20 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளவும் : 24 மணி நேரத்தில் 65 தொற்று, 03 பேர் மரணம் - மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 22, 2021

20 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளவும் : 24 மணி நேரத்தில் 65 தொற்று, 03 பேர் மரணம் - மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 65 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 03 பேர் மரணமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேரும், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேரும், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேரும், வவுணதீவு, ஆரையம்பதி பகுதிகளில் தலா 05 பேரும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேரும், பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும், ஏறாவூர், கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 312 பேர் கொரனா தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன் கடந்த வாரத்தில் 728 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 24 பேர் மரணமடைந்துள்ளனர்.

தடுப்பூசியை பொறுத்த வரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 02 இலட்சத்து 85 ஆயிரம் பேருக்கு முதலாவது தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதுடன் இரண்டாவது தடுப்பூசி 2 இலட்சத்து 41 ஆயிரம் பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 20வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அவரவர் பகுதிகளில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள அட்டவணையின் அடிப்படையில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நான்கு ஆதார வைத்தியசாலைகள் ஊடாகவும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

களுவாஞ்சிகுடி, காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை ஆகிய ஆதார வைத்திசாலைகள் ஊடாக இந்த தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அனைவரும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதன் மூலமாக கொரோனா தொற்றினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரமுடியும். அத்துடன் வைத்தியசாலை அனுமதிகளையும் குறைத்துக் கொள்ள முடியும்.

முடக்கத்தினை பயன்படுத்தி அனைவரும் வீட்டில் இருப்பதன் மூலம் கொரோனா தொற்றினை மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய தொற்றாளர்களின் தொகை குறைவடைந்துவருவதுடன் மரணங்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துவருகின்றது. இதனை தொடர்ந்து பேணுவதற்காக மக்களின் சமூக பொறுப்புணர்வு மிகவும் அவசியமானது.

மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்

No comments:

Post a Comment