செப்டம்பர் 11 தாக்குதல் அமெரிக்காவின் நாடகமா? யூதர்களின் சதியா? விடுபடாத புதிர்கள் - News View

Breaking

Friday, September 10, 2021

செப்டம்பர் 11 தாக்குதல் அமெரிக்காவின் நாடகமா? யூதர்களின் சதியா? விடுபடாத புதிர்கள்

19 பயங்கரவாதிகள் நான்கு விமானங்களைக் கடத்தி அமெரிக்காவின் முக்கிய அடையாளச் சின்னங்களைக் குறி வைத்துத் தாக்கினார்கள். பயணிகள், விமானிகள், பணியாளர்கள், தாக்கப்பட்ட கட்டடத்தில் இருந்தவர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள்.

இவையெல்லாம் அமெரிக்காவின் விசாரணை ஆணையத்தின் அறிக்கையிலும் பல்வேறு புலனாய்வுகளிலும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.

ஆனால் எல்லோரும் இவற்றை நம்புவதில்லை. நடந்து முடிந்து 20 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்கூட இது அமெரிக்காவே திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம் என்று ஒரு சாரார் கூறி வருகிறார்கள். தாக்குதல் நடத்தப்பட்ட நாளில் இருந்தே அதன் மீதான சந்தேகமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உண்மையைச் சொல்லப் போனால் அந்த சந்தேகம் வளர்ந்திருக்கிறது.

அல்-கொய்தா இயக்கத்துடன் அமெரிக்காவின் தலைமை கூட்டுச் சேர்ந்து இப்படியொரு சதியை அரங்கேற்றியதாகவும் அவர்கள் சந்தேகிக்கிறார்கள். செப்டம்பர் 11 உண்மை இயக்கம் என்பது உள்ளிட்ட பெயர்களில் இவர்கள் சில குழுக்களாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.

அறிவியலாளர்கள், கட்டுமானப் பொறியாளர்கள், தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் என பல தரப்பினர் இதுபோன்ற குழுக்களில் இயங்குகிறார்கள். ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பெரும் போரை நடத்துவதற்காக இதுபோன்ற தாக்குதல்களை அமெரிக்கா திட்டமிட்டு நடத்தியிருக்கலாம் என்று கூறுவோரும் உள்ளனர்.

பொதுவாக மூன்று வகைகளில் இந்தச் சந்தேகம் வைக்கப்படுகிறது. தாக்குதல் நடக்கப்போகிறது என்று தெரிந்தும் அதைத் தடுக்காமல் விட்டதாக ஒரு தரப்பினர் கருதுகிறார்கள். சிலர் இதை முழுமையாக அமெரிக்காவின் உள்வேலை என்றும் மேலும் சிலர் ஏதோ தவறு மட்டும் நடந்திருக்கிறது என்றும் கூறி வருகிறார்கள்.
மூன்றாவது கோபுரம் இடிந்தது ஏன்?
அதிகமாக அறியப்படாத வர்த்தக மையத்தின் 7ஆம் எண் கோபுரம் இடிந்ததை பலர் சந்தேகித்தனர். இரண்டு கோபுரங்கள் மீது விமானங்கள் மோதிய நிலையில், அதற்குத் தொடர்பில்லாத மற்றொரு கோபுரம் ஏழு மணி நேரத்துக்குப் பிறகு ஏன் இடிந்தது என்று இவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். வெடி குண்டுகள் மூலம் இந்தக் கட்டடம் தகர்க்கப்பட்டிருக்கலாம் என்று இவர்கள் கூறுகிறார்கள்.

ஏழாம் எண் கட்டடம் இடிவதற்கு முன்பே பிபிசி செய்தியாளர் ஜேன் ஸ்டேன்லி, அந்தக் கட்டடம் இடிந்து விட்டதாக நேரலையில் கூறியதை பலர் ஆதாரமாகப் பயன்படுத்தினார்கள்.

ஆனால் இது தொடர்பாக ஆய்வு செய்த அமெரிக்காவின் தேசிய தர மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் (NIST) விஞ்ஞானிகள் வேறு மாதிரியான விளக்கத்தை அளித்தார்கள். அருகேயுள்ள வடக்குக் கோபுரக் கட்டடம் இடிந்து விழுந்ததை தொடர்ந்து தீ எரிந்து கொண்டிருந்ததால் அந்த வெப்பம் பரவி, ஏழாம் எண் கோபுரத்தைத் தாங்கும் இரும்புக் கம்பிகள் உருகி கட்டடம் இடிந்ததாக அவர்கள் கூறினார்கள்.

இரட்டைக் கோபுரங்கள் முழுமையாக இடிந்து விழுந்ததற்கும்கூட இதேபோன்ற விளக்கமே அளிக்கப்பட்டது.
விமானங்கள் இடைமறிக்கப்படாதது ஏன்?
உலகின் மிகவும் வலிமையான விமானப் படையை வைத்திருக்கும் அமெரிக்கா, உடனடியாக விமானங்களை இடை மறித்துத் தடுத்து நிறுத்த முடியாமல் போனது ஏன் என்ற சந்தேகத்தை சிலர் எழுப்புகிறார்கள். அப்போது துணை அதிபராக இருந்து டிக் சீனி, விமானங்களை இடை மறிக்கக் கூடாது என்று உத்தரவிட்டதாகவும் அவர்கள் வாதிடுகிறார்கள்.

ஆனால் அமெரிக்க நிர்வாகம் இதை மறுத்திருக்கிறது. விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கான டிரான்ஸ்பான்டர்கள் அணைக்கப்பட்ட நிலையில் இடைமறிப்பது சாத்தியமில்லை என்று நிர்வாகம் கூறியிருக்கிறது.

எப்போதும் உஷார் நிலையில் இருக்கும் பென்டகன் கட்டடம் கடத்தப்பட்ட விமானத்தால் அல்ல, ஏவுகணை கொண்டே தாக்கப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. ஆனால் அந்த இடத்தில் மீட்கப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 77 விமானத்தின் கறுப்புப் பெட்டியையும், உயிரிழந்தவர்களின் உடல் எச்சங்களையும் ஆதாரமாகக் காட்டுகிறது அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. அமைப்பு.

இவற்றைப் போலவே, கடத்தப்பட்ட நான்காவது விமானம் விழுந்த இடம் ஏன் மிகவும் சிறியதாக இருக்கிறது, அந்த இடத்தில் ஏன் விமானத்தின் பாகங்கள் தென்படவில்லை என்றெல்லாம்கூட சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. இந்த விமானம் வேறொரு இடத்தில் பத்திரமாகத் தரையிறங்கியதாக நம்புவோரும் இருக்கிறார்கள்.

யூதர்கள் கொல்லப்படவில்லையா?
அமெரிக்கா முழுவதும் நிறைந்திருக்கும் யூதர்கள் ஒருவர் கூட இந்தத் தாக்குதலில் கொல்லப்படவில்லை என்று செப்டம்பர் 11 தாக்குதல் குறித்த சந்தேகம் எழுப்பும் சிலர் கூறுகிறார்கள். உலக வர்த்தக மையத்தில் பணியாற்றிய சுமார் 4 ஆயிரம் யூதர்கள் அன்றையதினம் பணிக்கு வர வேண்டாம் என முன்னரே எச்சரிக்கப்பட்டிருந்ததாகவும் இவர்கள் கூறுகிறார்கள்.

தங்களது பிராந்திய ஆதாயத்துக்காக உலக அரசியலை மறைமுகமாக இயக்கும் இஸ்ரேலியர்கள் சிலர் சதி செய்து இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் அதில் உண்மையில்லை என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இரட்டைக் கோபுரத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 119 பேர் யூதர்கள் என உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இவற்றைப் போன்றே இன்னும் பல செப்டம்பர் 11 தாக்குதலின் மீதான பல சந்தேகக் கூற்றுகள் கூறப்பட்டு வருகின்றன. ஆனால் பெரும்பாலானவற்றுக்கு உரிய ஆதாரங்கள் அளிக்கப்படவில்லை.

அந்தத் தாக்குதலுக்குப் பிறகு அதிபர் புஷ் இன்னொரு தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார். பல நாடுகளுக்குள் புகுந்து அமெரிக்கா போரை நடத்தியிருக்கிறது. பின் லேடன் கொல்லப்பட்டு விட்டார்.

தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களிலெல்லாம் அமெரிக்காவின் மன உறுதியையும் ஒற்றுமையையும் காட்டும் வகையில் புதிய கட்டடங்களும் நினைவுச் சின்னங்களும் எழுப்பப்பட்டு விட்டன. ஆனால், அவற்றுக்கு அடியில் சில ரகசியங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று பலர் இன்னமும் நம்புகிறார்கள். 

No comments:

Post a Comment