(எம்.மனோசித்ரா)
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் மற்றும் கட்சி என்ற ரீதியில் பிரத்தியேகமான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். இவ்விடயம் தொடர்பில் அமைச்சரவையிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை இணையவழியூடாக நடைபெற்ற போது இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை விவகாரம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய இதுவரையில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 23 பேரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமைச்சரவையில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது நீதி அமைச்சர் அலி சப்ரியினால் ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் இது தொடர்பில் விசாராணை குழுவொன்றை துரிதமாக செயற்படும் வகையில் நியமிப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அரசாங்கத்தின் வெற்றி தங்கியிருப்பது மக்களின் நம்பிக்கையின் அடிப்படையிலாகும். எனவே மக்களின் நம்பிக்கையை பேணுவது மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் எமது பொறுப்பாகும். அரசாங்கம் இது தொடர்பில் முறையாக செயற்படும் என்று நான் நம்புகின்றேன்.
அண்மையில் ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு ஆளுந்தரப்பின் மொனராகலை பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வாறான தீர்ப்புக்கள் அத்தியாவசியமானவையாகும். இந்நிலையில் லொஹான் ரத்வத்தை விவகாரம் தொடர்பில் கட்சி பிரத்தியேகமாகவும் அரசாங்கம் பிரத்தியேகமாகவும் செயற்படும் என்றார்.
No comments:
Post a Comment