இன்னும் ஊரடங்கு நீடிப்பாம்! - News View

Breaking

Saturday, September 25, 2021

இன்னும் ஊரடங்கு நீடிப்பாம்!

உலகையே உலுக்கிப் போட்டுக் கொண்டிருக்கும் கொரோனா வைரசானது தன் விஸ்வரூபத்தைக் காட்டுவது போன்று இரண்டாம், மூன்றாம் அலைகளெனத் தன் உக்கிரத் தன்மையை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாடளாவிய ரீதியில் தினமும் நூற்றிற்கும் அதிகமான இறப்புக்களும் ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்களும் அதிகரித்த வண்ணமே தான் உள்ளனர். இதனால் திடீரென நாடு தழுவிய ஊரடங்கு ஒரு மாத காலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“நான் கொரோனாவால் சாக மாட்டேன் அதற்கு முன்னரே பட்டினியால் செத்து விடுவேன்". இந்தப் புலம்பலை பல முறை பல்வேறு ஆட்களிடமிருந்து கேட்டுவிட்டேன். திடீரென எவ்வித முன்னறிவிப்புக்களுமின்றி நாட்டை முடக்கி வெளியே செல்லத் தடை விதித்தால் அன்றாடக் கூலி வேலை செய்யும் மக்களின் நிலை தான் என்ன? ஒரு வேளை உணவிற்கு அவர்கள் என்ன செய்வார்கள்? கிடைக்கும் கால அவகாசத்தில் சேமிக்கக் கூடிய பொருட்களைச் சேமிப்பார்கள். அவை முடிந்தததன் பின்பு அவர்களின் நிலை?

அரசு சமுர்த்திப் பயனாளிகளுக்கு 5000 ரூபாய்க் கொடுப்பனவு ஆரம்ப கால ஊரடங்கு வேளையில் வழங்கியது. அதன் பின்பு 2000. அதுவும் பல குடும்பங்களுக்கு கிடைக்கவில்லை. இம்முறை மக்களுக்கு எவ்வுதவியுமில்லை. அரசிடம் கொடுக்கப் பணமுமில்லை.

இது இவ்வாறிருக்க மதுபான சாலைகளைத் திறக்க அனுமதி வழங்கியதன் பின்பு மக்கள் எவ்வாறு அலை திரண்டு முண்டியடித்துக் கொண்டு அவற்றை வாங்கிவிட வேண்டும் என்பதற்காக கூட்டம் கூட்டமாக இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும் குழுமியிருந்தனர். அப்போது கொரோனா வைரஸ் பரவாதா? இன்னும் ஓரிரண்டு நாட்களில் மதுபானசாலைக் கொத்தணி எத்தணை பேர் என்பதையும் வெளியிடுமளவிற்கு மக்கள் சமூக இடைவெளி பேணாது நின்றதையும் செய்திகள் வாயிலாக அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

ஒரு வயோதிபப் பெண் ஒருவரின் புலம்பல் “வீட்டில சாப்பாட்டுக்கு ஒண்டுமில்ல பிள்ளைகள் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட இல்லாம பட்டினில கிடக்குதுகள் இதுக்குள்ள இந்த மனுசன் கையில இருந்த 500 ரூபாவையும் பறிச்சிட்டு போய்டாரு சாராயம் குடிக்க. இப்ப இந்த சாராயக் கடையைத் திறக்கத் தான் வேணுமா”? என்ற புலம்பல் தான் அது. இவ்வாறு எத்தணை குடும்பங்களில் ஊரடங்கு பல பிரச்சினைகளை உண்டுபண்ணியுள்ளது என்றால் அது மிகையாகாது.

ஒரு பல்கலைக் கழக மாணவனின் புலம்பல், “சரியா இப்ப 6வருசமாச்சு இன்னும் கம்பஸ் முடியல என்ர வயசுப் பிள்ளைகள் எல்லாம் வேற வேற வேலைக்குப் போய்க்கொண்டிருக்காங்கள். நான் இன்னும் வீட்டில இருந்து அப்பாட உழைப்பில் சாப்பிட்டிட்டு இருக்கன் நான் நல்லா படிச்சு நல்ல வேலையில இருக்கோணும்னு கஸ்டப்பட்டு படிச்சன். ஆனால் இனி படிக்கிற ஆசையில்ல பொதுக் கலையோட படிப்ப முடிச்சிட்டு ஏதாச்சும் வேலைக்குப் போகப்போறன்”. எனும் புலம்பல்.

இவ்வாறு பாடசாலை மாணவர்கள், அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் என அனைவர் வாழ்விலும் ஏதோவோர் பிரச்சினையை இந்தக் கொரோனாவும் ஊரடங்கும் உண்டு பண்ணிக் கொண்டேயுள்ளது. நாடளாவிய ரீதியில் பெரிய பெரிய வியாபாரங்களைச் செய்யும் பலருக்கும் பேரிடியாக மாறிவிட்டது இந்தக் கொரோனா.

இது இவ்வாறிருப்பினும் இப்பொழுது அறிவிக்கப்பட்டிருப்பதும் ஓர் அரைச் சமூக முடக்கம் தான். பிரதான சாலைகளில் தான் நடமாட்டங்கள் பெருமளவிற்குக் குறைந்திருக்கின்றன. ஆனால் நாட்டின் உட்தெருக்களிலும் குக்கிராமங்களிலும் வாழ்க்கை வழமை போல் இயங்குகிறது. 

கொரோனாச் சந்தைகள் ஆங்காங்கே திறக்கப்பட்டுவிட்டன. வணிகர்கள் கடைகளின் முன்கதவை மூடி பின் கதவால் வியாபாரம் செய்கிறார்கள். அப்படியென்றால் வைரஸ் பெருஞ்சாலைகளின் வழியாகத் தான் வருமா? அல்லது பின் கதவின் வழியாகத்தான் வருமா? என்பது கேள்விக்குறி தான். 

இன்று அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. பல பொருட்களுக்குத் தட்டுப்பாடும் நிலவி வருகின்றது. “ஊரடங்கையும் போட்டுவிட்டு விலைகளையும் அதிகரித்தால் மண்ணையும் கல்லையுமா தின்பது” என்பது பல மக்களின் ஆதங்கக் கருத்தாகவேயுள்ளது. 

எனவே இந்தப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டுமாயின் மக்கள் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து சிறிது காலம் வீடுகளுக்குள் முடங்குவது அவசியம். அது மாத்திரமின்றி இருக்கும் நிலத்தையும் நீரையும் பயன்படுத்தி தற்சார்புப் பொருளாதாரத்தை ஓரளவிற்கேனும் ஒவ்வொருவரும் நிலைநிறுத்த வேண்டும். இதனால் அன்றாடப் பொருளாதாரச் செலவுகளை ஓரளவிற்கேனும் ஈடு செய்ய முடிய்ம்.

V. Anitha
Department of Media Studies,
University of jaffna,

No comments:

Post a Comment