நாணயத்தாள்களை அச்சிடுவதால் நாட்டை அபிவிருத்தி செய்து விட முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் - ஹர்ஷ டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Friday, July 2, 2021

நாணயத்தாள்களை அச்சிடுவதால் நாட்டை அபிவிருத்தி செய்து விட முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் - ஹர்ஷ டி சில்வா

(எம்.மனோசித்ரா)

நாட்டின் பொருளாதாரம் பாரிய அபாய கட்டத்தில் உள்ளது. எனவே அதனை நிவர்த்தி செய்துகொள்ள உடனடியாக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். நாணயத்தாள்களை அச்சிடுவதால் நாட்டை அபிவிருத்தி செய்து விட முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், சுதந்திரத்தின் பின்னர் முதன்முறையாக நாடு பாரிய பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து உரிய தீர்வினைக் காணாவிட்டால் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும். மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். தற்போது நாட்டில் உற்பத்தியை விட நுகர்வு வீதம் அதிகமாகவுள்ளது. இதனால் ஏற்றுமதி - இறக்குமதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கம் பல பில்லியன் டொலர்கள் சர்வதேச கடனைப் பெற்று தாமரை கோபுரம், சூரியவௌ கிரிக்கட் மைதானம் மற்றும் அம்பாந்தோட்டை விளையாட்டரங்கு உள்ளிட்டவற்றுக்கு வீணாக செலவிட்டது. இதனை ஏதேனும் பிரயோசனமான வேலைத்திட்டங்களில் முதலீடு செய்திருந்தால் பயன்பெற்றிருக்க முடியும்.

தற்போது நாட்டில் அளவிற்கு அதிகமாக நாணயத்தாள்களை அச்சிடுவதால், இலங்கை ரூபாவின் நாணய பெருமதி மேலும் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாணயத்தாள்களை அச்சிடுவதால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.

தற்போது நாட்டில் சுமார் 3 பில்லியன் டொலர் மாத்திரமே இருப்பு காணப்படுகிறது. ஆனால் வருட இறுதியில் 3.8 பில்லியன் டொலர் கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது. இதனை அரசாங்கம் எவ்வாறு நிவர்த்தி செய்யப்போகிறது ? எனவே தான் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளுமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment