கொழும்பு துறைமுக காணியை சீனாவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானம் : பாரிய மோசடியென்கிறது அகில இலங்கை துறைமுக சேவையாளர் சங்கம் - News View

Breaking

Sunday, September 5, 2021

கொழும்பு துறைமுக காணியை சீனாவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானம் : பாரிய மோசடியென்கிறது அகில இலங்கை துறைமுக சேவையாளர் சங்கம்

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான பல கோடி ரூபா பெறுமதியான 13 ஹேக்கர் காணியை சேவை விநியோக மத்திய நிலையம் (கொள்கலன் தொகுதி) நிர்மாணிப்பதற்காக முறையான விலைமனுக் கோரல் ஏதுமில்லாமல் கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையத்தை நிர்வகிக்கும் சி.ஐ.சி.டி சீன நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை பாரியதொரு மோசடியாகும் என அகில இலங்கை துறைமுக சேவையாளர் சங்கத்தின் தலைவர் நிரோஷன் கொரகாஹேன்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், துறைமுகத்திற்கு சொந்தமான 13 ஹேக்கர் காணியையும், துறைமுக அதிகார சபையினரால் முன்னெடுக்கப்பட்ட சேவையையும் சீனாவின் சி.ஐ.சி.டி நிறுவனத்திற்கு வழங்கும் வகையிலான யோசனையை துறைமுகம் மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி இடம் பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத்தை காட்டிலும் வணிக நடவடிக்கைகளுக்கு மிகவும் பெறுமதி வாய்ந்த 13 ஹேக்கர் நிலப்பரப்பு சீன நிறுவனத்திற்கு ஒரு மாதத்திற்கு ஒரு ஹேக்கருக்கு எட்டு இலட்சத்து 50 ஆயிரம் என்ற குறைந்த விலைக்கு வழங்கப்படவுள்ளது.

தமது சங்கத்தினரது மதிப்பீட்டுக்கமைய இப்பகுதியில் உள்ள காணியின் பெறுமதி 30 கோடி ரூபா வரை மதிப்புடையது.இவ்வாறான நிலையில் இத்தொகை 8 இலட்சமாக குறைவடைந்துள்ளமை இடைத்தரகர்களினால் இடம் பெறவுள்ள மோசடியை வெளிப்படுத்தியுள்ளது.

துறைமுகத்திற்கு சொந்தமாக காணி 2005 ஆம் ஆண்டு டோக்கியோ சிமெந்தி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இக்காணியில் 1 ஹேக்கர் மற்றும்11 பேச்சர்ஸ் காணிக்கு குறித்த நிறுவனம் ஒரு மாதத்திற்கு 30 இலட்சம் ரூபாவை செலுத்துகிறது. இதனுடாக துறைமுகம் 925 மில்லியன் நிதி இலாபமடைந்துள்ளது.

இச்செயற்திட்டத்தின் ஊடாக துறைமுக அதிகார சபையால் முன்னெடுக்கப்படும் சேவைகள் சீனாவின் சி.ஐ.சி. டி நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ளது.

இவ்விடயம் குறித்து எவ்வித சட்ட ஆலோசனைகளும் முற்கூட்டியதாக பெறப்படவில்லை. 35 வருட காலத்திற்கு 13 ஹேக்கர் நிலப்பரப்பு வழங்கப்படுவதால் இலங்கைக்கு எவ்வித பயனும் கிடைக்கப் பெறாது.

இச்செயற்திட்டம் செயற்படுத்தப்பட்டால் துறைமுகத்தில் சேவையாற்றும் 650 உள்ளுர் தொழிலாளர்கள் தொழில் வாய்ப்புக்களை இழப்பார்கள். அத்துடன் துறைமுகம் நட்டமடையும் நிலையினை எதிர்க் கொள்ளும்.

இவ்விடயங்களை சுட்டிக்காட்டி ஜனாதிபதிக்கு கடந்த மாதம் 26 ஆம் திகதி கடிதம் அனுப்பி வைத்துளோம். ஆனால் இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கப் பெறவில்லை;.கடந்த மாதம் 19 ஆம் திகதி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment