ஜேர்மன் தூதுவர் இலங்கை வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் : இரு தரப்பு உறவுகளின் முக்கியத்துவம், பன்முகத் தன்மை தொடர்பில் வலியுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 25, 2021

ஜேர்மன் தூதுவர் இலங்கை வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் : இரு தரப்பு உறவுகளின் முக்கியத்துவம், பன்முகத் தன்மை தொடர்பில் வலியுறுத்தல்

இலங்கையில் உள்ள ஜேர்மன் கூட்டாட்சிக் குடியரசின் தூதுவர் ஹோல்கர் லோதர் சியூபர்ட் ஆகஸ்ட் 24, செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் வைத்து இலங்கையின் புதிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில், அரசியல், பொருளாதார உறவுகள் முதல் நீண்ட கால கலாச்சாரத் தொடர்புகள் மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகள் வரை இலங்கை - ஜேர்மனி இரு தரப்பு உறவுகளின் முக்கியத்துவம் மற்றும் பன்முகத் தன்மையை வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் வலியுறுத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையே இரு தரப்பு மற்றும் பல்தரப்பிலும் இருக்கும் துடிப்பான மற்றும் உற்பத்தி ஒத்துழைப்பை தூதுவர் சியூபர்ட் எடுத்துரைத்தார்.

இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையில் சமீபத்தில் முடிவடைந்த அரசியல் ஆலோசனைகளின் வெற்றியை அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் புகழ்பெற்ற ஜேர்மன் நிறுவனங்களின் வலுவான இருப்பைக் குறிப்பிட்ட வெளிநாட்டு அமைச்சர், பரஸ்பரம் நன்மைக்காக இலங்கையில் முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புக்களை மேலும் மேம்படுத்துவதற்காக ஜேர்மனிக்கு அழைப்பு விடுத்தார்.

இரு தரப்பு ஒத்துழைப்பின் முக்கியமானதொரு பரிமாணமாக அபிவிருத்தி ஒத்துழைப்பை அடையாளம் கண்டு கொண்ட வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், கட்டுபெத்த, கிளிநொச்சியில் உள்ள ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் மற்றும் மாத்தறையில் அமைக்கப்படும் புதிய பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் மூலம் இலங்கை இளைஞர்களுக்கு வழங்கப்படும் மதிப்புமிக்க தொழிற்பயிற்சி வாய்ப்புக்களுக்கு தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

ஜேர்மனியின் உதவியுடன் கட்டப்பட்ட காலியில் உள்ள மஹமோதர மகப்பேறு மருத்துவமனை (ஹெல்முட் கொஹ்ல் மருத்துவமனை) குறித்து தூதுவர் சியூபர்ட் வெளிநாட்டு அமைச்சரிடம் தெரிவித்தார்.

வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment