(இராஜதுரை ஹஷான்)
இந்திய சுற்றுலா பயணிகள் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது. கொவிட் தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுக் கொள்ளாத இந்திய சுற்றுலா பயணிகளுக்கு வீசா வழங்கப்படவில்லை. சகல சுற்றுலா பிரயாணிகளும் சுகாதார அதிகாரிகளினால் கண்காணிக்கப்படுகின்றனர் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சுற்றுலா சபை முகவர்களினால் அழைத்துச் செல்லப்படுவதாகவும், பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை யார் முன்னெடுக்கிறார்கள் என்பதில் தெளிவற்ற தன்மை காணப்படுவதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் குறிப்பிட்ட விடயத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் சுற்றுலாத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், சுகாதார தரப்பினரது புதிய வழிகாட்டலுக்கு அமையவே சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்திய சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருவதற்கு ஆரம்பத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் பின்னர் சுகாதார தரப்பினரது அனுமதியுடன் அவர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய சுற்றுலா பிரயாணிகளுக்கு வீசா வழங்குவதற்கு முன்னர் அவர்கள் கொவிட்-19 தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுக் கொண்டுள்ளார்களா என்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாத இந்திய சுற்றுலா பயணிகளுக்கு வீசா வழங்கப்படவில்லை. சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருவதற்கு முன்னரும், நாட்டுக்கு வந்ததன் பின்னரும் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்கிறார்கள்.
சுகாதார தரப்பினரால் தெரிவு செய்யப்பட்ட ஹோட்டல்களில் இந்திய மற்றும் பிற நாட்டு சுற்றுலா பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
சுற்றுலா பயணிகளை சுகாதார சேவை தரப்பினர் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். இவ்விடயம் குறித்து பொது சுகாதார பரிசோதகர் சங்கம் அறியாவிட்டால் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.
சுற்றுலா சேவை கைத்தொழில் மீள ஆரம்பிக்கப்பட்டதால்தான் டெல்டா வைரஸ் தொற்று நாட்டுக்குள் உள்நுழைந்துள்ளது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த இலங்கை பிரஜை ஊடாகத்தான் டெல்டா தொற்று பரவலடைந்ததாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதுவரையில் நாட்டுக்குள் வந்த 40,000 சுற்றுலா பயணிகளில் 270 பேர் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளினால்த்தான் கொவிட் வைரஸ் தொற்று தீவிரமடைந்தது என்று குறிப்பிடும் கருத்து ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
No comments:
Post a Comment