ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் இருக்கும் தலிபான்கள், ஐ.நா சபையில் பேச முறையாக அனுமதி கேட்டு கடந்த திங்கட்கிழமை கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்கள்.
தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி இதை வலியுறுத்தி ஐ.நாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைத்துள்ள தலிபான்கள் தங்களது அரசை மற்ற நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் தலிபான்கள் அரசில் ஒரு பெண் கூட இடம்பெறவில்லை. மேலும் அமைச்சரவையில் சில பயங்கரவாதிகளும் இடம் பெற்றுள்ளனர். இதனால் தலிபான்கள் அரசை உலக நாடுகள் ஏற்க மறுத்து அங்கீகாரம் அளிக்கவில்லை.
ஆனாலும் சர்வதேச அங்கீகாரத்தை பெற தலிபான்கள் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ஐ.நா. சபை கூட்டத்தில் பேச அனுமதிக்க வேண்டும் என்று தலிபான்கள் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
நியூயார்க் நகரத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் பேச தலிபான் அனுமதி கோரியுள்ளது.
ஐ.நா. சபையில் உலக தலைவர்கள் பங்கேற்கும் பொது விவாதம் நேற்று முதல் தொடங்கி உள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் சார்பில் தாங்கள் பங்கேற்று பேச அனுமதி அளிக்கும்படி தலிபான்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக தலிபான் குழுவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதியுள்ள கடிதத்தை, ஐ.நாவின் கமிட்டி ஒன்று பரிசீலனை செய்து அனுமதிப்பது குறித்து தீர்மானிப்பார்கள்.
அக்கமிட்டியில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உட்பட ஒன்பது உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என ஐ.நா சபையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால் இக்குழு, அடுத்த திங்கட்கிழமை (செப்டம்பர் 27) ஐ.நா சபை கூட்டங்கள் நிறைவடையும் வரை சந்திப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.
எனவே அதுவரை ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகள்படி குலாம் இசக்சாயே ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நாவின் தூதராக தொடர்வார். குலாம் இசக்சாய் செப்டம்பர் 27ஆம் திகதி ஐ.நாவில் ஒரு உரையாற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் தலிபான்களோ, அவரின் நோக்கம் ஆப்கானிஸ்தானை பிரதிபலிக்காது என கூறியுள்ளனர்.
மேலும், தலிபான் சுஹைல் ஷாஹீனை ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா தூதராகவும் பரிந்துரைத்துள்ளது. முன்னாள் ஆப்கானிஸ்தான் அரசின் பிரதிநிதி, ஆப்கனின் உண்மையான பிரதிநிதி அல்ல எனவும் தலிபான்கள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment