9/11 தாக்குதல் குறித்து சவூதி அரசுக்கு முன்பே தெரியுமா? எஃப்.பி.ஐ ஆவணம் சொல்வதென்ன? - News View

Breaking

Sunday, September 12, 2021

9/11 தாக்குதல் குறித்து சவூதி அரசுக்கு முன்பே தெரியுமா? எஃப்.பி.ஐ ஆவணம் சொல்வதென்ன?

அமெரிக்காவின் உள்நாட்டு உளவு அமைப்பான எஃப்.பி.ஐ 9/11 தாக்குதல் தொடர்பான சில ரகசிய ஆவணங்களை ரகசியமில்லா ஆவணங்களாக வகைப்படுத்தி வெளியிட்டுள்ளது.

அந்த ஆவணங்கள் அமெரிக்காவில் வாழ்ந்த சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்களுக்கும், 9/11 தாக்குதல் நடத்தியவர்களுக்கும் தொடர்பு இருக்கின்றதா என்பது பற்றிய விசாரணை விவரங்களைக் கொண்டதாக இருக்கிறது.

சவூதி அரேபிய அதிகாரிகளுக்கு 9/11 தாக்குதல் நடக்கப் போவது குறித்து முன்பே தெரியும் எனவும், அவர்கள் தாக்குதலைத் தடுக்க முயலவில்லை எனவும், இந்த தாக்குதல் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் எனவும் 9/11 தாக்குதலில் இறந்தவர்களின் பலரது உறவினர்களும் அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

நீண்ட கால கோரிக்கைக்குப் பிறகு இந்த ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது, ஆனால், 9/11 தாக்குதலுக்கும் சவூதி அரசுக்கும் தொடர்பு இருப்பதாக இந்த ஆவணங்களில் எந்தவித ஆதாரங்களும் இல்லை.

9/11 தாக்குதல் நடத்திய 19 பேரில் 15 பேர் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள்.

அமெரிக்கா ரகசிய ஆவணங்கள் வெளியிட்டதை வாஷிங்டனில் இருக்கும் சவூதி அரேபியாவின் தூதரகம் வரவேற்று இருக்கிறது. 2001 இல் நடந்த அந்த கொடூர தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மீண்டும் ஒருமுறை அழுத்தமாக மறுத்திருக்கிறது சவூதி தரப்பு.

இதனைத் தொடர்ந்து இன்னும் பல ஆவணங்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

16 பக்கங்களைக் கொண்ட எஃப்.பி.ஐயின் இந்த ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டாலும், பல இடங்கள் மறைக்கப்பட்டு இருக்கின்றன. தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆவணங்கள் ஒரு ரகசிய நபரிடம் எடுக்கப்பட்ட நேர்காணலைப் பற்றியது. அவரின் விவரங்கள் இப்போதும் ரகசியமாகவே வைக்கப்பட்டு இருக்கின்றன.

9/11 தாக்குதலில் பங்கெடுத்த நவாஃப் அல் ஹஸ்மி மற்றும் காலித் அல் மிதார் ஆகிய இருவரும் தொடர்பு கொண்ட பல்வேறு சவூதி அரேபிய நாட்டவர் தொடர்பாக இந்த ஆவணம் விளக்குகிறது.

மேலே குறிப்பிட்ட இருவருக்கும், லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் இருக்கும் ராஜா ஃபஹத் மசூதியைச் சேர்ந்த இமாம் ஃபஹத் அல் துமைரேவுக்கு தொடர்பு இருந்ததாக கூறுகிறது இந்த எஃப்.பி.ஐ ஆவணம்.

9/11 தாக்குதல் நடத்தப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பே இமாம் துமைரே அமெரிக்காவை விட்டு வெளியேறி விட்டார்.

ஜோர்ஜ் புஷ், பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் என பல அமெரிக்க அதிபர்கள், பாதுகாப்பு பிரச்சனைகளைக் காரணம் காட்டி 9/11 தாக்குதல் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட மறுத்தனர். ஜோ பைடன் நிர்வாகம் தற்போது துணிந்து ரகசிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவும், சவூதி அரேபியாவும் தொடர்ந்து கூட்டாளிகளாக இருந்து வருகிறார்கள். அவ்வப்போது சில விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் பிரச்சனைகள் எழுவதும் உண்டு.

கடந்த காலங்களில் சவூதி அரேபியா உடனான உறவை ட்ரம்ப் வலுப்படுத்தினார். ஜோ பைடன் கஷோக்ஜி கொலை விவகாரத்தில் சவூதியை கடுமையாக விமர்சித்தார். ஆனால் தற்போது பைடன் கூட சவூதி உடனான உறவவின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு மென்மையான போக்கை கடைபிடிக்கிறார் என பிபிசியின் பாதுகாப்பு விவகார செய்தியாளர் ஃப்ராங்க் கார்ட்னர் கூறுகிறார்.

No comments:

Post a Comment