கம்பஹா தொழிற்சாலை ஒன்றில் கைதான யாழ். இளைஞர்களுக்கு ஆவா குழுவுடன் தொடர்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, September 30, 2021

கம்பஹா தொழிற்சாலை ஒன்றில் கைதான யாழ். இளைஞர்களுக்கு ஆவா குழுவுடன் தொடர்பு

(எம்.எப்.எம்.பஸீர்)

கம்பஹா மாவட்டம் - அத்தனகல்ல பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் வைத்து கூரிய கத்திகளுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஐவரும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 72 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் யாழ். 'ஆவா ' குழுவுடன் தொடர்பில் இருந்த சந்தேக நபர்கள் என தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

அத்துடன் அந்த ஐந்து பேரில் இருவர், தமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினர்களாக இருந்து புனர்வாழ்வு பெற்று சமூக மயப்படுத்தப்பட்டவர்கள் எனவும் சி.சி.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் (29), மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, குற்றத் தடுப்புப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் நெவில் டி சில்வா, பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் என்சலம் டி சில்வா ஆகியோரின் கீழ் செயற்பட்ட விஷேட குழு, இந்த ஐவரையும் அத்தனகல்ல தொழிற்சாலை ஒன்றில் வைத்து கைது செய்தது.

குறித்த ஐவரையும் கைது செய்து மேற்கொண்ட சோதனையில், 7,8 அங்குலங்களைக் கொண்ட நான்கு கத்திகள், மனிதத் தலை பொறிக்கப்பட்ட பயிற்சி அட்டை உள்ளிட்டவை மீட்கப்பட்டிருந்தன.

இதனைவிட, அவர்கள் வேலை செய்த குறித்த தொழிற்சாலையின் மலசலகூடம் ஒன்றுக்கு பின் புறமாக, வாழை மரம் ஒன்றின் கீழ் சூட்சுமமாக புதைத்து வைக்கப்பட்டிருந்த இரு வாள்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே கொழும்பு தெமட்டகொடையில் அமைந்துள்ள சி.சி.டி. தலைமை அலுவலகத்துக்கு குறித்த சந்தேக நபர்களை அழைத்து வந்த பொலிஸ் குழு அவர்களிடம் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 72 மணி நேர தடுப்புக் காவலில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த இளைஞர்களின் கையடக்கத் தொலைபேசிகளை பொலிசார் சோதனைச் செய்துள்ள போது, அதில் பல்வேறு ஆவா குழுவுடன் தொடர்புடையோரின் புகைப்படங்கள் இருந்ததாக பொலிஸார் கூறினர்.

அத்துடன் அவர்கள் கனடாவில் உள்ள ஒருவருடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பிலிருந்துள்ள நிலையில், அது தொடர்பில் விஷேடமாக அவதானம் செலுத்தி விசாரித்து வருவதாகவும் விசாரணைகளை கையாளும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார். இந்நிலையில் குறித்த ஐவர் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

No comments:

Post a Comment