ரிஷாத்தின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமி தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி : விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொரளை பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 8, 2021

ரிஷாத்தின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமி தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி : விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொரளை பொலிஸார்

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில், வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமி ஒருவர், உடலில் தீ காயங்களுக்கு உள்ளாகியுள்ளமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொரளை பொலிஸார் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரமவுக்கு இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது தீ காயங்களுக்கு உள்ளான குறித்த சிறுமி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 73 ஆவது சிகிச்சை அறையில் தீவிர சிகிச்சைப் பிரிவு 2 இல் சிகிச்சைப் பெறுவதாகவும், வாக்கு மூலம் ஒன்றினைக்கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் கவலைக் கிடமான நிலைமையில் உள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

16 வயதான குறித்த சிறுமி, அட்டன் - டயகம பகுதியைச் சேர்ந்தவர் எனவும், கடந்த 3 ஆம் திகதி வெள்ளியன்று உடலில் தீ பரவியமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலை பொலிஸ் பொறுப்பதிகாரி இது தொடர்பில் தமக்கு அறிவித்து முறையிட்டதாக பொரளை பொலிஸார் நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சிறுமி வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த பெளத்தாலோக்க மாவத்தை, கொழும்பு 7 இல் அமைந்துள்ள வீட்டில் வசிக்கும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவியின் தந்தை, தாய் மற்றும் குறித்த சிறுமியை வீட்டு வேலைக்கு கையளித்த நபர் மற்றும் வீட்டில் வேலை செய்த மற்றொரு ஆணின் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்நிலையில் குறித்த தீப்பரல் தொடர்பில் சேகரிக்கப்பட்டுள்ள சான்றுப் பொருட்களை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை பெற அனுமதியளிக்குமாறு பொலிசார் கோரிய நிலையில் அதற்கு நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம அனுமதியளித்தார்.

No comments:

Post a Comment