ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொதுச் செயலாளருக்கு கொலை அச்சறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 22, 2021

ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொதுச் செயலாளருக்கு கொலை அச்சறுத்தல்

ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண இணைப்பாளருமான பொன்னுத்துரை உதயரூபனுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் பெரும் பேசு பொருளாக அமைந்திருப்பது, 24 வருடங்களாக ஆசிரியர் அதிபர்களுடைய சம்பள முரண்பாடு தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் அண்மையில் அமைச்சரவை தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

அதிபர் ஆசிரியர்களுடைய முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையில் இரண்டு மாதங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு ஒன்று வழங்குவதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. ஆனால் தற்போது வெளியாகிய சுற்று நிருபத்தின்படி நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்குவதாக அறியமுடிகின்றது.

ஆகவே இந்த அரசாங்கத்தின் இந்த கொடுப்பனவை ஆசிரியர் அதிபர்கள் முற்றாக நிராகரித்துள்ளதுடன் எழுத்து மூலமாகவும் எமக்கு அறிவித்துள்ளனர். இந்த அரசாங்கத்தின் செயற்பாடானது மேலும் மேலும் முரண்பாட்டை அதிகரிக்கும் நோக்கமாகவே பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

உண்மையில் ஒன்றை கூறியாக வேண்டும் ஜனாதிபதி அண்மையில் அமெரிக்காவில் தெரிவித்த கருத்தும் சரத் வீரசேகர அவர்களுடைய கருத்தும் இந்த போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என்று கூறுகின்றார்கள். ஆனால் எம்மைப் பொறுத்த வரையில் நேரடியாக அச்சுறுத்துவதை எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது.

அண்மையில் கூட எனக்கு முகநூல் வாயிலாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு இருக்கிறது, தொடர்ச்சியாக இந்த அச்சுறுத்தல் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. ஆகவே இவர்கள் ஒன்றை கருத்தில் கொள்ள வேண்டும் அச்சுறுத்தல் இல்லை என்று கூற முடியாது, என்னிடம் இருக்கும் ஆவணங்களை நான் உங்களுக்கு காட்டுகிறேன்.

தொடர்ச்சியாக நான் கொலை மிரட்டலுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றேன். இதற்கு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன் ஆகவே இவற்றுக்கெல்லாம் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சரத் வீரசேகர என்ன பொறுப்பு சொல்லப்போகிறார் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கேசரி

No comments:

Post a Comment