இலங்கையில் இதுவரை 5,500 கர்ப்பிணிகளுக்கு கொரோனா, 40 பேர் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 8, 2021

இலங்கையில் இதுவரை 5,500 கர்ப்பிணிகளுக்கு கொரோனா, 40 பேர் உயிரிழப்பு

(எம்.மனோசித்ரா)

நாட்டில் இதுவரையில் 5,500 கர்ப்பிணிகளுக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்பநல சுகாதார பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.

கர்ப்பிணிகள் கொவிட் தொற்றுக்குள்ளாகும் வீதம் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட் தொற்றுக்கு உள்ளாகாமல் பாதுகாத்துக் கொள்வதில் முக்கியத்துவமுடையது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதாகும். தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதன் மூலம் கொவிட் தொற்றுக்கு உள்ளானாலும், தீவிர நிலைமைக்கு செல்வதிலிருந்து பாதுகாப்பு பெற முடியும். இதன் மூலம் மரணங்களையும் குறைத்துக் கொள்ள முடியும்.

எனவே பிரதேசங்களிலுள்ள சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் ஊடாகவும் குடும்ப நல சுகாதார அதிகாரியிடம் தொடர்பு கொண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். அதேபோன்று தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட பின்னரும் அடிப்படை சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

வீடுகளிலிருந்து வெளியில் செல்லும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசங்களை அணிய வேண்டும். எனினும் இயன்றவரை வீடுகளிலிருந்து வெளி செல்வதை தவிர்த்துக் கொள்வதே சிறந்தது. பொது போக்கு வரத்துக்களை தவிர்த்துக் கொள்வதும் பாதுகாப்பானதாகும்.

பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களுக்குச் செல்ல வேண்டாம். குறிப்பாக தொற்றாளர் அல்லது தொற்று அறிகுறிகளை உடையவர்கள் இருக்கும் இடங்களுக்குச் செல்வதை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment