திருமண நிகழ்வுகளில் கொவிட் சட்டத்தை மீறினால் வழக்கு தொடுக்க நடவடிக்கை - நாளை முதல் நாடு பூராகவும் கண்காணிப்பு : பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் - News View

Breaking

Friday, July 23, 2021

திருமண நிகழ்வுகளில் கொவிட் சட்டத்தை மீறினால் வழக்கு தொடுக்க நடவடிக்கை - நாளை முதல் நாடு பூராகவும் கண்காணிப்பு : பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் சட்டத்தை மீறி திருமண நிகழ்வுகளை நடத்துபவர்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கியிருக்கின்றபோதும் அண்மைக் காலமாக இடம்பெற்ற பல திருமண நிகழ்வுகளில் சுகாதார வழிகாட்டல் சட்டம் மீறப்பட்டிருப்பது தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கடுமையான சுகாதார வழிகாட்டல் மற்றும் சட்டங்களுடனே திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. இருந்தபோதும் கடந்த சில வாரங்களுக்குள் இடம்பெற்ற திருமண நிகழ்வுகள் சுகாதார சட்டத்தை மீறி இடம்பெற்றிருப்பதை அவதானிக்க முடிந்திருக்கின்றது.

அதனால் நாளை முதல் நாடு பூராகவும் உள்ள திருமண விழா மண்டபங்களை கண்காணிக்க தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

எனவே கொவிட் சட்டத்தை மீறி திருமண நிகழ்வுகளை நடத்துபவர்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இல்லாவிட்டால் இந்த நிலைமை தொடர்ந்தால் எதிர்காலத்தில் திருமண கொத்தணி ஏற்படும் அபாயம் இருக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment