நெல் ஆலை உரிமையாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் அடுத்த வாரம் : மக்கள் மத்தியில் போலியான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ள எதிர்க்கட்சியினர் - மஹிந்தானந்த - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 27, 2021

நெல் ஆலை உரிமையாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் அடுத்த வாரம் : மக்கள் மத்தியில் போலியான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ள எதிர்க்கட்சியினர் - மஹிந்தானந்த

(இராஜதுரை ஹஷான்)

அரிசியின் விற்பனை விலையை தீர்மானிக்கும் வகையில் நெல் ஆலை உரிமையாளர்களுக்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் எதிர்வரும் வாரம் கைச்சாத்திடப்படும். நாட்டரிசி ஒரு கிலோ கிராமை 100 ரூபாவிற்கும் குறைவான விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

விவசாயத்துறை அமைச்சில் (26) இடம் பெற்ற ஊடகவியலளார் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பல தீர்மானங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.இரசாயன உரம் இறக்குமதி, பாவனைக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உர பாவனையில் பற்றாக்குறை காணப்படுகிறது என்ற போலியான நிலைப்பாட்டை மக்கள் விடுதலை முன்னணியினரும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளார்கள்.

பெரும்போக பயிர்ச் செய்கைக்கு தேவையாய சேதனப் பசளை உரம் தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக இரசாயன உரம் இறக்குமதி மற்றும் பாவனை தடை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து உர உரிமையாளர்கள் அதுவரையில் இறக்குமதி செய்த இரசாயன உரத்தை விவசாயிகளுக்கு வழங்காமல் முறையற்ற வகையில் பதுக்கி வைத்தார்கள். இதன் காரணமாகவே ஒரு சில பிரதேசங்களில் சிறுபோக பயிர்ச் செய்கைக்கு தேவையான உர பாவனையில் சிக்கல் நிலை தோற்றம் பெற்றது.

2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஒரு கிலோ கிராம் நெல் 30 ரூபாவிற்கு கொள்முதல் செய்யப்பட்டது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய ஒரு கிலோ கிராம் நெல் 50 ரூபாவிற்கு கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் நெற் பயிர்ச் செய்கை செய்யும் விவசாயிகள் பெருமளவில் பயனடைந்தார்கள்.

அரசியின் விலையை தீர்மானிப்பதில் இதுவரை காலமும் சிக்கல் நிலை காணப்பட்டது. அரிசியின் நிர்ணய விலையை உறுதியாக பேணும் வகையில் நெல் ஆலை உரிமையாளர்களுக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் எதிர்வரும் வாரம் ஒப்பந்தம் செய்து கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment