முன்னாள் கடற்படைத் தளபதி குற்றவாளி அல்ல என நீதிமன்றே தீர்மானிக்க வேண்டும், நாட்டிலே சட்டத்தினை முறையாக இயங்க விடுங்கள் - கனகையா தவராசா - News View

About Us

About Us

Breaking

Friday, August 13, 2021

முன்னாள் கடற்படைத் தளபதி குற்றவாளி அல்ல என நீதிமன்றே தீர்மானிக்க வேண்டும், நாட்டிலே சட்டத்தினை முறையாக இயங்க விடுங்கள் - கனகையா தவராசா

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்னாக்கொட குற்றவாளி அல்ல என நீதிமன்றே தீர்மானிக்க வேண்டும். மாறாக சட்டமா அதிபரோ, நீதிஅமைச்சரோ, அரசாங்கமோ தீர்மானிக்கக்கூடாது. இந்த நாட்டிலே சட்டத்தினை முறையாக இயங்க விடுங்கள் என கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் கனகையா தவராசா தெரிவித்துள்ளார்.

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்னாக்கொடவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களைத் தொடரக்கூடாது என்ற சட்டமா அதிபர் திணைக்களத்தின் முடிவைக் கண்டித்துத்து கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் க.தவராசா, கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆகஸ்ட் மாத அமர்வில் கண்டனப் பிரேரணை ஒன்றினை முன்வைத்தார்.

அவ்வாறு கண்டனப் பிரேரணையினைச் சபையில் முன்வைத்துக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பதினொரு இளைஞர்களைக் கடத்தி வைத்துவிட்டு, அவர்களுடைய குடும்பத்திடம் கப்பம்கோரியதுடன், அதன் பின்னர் அத்தனைபேரையும் காணாமலாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்னாக்கொடவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்களைத் தொடரக்கூடாதென சட்டமா அதிபர் திணைக்களம் முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த அரசாங்கம் இந்த விடயத்தில் மாத்திரமல்ல, பல குற்றவாளிகளைத் தண்டிக்காமலும், அவர்கள் மீது வழக்குத் தொடராமலும், குற்றச்சாட்டுள்ள குற்றவாளிகள் பலரை விடுதலை செய்யும் செயற்பாடுகளையும் அண்மைக்காலங்களாக மேற்கொண்டு வருகின்றது.

ஆளுங்கட்சிக்கு ஒரு நீதியும், ஏனைய கட்சிகளுக்கு வேறுவிதமான நீதி என்ற அடிப்படையிலே அரசு செயற்பட்டு வருகின்றது.

சரசாலை என்னும் இடத்திலே எட்டு அப்பாவி பொதுமக்களை கொலை செய்த குற்றத்திற்காக ஓர் இராணுவ அதிகாரிக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு தற்போது ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசகராகச் செயற்பட்ட பாரத லக்ஸ்மன் என்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினரை, துமிந்த சில்வா சுட்டுக் கொலை செய்ததாக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு தற்போதைய ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுலை செய்தது மாத்திரமல்ல, அண்மையில் ஓர் அதிகார சபையின் தலைவர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு குற்றவாளிகளை விடுதலை செய்கின்ற இந்த விடயங்கள் மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்க விடயங்களாகும். இந்த விடயத்திலே மக்களும் சரி, அரசியல் தலைவர்களும் சரி அக்கறையின்றி இருப்பதால் எதிர்காலத்தில் அவர்களையும் அது பாதிக்கும்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது, அது தமிழ் மக்களைத்தான் பாதிக்கின்றது என்பதைக் கருத்தில் கொண்டு, பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை ஆதரித்த ஓர் முக்கிய அமைச்சர், தற்போது அதே பயங்கரவாத தடைச்சட்டத்தினைப் பயன்படுத்திக் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல இந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை இந்த நாட்டில் அறிமுகப்படுத்தியவர்களும், அந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் பாதிப்படைகின்ற நிலையும் ஏற்படும்.

இந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கும்படி ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையை பலதடவைகள் கோரியிருக்கின்றது. ஆனால் அதை நீக்குவதற்கு இந்த அரசாங்கம் தொடர்ந்தும் தயக்கம் காட்டியே வருகின்றது.

இதனால் இலங்கைக்கு கிடைத்து வந்த ஜீ.எஸ்.பி. வரிச்சலுகைகூட இந்த நாட்டிற்கு கிடைக்காமல் போகின்றபோது, இந்த நாடு வெகுவாகப்பாதிக்கப்படப் போகின்றது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த நாட்டிலே விடுதலைப் புலிகளுக்கு உணவு கொடுத்தார்கள், இடம் கொடுத்தார்கள் எனப் பல குற்றச்சாட்டுக்களைக் கூறி பயங்கரவாதத் தடைச்சட்டத்தினைப் பயன்படுத்தி எவ்வித விசாரணைகளுமின்றி பல ஆண்டுகளாக சிறைகளிலே பல தமிழ் மக்கள் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

அதேவேளை நேரடியாக விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த ஏராளமானவர்கள், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையிலே நீண்ட காலமாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளவர்கள்மீது வழக்குத் தாக்கல் செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

இவ்வாறு பயங்கரவாதத் தடைச்சட்டத்தினைப் பயன்படுத்தி அப்பாவித் தமிழர்கள் நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டுள்ள செயற்பாடு நியாயமற்ற செயற்பாடாகும்.

அதேவேளை பலரை துன்புறித்தி, சித்திரவதை செய்து படுகொலை செய்த பாரிய குற்றங்களுடன் குறுகிய காலங்களுக்கு கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்களுக்கு, பொது மன்னிப்பு வழங்கப்படுவதும், அவர்களின் குற்றங்களுக்கு வழக்குத் தொடர மறுப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது.

தற்போதுள்ள அரசு எப்போதும் ஆட்சியில் இருந்துவிட முடியாது. இந்த அரசும் எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டிய நிலையும் வரும். தற்போது இந்த அரசு எந்தச் சட்டங்களைப் பாவித்து மக்களைத் துன்புறுத்துகின்றதோ, அல்லது எதிர்க்கட்சியினரைத் தண்டிக்கின்றதோ அதேசட்டங்கள் எதிர்காலத்தில் தற்போதுள்ள அரச தரப்பை நோக்கியும் பாயும்.

எனவே வசந்த கர்னாக்கொட உட்பட, அந்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அனைவருக்கும் நீதிமன்ற விசாரணை அவசியம். அவர்கள் குற்றவாளிகள் அல்ல என நீதிமன்று தீர்மானித்தால் அதை நாம் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வோம். ஆனால் அவர்கள் குற்றவாளிகள் அல்ல என சட்டமா அதிபரோ, நீதி அமைச்சரோ, அரசாங்கமோ தீர்மானிக்கக்கூடாது. இந்த நாட்டிலே சட்டத்தினை இயங்கவிட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment