இந்திய சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு வரவழைத்து புதிய கொவிட் கொத்தணியை உருவாக்கவா அரசாங்கம் முயற்சிக்கிறது : நளிந்த ஜயதிஸ்ஸ - News View

Breaking

Thursday, September 2, 2021

இந்திய சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு வரவழைத்து புதிய கொவிட் கொத்தணியை உருவாக்கவா அரசாங்கம் முயற்சிக்கிறது : நளிந்த ஜயதிஸ்ஸ

(இராஜதுரை ஹஷான்)

தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள சி.1.2 என்ற வைரஸ் இலங்கையிலும் பரவலாம் என சுகாதார தரப்பினர் எதிர்வு கூறியுள்ளார்கள். இந்தியாவில் கொவிட் தொற்று மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இவ்வாறான நிலையில் இந்திய சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு வரவழைத்து புதியதொரு கொவிட் கொத்தணியை உருவாக்கவா அரசாங்கம் முயற்சிக்கிறது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் கடந்த ஒன்றரை வருட காலமாக முன்னெடுத்த செயற்பாடுகள் மற்றும் தீர்மானங்கள் குறித்து மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன. மக்கள் மத்தியில் உள்ள பிரதான 10 பிரதான கேள்விகளுக்கு ஜனாதிபதி மற்றும் கொவிட் ஒழிப்பு ஜனாதிபதி செயலணி பதிலளிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்திய பிரஜைகளை நாட்டுக்கு வரவழைத்து மீண்டும் புதியதொரு கொவிட் கொத்தணியை உருவாக்கவாக்கவா அரசாங்கம் முயற்சிக்கிறது.கொவிட் முதலாம் தாக்கத்தில் இருந்து இன்று வரை அரசாங்கம் மூர்க்கத்தனமாக செயற்படுகிறது.

2020 ஆம் ஆண்டு மார்ச் மாத காலப்பகுதியில் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கொவிட் வைரஸ் தொற்று தீவிரமாக பரவியது.இக்காலப்பகுதியில் அரசாங்கம் ஸ்ரீ லங்கன் விமான சேவை ஊடாக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் விளம்பரம் செய்தது. இலங்கை நாடு சுகாதாரமானது, கொவிட் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தி விட்டோம், தாராளமாக இலங்கைக்கு வரலாம் என அரசாங்கம் விளம்பரப்படுத்தியது.

முதலாம் தாக்கத்தை கட்டுப்படுத்திய பின்னர் உக்ரைன் நாட்டில் இருந்து சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டார்கள். இலங்கையில் கொவிட் பரவலடைகிறதா என்பதை ஆராயவே உக்ரைன் சுற்றுலா பயணிகளை வரவழைத்துள்ளோம் என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டார். இவர்களின் தவறான தீர்மானங்களினால் கொவிட் தாக்கம் தீவிரமடைந்தது.

இன்று இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு வரவழைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. பெரும்பாலான நாடுகள் சுற்றுலாத் துறையினை மீள ஆரம்பிக்கவும், பிற நாட்டவர்கள் தங்களின் நாடுகளுக்கு வரவும் இதுவரையில் அனுமதி வழங்கவில்லை.

ஒரு நாளைக்கு 200 பேர் மரணிக்கும் நிலையிலும், சி.1.2 என்ற வைரஸ் இலங்கையில் பரவலாம் என்று எதிர்வு கூறும் நிலையிலும் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு வரவழைக்க முயற்சிப்பது எந்தளவிற்கு முட்டாள்தனமானது.

கொவிட் தாக்கத்திற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானங்களினால் மக்கள் இன்று வாழ்வா, சாவா என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள தீர்மானங்களினால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள 10 பிரதான பிரச்சினைகளை அரசாங்கத்திடம் முன்வைப்போர். இதற்கு அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக பதிலளிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment