மாணவர்கள் தமது கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் பல்வேறு சவால்கள் : நல்லாட்சியில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த உதவிகளையும் அரசாங்கம் நிறுத்தியுள்ளது - ஐக்கிய தேசியக் கட்சி - News View

Breaking

Post Top Ad

Thursday, July 8, 2021

மாணவர்கள் தமது கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் பல்வேறு சவால்கள் : நல்லாட்சியில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த உதவிகளையும் அரசாங்கம் நிறுத்தியுள்ளது - ஐக்கிய தேசியக் கட்சி

(நா.தனுஜா)

நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறந்த செயற்திட்டங்களை அப்போது தொடர்ச்சியாக விமர்சித்து வந்தவர்களால், தற்போது குறைந்தபட்சம் அவற்றைக்கூட தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. குறிப்பாக மாணவர்கள் தமது கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கும் இக்காலகட்டத்தில் அரசாங்கம் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்குப் பதிலாக, ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த உதவிகளையும் இடைநிறுத்தி வருகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும், முன்னாள் கல்வியமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, எமது அரசாங்கத்தின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட 'சுரக்ஷா' காப்புறுதித் திட்டம் தற்போது முழுமையாக சீர்குலைந்திருக்கின்றது. நாடளாவிய ரீதியிலுள்ள அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் கல்வி பயிலும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த அனைத்து மாணவர்களினதும் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலேயே நாம் சுரக்ஷா காப்புறுதி வழங்கல் செயற்திட்டத்தை ஆரம்பித்தோம். மாணவர்களின் குடும்பங்களுக்கு இது பெரும் உதவியாக அமைந்தது.

இந்தக் காப்புறுதித் திட்டத்தைப் பெறும் மாணவர் நோய் வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால், அதற்குரிய செலவை அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும். இத்திட்டத்தின் மூலம் பல மாணவர்கள் பயனடைந்ததுடன் அவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்த சுமையும் ஓரளவிற்குக் குறைந்தது.

எனினும் சுரக்ஷா காப்புறுதித் திட்டம் தற்போதைய அரசாங்கத்தில் பல்வேறு குழறுபடிகளுக்கு உள்ளாகியுள்ளது. மாணவர்கள் தமது கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கும் இக்கால கட்டத்தில் அவர்களுக்கு மேலும் பல உதவிகளை வழங்க வேண்டுமே தவிர, ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உதவிகளை இடைநிறுத்தக்கூடாது.

அவ்வாறிருக்கையில் இப்போது சுரக்ஷா காப்புறுதியானது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாத்திரம் வழங்கப்படுவதுடன் காப்புறுதித் தொகையும் குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் துன்பத்தையும் எதிர்கால நலன்களையும் கருத்திற் கொள்ளாமல் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தீர்மானங்கள் தொடர்பில் நாம் பெரிதும் அதிருப்தியடைந்திருக்கிறோம்.

நாம் கடந்த காலத்தில் முன்னெடுத்த சிறந்த செயற்திட்டங்களை விமர்சித்தவர்களால் இப்போது குறைந்தபட்சமாக அவற்றைக் கூடத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாமல் உள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு டெப் கணினிகளை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம். அதனை அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த தற்போதைய அரசாங்கம் எதிர்த்தது.

எனினும் குறித்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தால், இந்த கொவிட்-19 பரவல் நெருக்கடிக்கு மத்தியில் மாணவர்கள் தமது கல்விச் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்குப் பெரிதும் உதவியாக அமைந்திருக்கும்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் கல்வியமைச்சினால் கொள்வனவு செய்யப்பட்ட டெப் கணினிகளை ஆசிரியர்களுக்கேனும் உரியவாறு பகிர்ந்தளிக்குமாறு அரசாங்கத்தைக் கோருகின்றோம். அந்த டெப் கணினிகளைப் பகிர்ந்தளிப்பதற்கான செயற்திட்டங்கள் எவையும் வகுக்கப்படாமல், அவை இராணுவத்தினருக்கும் வழங்கப்படுவதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

அதேபோன்று இணையவழி (ஒன்லைன்) கல்வி நடவடிக்கைகளை அரசாங்கத்தினால் சீராக முன்னெடுக்க முடியாமல் போயுள்ளது. அதன் காரணமாக புதிதாக 20 தொலைக்காட்சி அலைவரிசைகளை உருவாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

சுமார் இரண்டு வருட காலமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முழுமையாகப் பாதிப்படைந்துள்ளன. இனிவரும் காலங்களிலும் அவர்களின் கல்விச் செயற்பாடுகள் பாதிப்படைவதற்கு அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad