லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக பக்கச்சார்பற்ற முறையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 16, 2021

லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக பக்கச்சார்பற்ற முறையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்

(நா.தனுஜா)

வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் பதிவாகியுள்ள சர்ச்சைக்குரிய சம்பவங்கள் அரசியல் அதிகாரங்கள் தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுகின்றமையைப் பறைசாற்றுவதுடன் சிறைக் கைதிகளின் உரிமை மற்றும் சுய கௌரவம் என்பன மீறப்படுகின்றமையையும் வெளிப்படுத்தியுள்ளன.

இந்தச் சம்பவங்களின் தீவிரத்தன்மையைக் கருத்திற் கொண்டு உரியவாறான விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகப் பக்கச்சார்பற்ற முறையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வலியுறுத்தியுள்ளது.

இரத்தினக்கல், தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் மற்றும் சிறைச்சாலைகள் முகாமைத்துவம், சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அண்மையில் அநுராதபுரம் சிறைச்சாலைக்குச்சென்று, அங்கு தமிழ் அரசியல் கைதிகளை அழைத்து அவர்களில் இருவரை மண்டியிடச் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இது குறித்து மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அண்மையில் இரண்டு சிறைச்சாலைகளுக்குள் நுழைந்து, கைதிகளைத் தாக்குதவதற்கு முயற்சித்தமையின் ஊடாக அவரது பதவிக்குரிய அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்துள்ளமை தொடர்பான செய்திகளால் பெரிதும் கவலையடைந்துள்ளோம்.

லொஹான் ரத்வத்த அவரது நண்பர் குழுவொன்றுடன் கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதுமாத்திரமன்றி ஹெலிகொப்டர் ஊடாகப் பயணித்து அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற அவர், துப்பாக்கிமுனையில் இரு கைதிகளை மண்டியிடுமாறு பணித்ததாகவும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவங்கள் அரசியல் அதிகாரங்கள் தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுகின்றமையைப் பறைசாற்றுவதுடன் சிறைக் கைதிகளின் உரிமை மற்றும் சுய கௌரவம் என்பன மீறப்படுகின்றமையையும் வெளிப்படுத்தியுள்ளன.

எனவே இந்தச் சம்பவங்களின் தீவிரத்தன்மையைக் கருத்திற் கொண்டு உரியவாறான விசாரணைகளை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகப் பக்கச்சார்பற்ற முறையில் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த 2001 ஆம் ஆண்டில் உடதலவின்னேவில் 10 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்ததாக லொஹான் ரத்வத்த மீது குற்றஞ் சாட்டப்பட்டிருந்தமை குறித்தும் சுட்டிக்காட்டியுள்ள மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், அதன் காரணமாக இவ்விவகாரத்தில் குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துவதற்குரிய சுயாதீன விசாரணைகளுக்கு அவசியமான ஆதாரங்கள் மறைக்கப்படலாம் என்ற நியாயமான அச்சம் எழுவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment