அரசாங்கத்தை குழப்பியடிக்கும் அராஜக செயற்பாடுகளில் எதிர்க்கட்சி ஈடுபடுகின்றது என்கிறார் தினேஷ் குணவர்தன : எமது ஆட்சியில் பாராளுமன்றத்தில் நடந்துகொண்ட விதத்தை மறந்துவிட்டாரா என்கிறார் லக்ஸ்மன் கிரியெல்ல - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 7, 2021

அரசாங்கத்தை குழப்பியடிக்கும் அராஜக செயற்பாடுகளில் எதிர்க்கட்சி ஈடுபடுகின்றது என்கிறார் தினேஷ் குணவர்தன : எமது ஆட்சியில் பாராளுமன்றத்தில் நடந்துகொண்ட விதத்தை மறந்துவிட்டாரா என்கிறார் லக்ஸ்மன் கிரியெல்ல

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

எதிர்க்கட்சியினர் கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்கு மக்களிடம் மன்னிப்புக் கேட்காது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியை குழப்பியடிப்பது மட்டுமல்லாது நாட்டின் பிரதான ஜனநாயக மையங்களை வீழ்த்தவும் முயற்சித்து வருகின்றனர். அராஜக கொள்கையின் அடித்தளத்தை திட்டமிட்டு முன்னெடுக்கவே எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர் என சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாட்டில் ஜனநாயகம் இல்லையென சர்வதேசத்திற்கு காட்டும் சூழ்ச்சி இடம்பெற்று வருகின்றது எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை, ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட சர்ச்சையையடுத்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கூற ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன, நாடு பொருளாதார நெருக்கடிக்குள் பயணிக்கின்றது. எனினும் இவ்வாறன நிலையில் எதிர்க்கட்சி தமது கடந்த கால தவறுகளுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்காது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியை குழப்பியடிப்பது மட்டுமல்லாது நாட்டின் பிரதான ஜனநாயக மையங்களை வீழ்த்தவும் முயற்சித்து வருகின்றனர்.

பாராளுமன்றத்தை குழப்பியடிக்க எடுக்கும் நோக்கத்தின் பின்னணி என்ன? அராஜக கொள்கையின் அடித்தளத்தை திட்டமிட்டு முன்னெடுக்கவே இவர்கள் முயற்சிக்கின்றனர். சிரேஷ்ட உறுப்பினர்களும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தை குழப்பியடிக்க நடவடிக்கை எடுக்கின்றனர். 

பாராளுமன்ற ஜனநாயகம் என்பது அராஜக ரீதியில் நடந்துகொள்வது அல்ல. எனினும் எதிர்கட்சியினர் அராஜக கொள்கைக்கான முதலாவது தீப்பொறியை இவர்கள் பற்றவைத்துள்ளனர். ஆரம்பத்தில் இருந்தே ஜனாதிபதிக்கு எதிராகவும் அரசாங்கத்திற்கு எதிராகவும் செயற்பட்டு வருகின்றனர். 

வரலாற்றை மறந்திவிட்டு தூய்மையானவர்கள் போன்று தம்மை காட்டிக் கொள்கின்றனர். அரசாங்கத்தை குழப்பியடிப்பதும், பாராளுமன்றத்தை குழப்பியடிப்பதும் பாரதூரமானது. அதற்கு இடமளிக்ககூடாது. 

எனவே அராஜக கொள்கையில் வாழ்ந்துகொண்டு அதே கொள்கையில் தொடர்ந்தும் செயற்பட்ட நபர்கள் இன்று ஜனநாயகம் பற்றி பேசுகின்றனர். இவர்களே நாட்டை பயங்கரமான நிலைக்கு கொண்டு செல்கின்றனர் என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல அமைச்சர் தினேஷ் குணவர்தன வரலாற்றை மறந்துவிட்டாரா. எமது ஆட்சிக் காலத்தில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் நடந்துகொண்ட விதம் மறந்துவிட்டது. மிளகாய்த்தூள் வீசியது, சபாநாயகரின் நாட்காலியை உடைத்ததை, பைபிளை வீசியதை எல்லாம் மறந்திவிட்டனர். 

ஆனால் நாம் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை. நாம் ஒழுக்கமான எதிர்கட்சியாக நடந்து கொள்கின்றோம். சபாநாயகர் கரு ஜெயசூரிய பாராளுமன்ற ஒழுக்கத்தை பாதுகாக்க இவர்கள் குறித்த அறிக்கையை சட்டமா அதிபரிடம் கொடுக்காது இவர்களை காப்பாற்றினார். இல்லையென்றால் நீங்கள் இன்று சிறையில் இருக்க நேர்ந்திருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad