யாழ்ப்பாணத்தில் நடமாடும் தடுப்பூசி சேவையினை ஆரம்பித்துள்ளோம், தவறிய அனைவரும் பயத்தை தவிர்த்து பெற்றுக் கொள்ளுங்கள் : கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடிதுவக்க - News View

About Us

About Us

Breaking

Thursday, August 19, 2021

யாழ்ப்பாணத்தில் நடமாடும் தடுப்பூசி சேவையினை ஆரம்பித்துள்ளோம், தவறிய அனைவரும் பயத்தை தவிர்த்து பெற்றுக் கொள்ளுங்கள் : கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடிதுவக்க

யாழ்ப்பாண மாவட்டத்தில் கோவிட்-19 தடுப்பூசியினை இதுவரை பெற்றுக் கொள்ளாதவர்கள் அதனைப் பெற்றுக் கொள்ளுங்கள் என மாவட்ட கட்டளைத் தளபதி, மேஜர் ஜெனரல் ஜெகத் கொடிதுவக்கு கேட்டுள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இராணுவத்தினரின் நடமாடும் கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டத்தை ஆரம்பித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்தரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வாவின் வழிகாட்டலின் கீழ் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டமானது யாழ்ப்பாணத்திலும் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

வீடுகளிலிருந்து தடுப்பூசி நிலையங்களுக்குச் சென்று கோவிட்-19 தடுப்பூசி பெறமுடியாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வீட்டுக்குச் சென்று வழங்கும் வேலைத் திட்டமாக இன்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதற்கட்டமாக யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் இந்த நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் இடம்பெறுகிறது. யாழ்ப்பாணம் மாநகர் பகுதிகளை உள்ளடக்கி இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் சுகாதாரப் பிரிவினருடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்காக இராணுவத்தின் மருத்துவப் பிரிவினர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

தற்போது மக்கள் மத்தியில் கோவிட்-19 தடுப்பூசியினை பெற விருப்பம் இல்லாத நிலமை காணப்படுகின்றது. அவ்வாறான ஒரு நிலமை வேண்டாம். நாடு முழுவதும் இந்த தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது. எனவே எதிர்வரும் காலத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் தடுப்பூசியினை கட்டாயமாக பெற வேண்டும்.

கடந்த காலத்தில் தடுப்பூசி தொடர்பில் பயத்துடன் இருந்திருக்கலாம். ஆனால் இனி அந்த பயத்தை தவிர்த்து தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுங்கள்.

அத்தோடு வீடுகளில் இருந்து தடுப்பூசி நிலையம் சென்று தடுப்பூசி பெற முடியாதவர்களுக்காக நடமாடும் சேவையினை இராணுவம் ஆரம்பித்துள்ளோம். எனவே தற்போதைய நிலமையில் தடுப்பூசியினை பெற்றுக் கொள்ள தவறியவர்கள் அனைவரும் தடுப்பூசி பெற்றுக் கொள்ளுங்கள்.

யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு விடயத்தினை கூற விரும்புகின்றேன். சுகாதார அமைச்சின் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுங்கள். ஊடகங்களில் வெளிவரும் சுகாதார நடைமுறைகள் அறிவுறுத்தல்களை சரியாகப் பின்பற்றுங்கள். ஒன்றுகூடல்களை தவிருங்கள்.

தற்போதைய நிலையில் மாகாணங்களுக்கிடையில் சுகாதார நடைமுறைகளை மீறி போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பேருந்து சேவைகள் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பொலிஸாருடன் இணைந்து இந்த நடவடிக்கைை விரைவில் முன்னெடுக்கப்படும் என்றார்

No comments:

Post a Comment