நகரம் அழகாகும்போது அதனை அனுபவிக்க மக்கள் இருக்காது சவக்குழிகளே இருக்கும் : தற்போது கொவிட்டை கட்டுப்படுத்த முடியாமல் போனமைக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் - முஜிபுர் ரஹ்மான் - News View

Breaking

Friday, August 6, 2021

நகரம் அழகாகும்போது அதனை அனுபவிக்க மக்கள் இருக்காது சவக்குழிகளே இருக்கும் : தற்போது கொவிட்டை கட்டுப்படுத்த முடியாமல் போனமைக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் - முஜிபுர் ரஹ்மான்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் தொற்றினால் நாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. அதனால் நகர அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை மக்களின் உயிரை பாதுகாக்க ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இல்லாவிட்டால் நகரம் அழகாகும்போது அதனை அனுபவிக்க மக்கள் இருக்காது சவக்குழிகளே இருக்கும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற, குடிவருவோர் குடியகல்வோர் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் வாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிகையில், முதலாவது கொவிட் அலையை கட்டுப்படுத்தியபோது அது தொடர்பில் அரசாங்கம் பெருமை அடித்துக் கொண்டு, பாரியளவில் விளம்பரப்படுத்தி வந்தது.

முதலாவது அலையை எவ்வாறு கட்டுப்படுத்தியதென்று எங்களுக்கு தெரியும். முதலாவது அலை ஏற்பட்டபோது கொவிட்டை கட்டுப்படுத்த செயற்பட்ட சுகாதார பிரில் சிறந்த வைத்தியர்கள் இருந்தார்கள். அதனால்தான் கட்டுப்படுத்த முடியுமாகியது.

ஆனால் அதற்கு பின்னர் தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் இருந்த அனைத்து வைத்தியர்களும் அரசியல் நோக்கத்துக்காக அங்கிருந்து நீக்கப்பட்டனர். அதன் காரணமாகத்தான் தற்போது கொவிட்டை கட்டுப்படுத்த முடியாமல் போயிருக்கின்றது. இந்த நிலைமைக்கு அரசாங்கம் பொறுபுக்கூற வேண்டும்.

அத்துடன் அரசாங்கத்திடம் கொவிட்டை கட்டுப்படுத்த தடுப்பூசி பெற்றுக் கொள்ள எந்த வேலைத்திட்டமும் இருக்கவில்லை. மாற்றுவழி இல்லாத கட்டத்திலேயே தடுப்பூசியை பெற்றுக் கொள்ள அரசாங்கம் முடிவெடுத்தது.

ஏதோவொரு பாணியை மக்களுக்கு அறிமுகப்படுத்தி அதனை குடிப்பதற்கே அரசாங்கம் இடமளித்திருந்தது. தடுப்பூசியை ஆரம்பத்திலேயே பெற்றுக் கொண்டிருந்தால் இந்தளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. அதனால் அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களால் இன்று கொவிட் தொற்றினால் நாளொன்றுக்கு 80 க்கும் அதிகமானவர்கள் மரணிக்கின்றனர்.

எனவே அரசாங்கம் நகர அபிவிருத்திக்காக ஒதுக்கும் நிதியை மக்களின் உயிரை பாதுகாக்க ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இல்லாவிட்டால் நகரம் அழகாகும்போது அதனை அனுபவிக்க மக்கள் இருக்காது சவக்குழிகளே இருக்கும் என்றார்.

No comments:

Post a Comment