இலங்கை தமிழர்களுக்கு பல நலத்திட்ட உதவிகளுக்காக 317 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு - தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, August 27, 2021

இலங்கை தமிழர்களுக்கு பல நலத்திட்ட உதவிகளுக்காக 317 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு - தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

இலங்கை தமிழர்களுக்கு நியாயவிலைக் கடைகளை விலையில்லா அரிசி வழங்குவது உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகளுக்காக 317 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

தமிழக சட்டப் பேரவையில் விதி எண் 110 இன் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 'கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்றால், கடல் கடந்து வாழும் தமிழர்களின் கண்ணீரால்' என்று எழுதினார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா. அத்தகைய பேரறிஞர் அண்ணா அவர்களுடைய வழி நடக்க கூடிய இந்த அரசின் சார்பில் கடல் கடந்து வந்த இலங்கை தமிழ் மக்களின் கண்ணீரைத் துடைக்கக் கூடிய வகையில் சில அறிவிப்புகளை சட்டப் பேரவை விதி 110 இன் கீழ் வெளியிட நான் விரும்புகிறேன்.

இலங்கை நாட்டில் வாழ்ந்த தமிழ் மக்கள் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக் கலவரத்திற்கு பிறகு கடல் கடந்து தமிழ் நாட்டிற்கு வர தொடங்கினார்கள். அத்தகைய தமிழ் மக்களை அன்று முதல் இன்று வரையிலும் நாம் அரவணைத்து காப்பாற்றி வருகிறோம். அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கி வருகிறோம்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற தருணங்களில் எல்லாம் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இலங்கை தமிழர் நலனில் எப்போதும் அக்கறை கொண்ட முத்தமிழறிஞர் கலைஞருடைய ஆட்சியில் கடந்த1997-98 ஆம் ஆண்டில் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு 2 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3,594 புதிய வீடுகள் தலா 5,750 ரூபாய் செலவில் கட்டிக் கொடுக்கப்பட்டன. மேலும் இதர வசதிகளை சீரமைப்பது 2 கோடியே 60 லட்ச ரூபாய் செலவிடப்பட்டது.

1998-99ஆம் ஆண்டில் 7,700 மதிப்பீட்டில் 3,826 வீடுகள் 2 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. கடந்த 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் திகதியன்று இலங்கை அகதிகள் முகாமில் உள்ள அடிப்படை தேவைகள் குறித்து ஓர் ஆய்வு கூட்டத்தை முதல்வராக இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நடத்தினார்கள். அதனடிப்படையில் அப்போது துணை முதல்வராக இருந்த என்னையும், அமைச்சர்களையும் இலங்கை அகதிகள் முகாமுக்கு அனுப்பி ஆய்வு நடத்தி அறிக்கை தர உத்தரவிட்டார்.

அப்படி ஆய்வு செய்து விட்டு திரும்பி வந்து நாங்கள் அப்போது கொடுத்த அறிக்கையை ஏற்று, இலங்கை அகதிகள் முகாம் வீடுகள் பழுது பார்ப்பது, புதுப்பிப்பது, குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட இலங்கை அகதிகள் முகாம்களில் இருக்கும் தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான 14 அடிப்படை பணிகளை மேற்கொள்ள 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்த முதலமைச்சர் தான் கலைஞர் அவர்கள் என்பதை இந்த அவையிலேயே நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

1983 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழ் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இவர்களில் 18 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சேர்ந்த 58 ஆயிரத்து 822 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழ் நாட்டில் 29 மாவட்டங்களில் அமைந்துள்ள 108 முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் 13 ஆயிரத்து 540 குடும்பங்களை சேர்ந்த 34 ஆயிரத்து 87 நபர்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்து கொண்டு வெளி பதிவில் வசித்து வருகிறார்கள். 

கடந்த சில ஆண்டுகளாக, அகதிகளாக முறையான அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வரக்கூடிய இலங்கை தமிழர்களுக்கு இனி பாதுகாப்பான - கௌரவமான - மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்து தருவது இந்த அரசு உறுதி செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழகத்தில் உள்ள முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும். முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பணப்பயன் வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவி அதிகரித்து வழங்கப்படும்.

இலங்கைத் தமிழர்களது முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7 ஆயிரத்து 469 வீடுகள், 231 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டித்தரப்படும். இதன் முதற்கட்டமாக 3,510 புதிய வீடுகள் கட்டுவதற்கு நடப்பு நிதியாண்டில் 108 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

முகாம்களில் மின் வசதி, கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இது தவிர ஆண்டுதோறும் இதுபோன்ற வசதிகளை தொடர்ந்து செய்வதற்கு வசதியாக இலங்கை தமிழர் வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதியாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த அடிப்படை வசதிகள் மட்டுமல்லாமல் அவர்களின் பிள்ளைகளின் கல்வி மேம்பட, வாழ்வு சிறக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

முகாம்களில் வசிக்கக்கூடிய இலங்கை அகதிகளுக்கும், வெளியிலுள்ள அகதிகளுக்கும் உரிய உதவிகளை வழங்கும். அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், குடியுரிமை வழங்குதல் மற்றும் அவர்களில் இலங்கை திரும்பும் அகதிகளுக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்தல் போன்ற நீண்டகால தீர்வினை கண்டறிய ஏதுவாகவும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், மாண்புமிகு சட்ட மன்ற உறுப்பினர் ஒருவர், பொதுத்துறை செயலாளர், மறுவாழ்வு துறை இயக்குனர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், அரசு சாரா உறுப்பினர்கள், முகாம் வாழ் இலங்கை தமிழர் பிரதிநிதி மற்றும் வெளி பதிவில் வசிக்கக்கூடிய அகதிகளுக்கான பிரதிநிதி ஆகியோரை உள்ளடக்கிய ஆலோசனைக்குழு விரைவில் அமைக்கப்படும்.

இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர் மீது பதிவு செய்துள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்குகள் நிறைவடைந்த பிறகு இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இலங்கை தமிழர் குழந்தைகளின் கல்வி மேம்பட , அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 50 மாணவருக்கான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டண செலவை அரசே ஏற்கும். பொறியியல் கல்வி, வேளாண்துறை பட்ட படிப்பு, வேளாண்மை பொறியியல் பட்டப் படிப்பில் மதிப்பெண் அடிப்படையில் முதல் 5 மாணவர்களுக்கு மேற்சொன்ன கல்வி மற்றும் விடுதி கட்டணங்களை அரசே ஏற்கும். முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் அனைத்து முகாம் வாழ் மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்றுக் கொள்ளும். 

இதற்காக ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். முகாம் வாழ் தமிழர்களில் தோராயமாக 750 மாணவர்கள் அரசு மற்றும் பிற கல்லூரிகளில் கலை, அறிவியல் மற்றும் பட்டய படிப்பு உள்ளிட்ட தொழில் படிப்புகளிலும் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படக்கூடிய உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

தொழிற்கல்வி பட்டய படிப்பு படிப்பு மாணவர்களுக்கு 2500 துபாயிலிருந்து பத்தாயிரம் ரூபாயும், இளநிலை மற்றும் கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு 3000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயும், இளநிலை தொழில் சார்ந்த படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு 5000 ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயும் என கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இலங்கைத் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் தங்களது வேலைவாய்ப்பு தகுதியை உயர்த்திக் கொள்ளவும் வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக 5 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சிறு குறு தொழில்கள் செய்திட வசதியாகவும் முகாம்களில் உள்ள 300 சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதியாக ஒவ்வொரு சுய உதவி குழுக்களுக்கும் தலா ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு மாதந்தோறும் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கான பணக்கொடை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. இனி குடும்பத் தலைவருக்கு மாதம்தோறும்1, 500 ரூபாயும், இதர பெரியவர்களுக்கு 1000 ரூபாயும் மற்றும் 12 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு 500 ரூபாயும் உயர்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 20 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவாகும்.

இதைத் தவிர குடும்பத்திற்கு ஐந்து எரிவாயு உருளைக்கு தலா 400 ரூபாய் வீதம் மானிய தொகை வழங்கப்படும். இலங்கை தமிழர்களுக்கு இனி விலையில்லா அரிசி வழங்கப்படும். இதற்கான செலவு தொகையான 19 லட்சம் ரூபாயை அரசு ஏற்கும். இலங்கை தமிழர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் மூலம் ஒவ்வொரு ஆண்டும் இலவச ஆடைகளும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இலவச போர்வைகளும் வழங்கக்கூடிய திட்டத்தில் மத்திய அரசு நிர்ணயித்த விலையில் ஆடைகள் வாங்கி, வழங்க இயலாத நிலையில் நடப்பாண்டில் பெறப்பட்ட விலை புள்ளிகளின் அடிப்படையில் குடும்ப ஒன்றுக்கு 1,790 ரூபாயிலிருந்து 3,573 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 

இதனால் அரசுக்கு கூடுதலாக மூன்று கோடி ரூபாய் செலவினம் ஏற்படும். இத்துடன் முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வாழ்க்கையை அமைத்து தருவதை அரசு உறுதி செய்யும்.' எனமுதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள நலத்திட்ட உதவிகள் குறித்து தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் திருமதி கனிமொழி டிவிட்டரின் பதிவிட்டிருப்பதாவது,

' வாழ்விடமிழந்து, வாழ்விழந்து, நாடு இழந்து தன் எதிர்காலம், தன் பிள்ளைகளின் எதிர்காலம் என்று எல்லாம் கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையில், முகாம்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் பரிதவித்த இலங்கை தமிழ் மக்களுக்கு, எதிர்காலத் திட்டங்களையும், கௌரவமான வாழ்க்கையும் அறிவித்திருக்கும் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி. கண்ணீர் கடலில் திசையறியாது தவித்தவர்களுக்கு திசைமானியான அறிவிப்பு' என பதிவிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment