நாட்டில் 160 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு : சன்ன ஜயசுமண எவ்வாறு பேராசிரியரானார் என்பது சந்தேகம் : தடுப்பூசி வழங்கல் பிரயோசனமற்றது - ராஜித சேனாரத்ன - News View

About Us

About Us

Breaking

Saturday, August 21, 2021

நாட்டில் 160 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு : சன்ன ஜயசுமண எவ்வாறு பேராசிரியரானார் என்பது சந்தேகம் : தடுப்பூசி வழங்கல் பிரயோசனமற்றது - ராஜித சேனாரத்ன

எம்.மனோசித்ரா

நாட்டில் தற்போது 160 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மருந்து தட்டுப்பாடு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிந்து வைத்துள்ள விடயங்களைக் கூட ஒளடதங்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண அறிந்திருக்கவில்லை என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இவர் எவ்வாறு பேராசிரியரானார் என்பதும் சந்தேகத்திற்குரியதாகும் என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் தற்போதுள்ள நிலைமை தொடருமாயின் டிசம்பராகும் போது 30000 மரணங்கள் பதிவாகக்கூடும் என்றும், நாடு முடக்கப்படுமாயின் அவற்றில் 18000 மரணங்களை தவிர்க்க முடியும் என்றும் சர்வதேச ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் தற்போது வேகமாக முன்னெடுக்கப்பட்டாலும் அது பிரயோசனமற்றதாகும். மிகவும் கால தாமதமாகி தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டமையால் தற்போது சுகாதார கட்டமைப்புக்கள் சரிவடைந்துள்ளன.

சிகிச்சை வழங்குவதற்கான வசதிகள் இன்மையால் சிகிச்சை பெறாமலேயே பலர் இறந்துள்ளனர். வரலாற்றில் என்றும் இல்லாதவாறு இலங்கையில் இவ்வாறானதொரு நிலைமை தோற்றம் பெற்றுள்ளது.

இவ்வாறான நிலைமையில் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டாம் என்று பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளுக்கு உயர்மட்டத்திலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது பாரிய மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சுமார் 160 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறித்த மருந்துகளை அரச வைத்தியசாலைகளில் மாத்திரமின்றி தனியார் மருந்தகங்களில் கூட அவற்றை பெற்றுக் கொள்ளாத முடியாத நிலைமை காணப்படுகிறது.

மருந்து தட்டுப்பாடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிந்து வைத்துள்ள விடயங்களைக்கூட இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண அறியாமலுள்ளார். அதன் காரணமாகவே எதிர்க்கட்சித் தலைவர் கூறும் விடயங்களை அவர் கேலிக்கு உள்ளாக்குகின்றார். இவர் எவ்வாறு பேராசிரியர் ஆனார் என்பதே சந்தேகத்திற்குரியதாகும் என்றார்.

No comments:

Post a Comment