திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன் - News View

Breaking

Monday, September 13, 2021

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன்

தமிழகம் - திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தம்மை விடுவிக்க கோரி நடத்தி வரும் போராட்டம் 32 ஆம் நாளைக் கடந்து செல்கின்ற நிலையில், ´திருச்சி சிறப்பு முகாமில் நடைபெறும் இலங்கை தமிழர்களின் போராட்டம் அவர்கள் அனைவரும் உயிர் விடும் நிலைக்கு சென்றுள்ளது´ என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தம்மை விடுவிக்க கோரி நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக இன்று (13) ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அவர்களின் போராட்டம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் அவர்கள் அனைவரும் துரிதமாக விடுதலை செய்யப்பட வேண்டும், நீதிமன்றத்தில் எந்தவித வழக்குகளும் இல்லாதவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

வழக்கு உள்ளவர்களின் வழக்குகள் அனைத்திற்கும் அவர்கள் தீர்ப்பை பெறும் காலம் உடனடியாக துரிதப்படுத்தப்பட வேண்டும். அத்தோடு குறிப்பிட்ட சிலர் இலங்கையில் இருந்து எல்லை தெரியாமல் இந்தியக் கடல் எல்லைக்குள் சென்றவர்கள் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

அந்த வகையில் ஏனையவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் அந்த நடவடிக்கை விரைவாக எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் அவர்களுடைய கோரிக்கைகளை மனதில் கொண்டு செயற்பட்டு, அவர்களை அவர்களது குடும்பங்களுடன் இணைக்க அரசு முன்வர வேண்டும்.

அதேவேளை சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளை யாரும் செய்யக்கூடாது, இனிவரும் காலங்களில் இந்திய சட்டங்களுக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும்.

மேலும் திருச்சி சிறப்பு முகாமில் இருப்பவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கையாக உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் நிருபர் லெம்பட்

No comments:

Post a Comment