பதற்கான உரிமை மற்றும் சமத்துவத்துக்கன உரிமை ஆகியன மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையில் அரசியலமைப்பின் 11 ஆவது உறுப்புரையில் கூறப்பட்டுள்ள எந்த ஒருவரும் சித்திரவதைக்கு அல்லது கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்துகைக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படலாகாது என்ற விடயம் மீறப்பட்டுள்ளதாக தீர்மானிக்குமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

அத்துடன் அதற்கு மேலதிகமாக அரசியலமைப்பின் 12 (1) ஆம் உறுப்புரையில் கூறப்பட்டுள்ள சட்டத்தின் முன் ஆட்கள் அனைவரும் சமமானவர்கள் அத்துடன் அவர்கள் சட்டத்தால் சமமாக பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையவர்கள் என்ற விடயமும் 12 (2) ஆம் உறுப்புரையான இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியற் கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக அல்லது அத்தகைய காரணங்களில் எந்தவொன்று காரணமாகவும் எந்த பிரஜையையும் ஓரங்கட்டுதல் ஆகாது என்ற உரிமையும் மீறப்பட்டுள்ளதாக தீர்மானிக்குமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

இந்நிலையில் தாம் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அநுராதபுரம் சிறையில் இருந்து யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு உடனடியாக தங்களை மாற்ற இடைக்கால உத்தரவொன்றினை பிறப்பிக்க வேண்டும் எனவும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

அத்துடன் தம்மை பிணையில் விடுவிக்கும் இடைக்கால தீர்மனமொன்றினையும் அறிவித்து ஈற்றில் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்தும் உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் குறித்த மனு ஊடாக கோரியுள்ளனர்.

No comments:

Post a Comment