இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆலோசனை வழங்கியதன் பேரில் மத்திய மாகாணத்தில் சிறுவர் பாதுகாப்பு, பாடசாலைகளை விட்டு இடைவிலகும் மாணவர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்களாக அமர்த்தப்படும் சிறுவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கான விஷேட குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே தெரிவித்தார்.
குற்றம் இழைப்போருக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கத் தயங்காது என்றும் ஆளுநர் தெரிவித்தார். கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்ற போது அதன் இணைத்தலைவரும் மத்திய மாகாண ஆளுநருமான லலித் யூ கமகே இந்த விடயங்களைத் தெரிவித்தார்.
கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அதன் இணைத் தலைவர்களான மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே மற்றும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வசந்தா யாப்பா பண்டார ஆகியோர் தலைமையில் கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.
கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ரஞ்சித் பண்டார, எம்.எச் ஏ ஹலீம், குணதிலக்க ராகபக்ஷ, ஆளுநரின் செயலாளர் அன்டன் திலகரத்னே, மாகாண செயலாளர் உபாலி ரணவக்க, கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னக்கோன், இராணுவ உயர் அதிகாரிகள், உள்ளூராட்சி சபைத் தலைவர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள பிரதானிகள் என பலர் கலந்து கொண்டனர்.
கண்டி மாவட்டத்தில் தற்போது நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதுடன், சிறுவர்களின்களின் உரிமைகளைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அனைத்துக் கட்சிகளின் பங்களிப்புடன் சிறப்புக் கூட்டம் அடுத்த சில நாட்களில் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.
ஆளுநர் லலித் யூ கமகே அங்கு உரையாற்றுகையில், “ஒரு பிரச்சினை எழுந்த பின்னர் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அது நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்” என்று வலியுறுத்தினார்.
மேலும் பிரஜாசக்தி அபிவிருத்தி செயல் திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு அரச திணைக்களங்கள் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டுமென்றும் அவர் பணித்தார்.
இந்த அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது கண்டி மாவட்டத்தின் அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும் துறைசார் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் பிரஜாசக்தி அபிவிருத்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி, சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர்களை வேலைக்கு அமர்தல் தொடர்பாக மத்திய மாகாண ரீதியில் விசேட குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
“சிறுமி ஹிஷாலினிக்கு ஏற்பட்ட கதி போன்று எதிர்காலத்தில் வேறொரு சிறுமிக்கோ சிறுவனுக்கோ ஏற்படாத வண்ணம் பாதுகாப்பது எமது கடமை. எனவே இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் பிரஜாசக்தி அபிவிருத்தி செயற் திட்டத்தின் 'சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல்' வேலைத் திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்” என்றார்.
ஹட்டனில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி கல்லூரி போன்று கண்டி மாவட்டத்திலும் இவ்வருட இறுதிக்குள் கல்லூரியொன்றை நாம் நிர்மாணிக்க உள்ளோம்.
வெளி மாவட்டங்களுக்கு இளைய தலைமுறையினர் இடம்பெயர்வதை குறைக்கும் பல வேலைத் திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம்.
எம்.ஏ.அமீனுல்லா
No comments:
Post a Comment