கொழும்பில் 100 சதவீதம் டெல்டா திரிபு பரவுகிறது - பேராசிரியர் கலாநிதி சந்திம ஜீவந்தர - News View

Breaking

Saturday, August 28, 2021

கொழும்பில் 100 சதவீதம் டெல்டா திரிபு பரவுகிறது - பேராசிரியர் கலாநிதி சந்திம ஜீவந்தர

எம்.மனோசித்ரா

நாட்டில் இனங்காணப்பட்ட டெல்டாவின் 3 மரபணு திரிபுகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் ஒவ்வொரு மரபணு திரிபும் படிப்படியாக பிரதான திரிபாக மாறிக் கொண்டிருப்பது இனங்காணப்பட்டது. மிகக்குறுகிய காலத்திற்குள் அசல் டெல்டா திரிபானது புதிய திரிபாக மாற்றமடைந்து விரைவாக பரவி வருகின்றமையும் இதன் மூலம் உறுதியாகியுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வைரஸ் தொற்றாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகளின் ஊடாக நடத்தப்பட்ட ஆய்விலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

டெல்டா திரிபு தொடர்பான புதிய அறிக்கையின்படி ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில் டெல்டா திரிபானது கொழும்பை அடிப்படையாகக் கொண்டு வேகமாக பரவலடைந்துள்ளது. அதற்கமைய கொழும்பில் 100 வீதம் டெல்டா பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

இந்த வைரஸ் திரிபு சூப்பர் டெல்டாவாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் நாட்டில் டெல்டாவின் 3 மரபணு திரிபுகள் இனங்காணப்பட்டிருந்தன. இவை தொடர்பில் தொடர் ஆய்வுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த ஆய்வின் முடிவு தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே கலாநிதி சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்தார்.

பேராசிரியர் நீலிகா மலவகே மற்றும் பேராசிரியர் சந்திம ஜீவந்தர ஆகியோரின் தலைமையில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட் திரிபுகளை இனங்காண்பதற்கு எமக்கு நாடளாவிய ரீதியிலிருந்து மாதிரிகள் கிடைக்கப் பெறும். இவ்வாறு மாதிரிகள் கிடைக்கப் பெற்றவுடன் பி.சி.ஆர். பரிசோதனை வழமையைப் போன்று மேற்கொள்ளப்படும்.

சுமார் ஒன்றரை மணித்தியாலங்களில் பரிசோதனை அறிக்கையைப் பெற்றுக் கொள்ள முடியும். இதன் போது மரபணு திரிபுகளை இனங்காண்பதற்கு பிரத்தியேக பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட அல்பா திரிபு, இந்தியாவில் இனங்காணப்பட்ட டெல்டா திரிபு உள்ளிட்டவற்றுக்கு உரித்தான மாறுபாடுகள் உள்ளன. அந்த மாறுபாடுகளை கண்டறிவதற்காகவே மேற்கூறப்பட்ட பிரத்தியேக பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதன்போது கிடைக்கப் பெறும் அறிக்கைக்கு அமையவே தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை தீர்மானிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் பரவி வருவதாக சந்தேகிக்கப்படும் சூப்பர் டெல்டா பிறழ்வு குறித்து, தொடர்ந்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment