இலங்கையில் AstraZeneca விற்கு பதில் Pfizer வழங்குவது இடைநிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 8, 2021

இலங்கையில் AstraZeneca விற்கு பதில் Pfizer வழங்குவது இடைநிறுத்தம்

(நா.தனுஜா)

இம்மாதம் மூன்றாவது வாரமளவில் போதுமானளவு அஸ்ராசெனேகா தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும் என்ற காரணத்தினால், நேற்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட முதலாம் கட்டமாக அஸ்ராசெனேகா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட 55 - 69 வயதிற்குட்பட்டோருக்கு இரண்டாம் கட்டமாக பைஸர் தடுப்பூசியை வழங்கும் செயற்திட்டத்தை இடைநிறுத்துவதாகக் கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட தடுப்பூசி வழங்கல் நிலையங்களில் அஸ்ராசெனேகா முதலாம் கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட 55 - 69 வயதிற்குட்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக பைஸர் தடுப்பூசியை வழங்கும் செயற்திட்டம் நேற்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டன. 

இச்செயற்திட்டத்திற்கென 25,000 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், குறித்த செயற்திட்டம் இன்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இச்செயற்திட்டம் இடைநிறுத்தப்படுவதாக நேற்று பின்னிரவில் அறிவிக்கப்பட்டது.

இது குறித்து கொழும்பு மாநகரத்திற்குப் பொறுப்பான பிராந்திய தொற்றுநோய்த் தடுப்பு வைத்திய நிபுணர் தினு குருகே நேற்று புதன்கிழமை இரவு 11 மணியளவில் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

'இம்மாதத்தின் மூன்றாவது வாரமளவில் தேவையாளனவு அஸ்ராசெனேகா தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும் என்று எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே இரு தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட, முதலாம் கட்டமாக அஸ்ராசெனேகா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட 55 - 69 வயதிற்குட்பட்டோருக்கு இரண்டாம் கட்டமாக பைஸர் தடுப்பூசியை வழங்கும் செயற்திட்டத்தை இடைநிறுத்துமாறும் அஸ்ராசெனேகா தடுப்பூசிகளையே இரண்டாம் கட்டமாக வழங்குவதற்கு ஜுலை மாதத்தின் மூன்றாம் வாரம் வரையில் காத்திருக்குமாறும் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன் காரணமாக இன்றையதினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த பைஸர் தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தை நிறுத்த வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இதன் விளைவாக ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு மன்னிப்புக் கோருகின்றோம்' என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இரண்டாம் கட்டத் தடுப்பூசியைப் பெறுவதற்காகக் காத்திருப்போருக்கு அவற்றைப் பெற்றுக் கொடுப்பது குறித்த விபரங்கள் அறிவிக்கப்படும் என்றும் கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க உறுதியளித்துள்ளார்.

No comments:

Post a Comment