ஆசிரியர், அதிபர்களின் சம்பள முரண்பாடு தீர்க்கப்படுமென்ற நம்பிக்கையில் உள்ளோம் : அமைச்சரவை உப குழுவுடனான சந்திப்பையடுத்து தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பாலசேகரம் கூறுகிறார் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 21, 2021

ஆசிரியர், அதிபர்களின் சம்பள முரண்பாடு தீர்க்கப்படுமென்ற நம்பிக்கையில் உள்ளோம் : அமைச்சரவை உப குழுவுடனான சந்திப்பையடுத்து தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பாலசேகரம் கூறுகிறார்

ஆசிரியர், அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவிற்கும் ஆசிரிய தொழிற்சங்கங்களுக்குமிடையிலான ஒரு கலந்துரையாடல் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்றது. 

அச்சந்திப்பில் தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கம் சார்பில் கலந்து கொண்ட அதன் பொதுச் செயலாளர் எஸ். பாலசேகரம் பின்வரும் விடயங்களைத் தெரிவித்தார்.

‘அமைச்சர் விமல் வீரவன்சவின் வாசஸ்தலத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. கடந்த 24 வருடங்களாக ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கான சம்பள முரண்பாடு நிலவுவதை அமைச்சரவை உபகுழு ஏற்றுக் கொண்டது. 

ஆசிரியர்கள் பெறுகின்ற சம்பளம் தற்போதைய வாழ்வாதாரத்திற்கு போதாத நிலையில் இருப்பதை தாம் ஏற்றுக் கொள்வதாக அவர்கள் தெரிவித்தார்கள்.

அத்துடன் அரச ஊழியர்கள் மட்டத்தில் குறைந்தளவு சம்பளத்தையே ஆசிரியர்கள் பெறுகின்றனர் என்பதை தாம் முழுமையாக அறிந்து கொண்டிருப்பதாக அவர்கள் எங்களிடம் தெரிவித்தனர். 

தாம் ஆக்கபூர்வமான ஒரு முடிவை பெற்றுத் தருவதாக அவர்கள் கூறியிருந்தனர். தேசிய ஜனநாயக ஆசிரிய சங்கம் சார்பில் நாங்களும் சில விடயங்களை தெரிவித்தோம்.

அதன்படி கடந்த 12 அல்லது 15 வருடங்களாக ஆசிரியர்களுடைய சம்பள நிலுவை வழங்கப்படாமல் இருப்பதையும் நாம் எடுத்துக் கூறினோம். அவற்றையும் இத்தருணத்தில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு நாம் வலியுறுத்தினோம். 

ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்பதுதான் ஜனாதிபதியின் பணிப்பாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

ஜனாபதிபதி இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்துகின்றார். அத்துடன் பிரதமர் கூட இந்த அமைச்சரவையின் உபகுழு நியமிக்கப்பட்டிருந்த நோக்கம் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதாகும் என்று உபகுழு தெரிவித்தது.

ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அதற்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் உபகுழுவில் உள்ளோர் தெரிவித்தனர்.

அத்துடன் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட வெறும் பத்தாயிரம் ரூபா பெறுகின்ற ஆசிரிய உதவியாளர்களின் விடயங்களையும் நாம் அமைச்சரவையின் உபகுழுவின் கவனத்திற்கு எடுத்துச் சென்றோம்.

இதன் போது அமைச்சரவை உப குழு தேசிய ஜனநாயக ஆசிரிய சங்கத்திற்கு ஒரு உறுதிமொழி யையும் வழங்கியிருந்தது. அதன்படி இந்த ஆசிரிய உதவியாளர்கள் விடயத்தில் அவர்களுக்கு 3- 11 இற்கு நியமனத்தை வழங்க வேண்டும். அதேசமயம் பயிற்சியின் போது 3- 1க்கு உரிய காலத்தில் உயர்வு வழங்குவதற்கும் நடவடிக்கையை தாம் எடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சம்பள முரண்பாடை தீர்க்க வேண்டும். அதேசமயம் நாட்டில் இருக்கும் தற்போதைய நிலையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். இவ்வாறு பாலசேகரம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் நாம் கலந்து கொண்டது வெற்றியளித்தாகவே கருதுகின்றோம் என்று தேசிய ஜனநாயக ஆசிரிய சங்கம் தெரிவித்தது. 

எனவே நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம். இன்னும் ஒரிரு வாரங்களில் ஆசிரியர்களின் பிரச்சினை முடிவுக்கு வரும் எதிர்பார்க்கின்றோம் என்று தேசிய ஜனநாயக ஆசிரிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பாலசேகரம் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment