இலண்டன் பல்கலையில் தமிழ்த்துறையை மீளுருவாக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 15, 2021

இலண்டன் பல்கலையில் தமிழ்த்துறையை மீளுருவாக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுப்பு

(எம்.பி.எம்.றின்ஸான்)

இலண்டன் பல்கலைக்கழகத்தில் SOAS மூலம் தமிழ் பல்கலைப்படிப்புகள் நடாத்திட தமிழ்த்துறையை மீளுருவாக்கம் செய்ய வேண்டுமென தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், கோரிக்கை விடுக்க, கடந்த திங்கட்கிழமை (13) காலை தீர்மானம் நிறைவேற்றி, அன்றையதினம் மாலை கோரிக்கை அடங்கிய மகஜரும் கையளிக்கப்பட்டது.

ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை (Tamil Studies UK) முக்கியஸ்தர்களின் ஏற்பாட்டில், ஊடகத்துறையினரை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சந்தித்துப் பேசிய இந்நிகழ்வில், ஆபிரகாம் பண்டிதரின் கொள்ளுப்பேத்தியும், ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் துணைப்பொருளாளருமான முனைவர். பொன்னம்மாள், முனைவர். கனகலட்சுமி, முனைவர் பா. இறையரசன், தமிழ் பாரதன், திரை இயக்குநர் ஹரி உத்ரா, கவிஞர் மறத்தமிழ் வேந்தன், இதழாளர் ரியாஸ், சிரேஷ்ட ஊடகவியலாளர் இரவி குணவதி மைந்தன் முதலியோர் கலந்து கொண்டனர்.

இலண்டன் பல்கலைக் கழகத்தில் தென்கிழக்காசிய ஆப்பிரிக்கப் பள்ளியில் நடைபெற்று வந்த தமிழ்த்துறை, 1916 முதல் 1996 வரை இயங்கி, நிதிப் பற்றாக்குறையால் மூடப்பட்டது. இலண்டன் பல்கலைக்கழக தமிழ்த்துறையை முழுதாக மீளுருவாக்கம் செய்ய 100 கோடி ரூபாய் தேவைப்படுகின்ற நிலையில், தமிழக அரசு குறைந்தது ரூபா 25 கோடியாவது நிதி நல்க வேண்டும் என்று முனைவர் பொன்னம்மாள் கேட்டுக்கொண்டார். 

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஏற்கனவே இலண்டன் பல்கலைக்கழகம் SOAS க்கு சென்றுள்ளார் என்பதும், வங்காள மொழி வளர்ச்சிக்கு ரூபா 5 கோடி நிதி உதவி வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜி.யூ.போப், 1885 இல் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்றுக் கொடுத்துள்ளார். தமிழகம் வந்த ஜியூ போப் மாநிலக்கல்லூரியில் பணியாற்றியதுடன் திருக்குறள், திருவாசகம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தென் ஆப்பிரிக்கத் தமிழர்கள் அப்போது நிதி உதவி வழங்கினர்.

இப்போது உலகத்தமிழர்கள் ரூபா ஒன்றரை கோடி நிதி திரட்டி உதவியுள்ளனர். இந்த நிலையில், தமிழக அரசும் உதவி புரிந்து, மூடப்பட்ட தமிழ்த்துறையை மீளுருவாக்கம் செய்ய வேண்டுமென முனைவர் பா.இறையரசன் கூறினார்.

இலண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் ஓலைச்சுவடிகள் பற்றி ஊடகவியலாளர்கள் வினா எழுப்பினர். அவை தமிழ்த்துறை ஆரம்பிக்கப்பட்டவுடன் ஆய்வு செய்யப்படும் என்று பதிலளிக்கப்பட்டது.

அடிப்படைக் கல்வி முதல் ஆய்வுப் படிப்பு வரை அனைவரும் படிக்கவும் உலகெங்கும் தமிழைப் பரப்ப வேண்டும் எனும் ஒரே நோக்கோடு, தமிழ்த்துறை அமைக்கப் படுகிறது. மேலும், தமிழில் உயர்கல்வி படிக்க வேண்டுமென்றால், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் தான் வரவேண்டும். தமிழ்த் துறை அமைத்தால் அங்கேயே படித்துக் கொள்ளும் சூழல் ஏற்படும் என்பதைக் குறித்து முனைவர் கனகலட்சுமி பேசினார்.

கடந்த திங்கட்கிழமை (13) காலை ஊடகவியலாளர் சந்திப்பு நடந்ததையடுத்து, அன்று மாலை 7.30 மணியளவில் முனைவர் பொன்னம்மாள் அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை மீளுருவாக்கம் செய்வதற்கான கோரிக்கைக் கடிதத்தைக் கையளித்தார்.

No comments:

Post a Comment