சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் பல கோணங்களில் பொலிஸ் விசாரணை : எவரது அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என்கிறார் அஜித் ரோஹண - News View

Breaking

Post Top Ad

Thursday, July 22, 2021

சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் பல கோணங்களில் பொலிஸ் விசாரணை : எவரது அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என்கிறார் அஜித் ரோஹண

பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து மர்மமான முறையில் தீப்பிடித்து உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இரண்டு விசேட குழுக்கள் அந்த விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதற்கிணங்க சிறுமியின் தாயாரிடம் மீண்டும் நேற்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவர் முன்னர் கல்வி கற்ற பாடசாலை அதிபர் மற்றும் உப அதிபர் உள்ளிட்ட மேலும் பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

விசாரணைகளில் எவரதும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள அவர், அவ்வாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அதனைக் கவனத்திற் கொள்ளாது பொலிசார் தன் கடமைகளை முறையாக மேற்கொள்வர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொரளை பொலிஸ் நிலையத்திற்கு மேலதிகமாக மேலும் இரண்டு விசேட பொலிஸ் குழுக்களான கொழும்பு தெற்கு பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினரும் கொழும்பு தெற்கு குற்றவியல் விசாரணைப் பிரிவும் இந்த விசாரணைகளை மேற்கொள்கின்றன. 

நேற்று முன்தினம் இக்குழுக்கள் சிறுமி முன்னர் கல்வி கற்ற அவிசாவளை புவக்பிட்டிய கிரிவந்தல பிரதேசத்தில் நான்கு பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சிறுமி கல்வி கற்ற பாடசாலையின் அதிபர் மற்றும் உப அதிபர் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ள நிலையில் மேலும் இரு குழுக்கள் டயகம பகுதிக்குச் சென்று சிறுமியின் தாயாரிடம் மீண்டும் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அதேவேளை முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த ஒருவரது கையடக்க தொலைபேசியை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் அவரிடம் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கையடக்கத் தொலைபேசியில் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள கையடக்கத் தொலைபேசி புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

கையடக்க தொலைபேசி மூலம் பெறப்படும் தரவுகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்கும் வங்கிக் கணக்கை ஆராய்வதற்கும் நீதிமன்றத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

அத்துடன் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment

Post Bottom Ad