ஒரு பில்லியன் டொலர் வெளிநாட்டு கடனை செலுத்தியது இலங்கை - எதிர்க்கட்சிக்கு பிரயோக ரீதியில் பதில் வழங்கியுள்ளோம் என்கிறார் கெஹெலிய : இவ்வார அமைச்சரவையில் 6 தீர்மானங்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 27, 2021

ஒரு பில்லியன் டொலர் வெளிநாட்டு கடனை செலுத்தியது இலங்கை - எதிர்க்கட்சிக்கு பிரயோக ரீதியில் பதில் வழங்கியுள்ளோம் என்கிறார் கெஹெலிய : இவ்வார அமைச்சரவையில் 6 தீர்மானங்கள்

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கடனை உரிய முறையில் செலுத்த அரசாங்கம் நேற்று (26) நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக மாநாடு இன்று (27) கொழும்பில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடன் தவணையை செலுத்த முடியாதுள்ளதாக எதிர்க்கட்சி சுமத்திய குற்றச்சாட்டிற்கு பிரயோக ரீதியில் பதில் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “நிதி முகாமைத்துவம் குறித்து எமக்கு முழுமையான நம்பிக்கை காணப்பட்டது. கொவிட் தொற்றுக்கு மத்தியிலும் முழு உலகமும் பொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தித்துள்ள தருணத்தில் நேற்று செலுத்த இருந்த ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை எவ்வித சிரமங்களும் இன்றி எம்மால் செலுத்த முடிந்தது. 

நாளை முதல் முழு வங்கி தொகுதிகளும் கடன்களை வழங்கவும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் தடையின்றி செயல்பட முடியும். 

அதேபோன்று ஜனவரி மாதம் 500 மில்லியனை செலுத்த வேண்டியுள்ளது. ஜூலை மாதமளவில் ஒரு பில்லியனை செலுத்த வேண்டும். 

எமது வரலாற்றில் மகிந்த ராஜபக்ஷவின் 2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை ஒரு தடவையேனும் கடனை செலுத்துவதில் தாமதமடையவில்லை செலுத்த வேண்டியிருந்த சகல சந்தர்ப்பங்களிலும் எம்மால் அதனை செலுத்தினோம். 

அன்று முதல் விமர்சனங்கள் எழுந்தன. இவ்வாறான விமர்சனங்களுக்கு பிரயோக ரீதியில் பதில் வழங்க எம்மால் முடிந்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.“

தெற்காசியாவின் சேவை வழங்கும் மத்திய நிலையமாக கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் முதலீடுகள் குறித்தும் அமைச்சர் கருத்து தெரிவித்தார்.

“சிறிய நாடுகளில் கூட பாரிய பொருளாதார பலம் காணப்படுகின்றது. துறைமுகங்களை உரிய முறையில் முகாமைத்துவம் செய்யப்படுவதனால் இப்பணம் கிடைக்கின்றது. 

எமது துறைமுகத்தையும் முகாமைத்துவப்படுத்தல், கப்பல்களை தரித்து வைப்பதற்கான சேவைகளை வழங்கும் நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இது முழு உலகிலும் பாரிய வர்த்தகமாக முன்னெடுக்கப்படுகின்றது. 

ஆசியாவில் வர்த்தக கேந்திர நிலையமாக இதனை பரினமிக்க முடியும். இதற்கு குறைபாடுகளும் காணப்படுகின்றன. உரிய முதலீடுகள் தேவைப்படுகின்றன. 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீட்டை நாம் எதிர்பார்த்துள்ளோம்.”

இவ்வார அமைச்சரவையில் எடுக்கப்பட்ட 6 தீர்மானங்கள்

1. பரந்தனில் அமைந்துள்ள பழைய இராசயனத் தொழிற்சாலைக் காணியை நீண்டகால குத்தகையின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட பரந்தன் கெமிகல்ஸ் கம்பனிக்கு வழங்கல்

கைத்தொழில் அமைச்சின் கீழ் காணப்படும் அரசாங்கத்திற்கு சொந்தமான வரையறுக்கப்பட்ட பரந்தன் கெமிகல்ஸ் கம்பனியின் பிரதான வர்த்தக நடவடிக்கையாக குடிநீர் சுத்திகரிப்பு செயன்முறைக்குத் தேவையான திரவக் குளோரின் இந்தியாவிலிருந்தும் பங்களாதேசத்திலிருந்தும் இறக்குமதி செய்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு விநியோகித்து வருகின்றது.

குறித்த கம்பனி உள்ளூரில் சோடியம் ஐதரொட்சைட் மற்றும் குளோரின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதுடன், ஐதரோகுளோரிக் அமிலம், பொலிஅலுமினியம் குளோரைட் மற்றும் சோடியம் ஹைபோ குளோரயிட் போன்றன குறித்த கருத்திட்டத்தின் பிரதி உற்பத்திகளாக உற்பத்தி செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த கருத்திட்டத்திற்குப் பயன்படுத்தக்கூடியவாறு பரந்தனில் பழைய இரசாயனத் தொழிற்சாலை அமைந்துள்ளதும், 1954 ஆம் ஆண்டு தொடக்கம் வரையறுக்கப்பட்ட பரந்தன் கெமிகல்ஸ் கம்பனியால் பயன்படுத்தப்பட்டு வந்ததுமான காணியை, குறித்த கம்பனிக்கு நீண்டகாலக் குத்தகையின் அடிப்படையில் வழங்குவதற்காக கைத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. கல்வி மற்றும் பொழுதுபோக்குகளுடன் கூடிய சுற்றுலாத்துறைக் கருத்திட்டங்களுக்காக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணித்துண்டை குத்தகைக்கு வழங்கல்

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை இலக்கு வைத்து கல்வி மற்றும் பொழுதுபோக்குகளுடன் கூடிய சுற்றுலாத்துறைக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு / பென்டசி லான்ட் என்ரெரெயின்மன்ட் (தனியார்) கம்பனி திட்டமிட்டுள்ளது.

குறித்த முன்மொழியப்பட்ட கருத்திட்டத்திற்கு முதலீட்டுச் சபை உடன்பாடு தெரிவித்துள்ளதுடன், அதற்காக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான மாத்தளை மாவட்டத்தின், உக்குவெல பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ரத்வத்த எனும் பெயரிலுள்ள காணியின் 42 ஏக்கர் 01 றூட் 1.5 பேர்ச்சஸ் காணித்துண்டை 30 வருடகால குத்தகையின் அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கு குறித்த கம்பனி விண்ணப்பித்துள்ளது.

அதற்கமைய, குறித்த காணித்துண்டை குறித்த கம்பனிக்கு நீண்டகாலக் குத்தகையின் அடிப்படையில் வழங்குவதற்கு காணி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. கொழும்பு துறைமுகத்தின் தெற்கு ஆசிய சேவைகள் வழங்கும் நிலையத்திற்கான முதலீடு

தெற்காசிய கேந்திர வலய துறைமுகமான கொழும்புத் துறைமுகம், சேவை வழங்கும் கேந்திர நிலையமாக அபிவிருத்தி செய்தல் தேசிய துறைமுகங்கள் திட்டத்தின் மூலோபாய நோக்கமாகும். அதன் கீழ், கொழும்பு தெற்குத் துறைமுகத்திற்குச் சொந்தமான பெட்டன்பர்க் மற்றும் புளுமென்டல் போன்ற பிராந்திய சேவை வழங்கல் பிரதேசமாக அரச – தனியார் பங்குடமையின் கீழ் அபிவிருத்தி செய்யக்கூடிய பிரதேசமாக அடையாளங்காணப்பட்டுள்ளது.

அவ்வாறே, இலங்கை துறைமுக அதிகார சபையின் உள்ளக கொள்கலன் நடவடிக்கைகள் நிலையம் கப்பல் பொருட்கள் சேவைகள் வழங்கும் வசதிகளுடன் நிர்மாணிப்பதற்காக ஐக்கிய கொள்கலன் முனையம் (UTC) பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது.

கிழக்கு கொள்கலன் முனையம் (ECT) மற்றும் மேற்கு கொள்கலன் முனையம் (WCT) போன்றவற்றின் நடவடிக்கைகள் பகுதியளவில் 2023 ஆம் ஆண்டளவில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கமைய கொழும்பு துறைமுகத்தின் நடவடிக்கை இயலளவு வருடத்திற்கு இருபதின் சம அலகுகள் பத்து மில்லியன்களை அதிகரிக்கும். இந்நிலைமையில் துரிதமாக சேவை வழங்கும் நிலையமொன்று நிர்மாணிக்க வேண்டிய தேவை உருவாகியுள்ளதுடன், அதற்காக கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையம் (CICT) கம்பனி முதலீட்டு முன்மொழிவொன்றை சமர்ப்பித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு துறைமுக நகரத்தின் எல்லையாக அமையும் தெற்காசிய நுழைவாயில் கொள்கலன் முனையம் (SAGT), கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையம் (CICT) மற்றும் கிழக்கு கொள்கலன் முனையம் (ECT) ஆகிய முனையங்களுக்கு அருகிலுள்ள கிட்டத்தட்ட 5.3 ஹெக்டயர் காணியில் கொழும்பு தெற்குத் துறைமுகத்தின் பெட்டன்பர்க் பிரதேசத்தில் அரச – தனியார் பங்குடமையின் கீழ் கப்பல் பொருட்கள் சேவைகள் வழங்கல் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக குறித்த கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனையை மதிப்பீடு செய்வதற்காக பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவொன்றை நியமிப்பதற்கும், குறித்த குழுவின் பரிந்துரைகளுக்கமைய எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. அரச மருத்துவமனைகள் உள்ளிட்ட ஏனைய சுகாதார சேவைகள் நிறுவனங்களுக்குத் தேவையான சத்திர சிகிச்சைக்கான மென்துணிகளை உள்ளூர் விநியோகத்தரிடம் கொள்வனவு செய்தல்

சுகாதார வழங்கல் பிரிவுக்கு வருடாந்த சத்திர சிகிச்சைக்குத் தேவையான மென்துணிகளை உள்ளூர் சிறியளவிலான உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்வதற்காக 2012 ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய 2021 ஆம் ஆண்டுக்கான 30 மில்லியன் மீற்றர்கள் சத்திர சிகிச்சை மென்துணிகளை 774 மில்லியன் ரூபாய்களுக்கு 461 உள்ளூர் விநியோகத்தர்களிடமிருந்து கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. உள்ளூரில் தயாரிக்கப்படும் ஊசிமருந்துத் திரவம் அரசாங்கத்திற்கு கொள்வனவு செய்தல்

பொதுவான சேலைன், டெக்ஸ்ரோஸ் திரவம், பாட்மான் திரவம் மற்றும் மெனிடோல் திரவம் உள்ளிட்ட இரத்த நாளத்தின் ஊடாக உட்செலுத்தும் 43 மில்லியன் ஊசிமருந்துத் திரவப் போத்தல்களை வருடாந்தம் தயாரிக்கக்கூடிய இயலளவுடன் கூடிய தொழிற்சாலையொன்று பல்லேகலே பிரதேசத்தில் அமைப்பதற்கு உள்ளூர் கம்பனியான கெலூன் லயிப் சயன்சஸ் தனியார் கம்பனிக்கு அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம் வசதிகளை வழங்கியுள்ளது.

குறித்த தொழிற்சாலை மற்றும் குறித்த உற்பத்திகளுக்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் அனுமதி கிடைத்துள்ளதுடன், 2021 ஆகஸ்ட் மாதம் தொடக்கம் குறித்த உற்பத்திகளை சந்தைக்கு விநியோகிப்பதற்கு குறித்த கம்பனி திட்டமிட்டுள்ளது.

அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம், உள்ளூரில் தேவையான ஊசிமருந்துத் திரவங்களை விநியோகிப்பதற்காக குறித்த கம்பனியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றது. அதற்கமைய, சுகாதார அமைச்சின் கீழ் இயங்குகின்ற நிறுவனங்களுக்கு தேவையான ஊசிமருந்துத் திரவங்கள், வரையறுக்கப்பட்ட கெலூன் லயிப் சயன்சஸ் தனியார் கம்பனியிடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்திற்கு அதிகாரத்தை ஒப்படைப்பதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. தேசிய கல்வி நிறுவகத்திற்கு 150 ஆசிரியர்களின் சேவைகளைப் பெறல்

21 ஆம் நூற்றாண்டில் எதிர்கொள்ள நேரிட்டுள்ள சவால்களுக்கு வெற்றிகரமான தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான நிபுணத்துவத்துடன் கூடிய மாணவர் பரம்பரையை நாட்டில் உருவாக்குவதற்குத் தேவையான கல்வி முறைமையை உருவாக்குவதற்காக மேற்கொள்ள வேண்டிய கல்வி மறுசீரமைப்பை அறிமுகப்படுத்துவதற்காக தேசிய கல்வி நிறுவகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

குறித்த மறுசீரமைப்புக்கள் மூலமும் கற்பித்தல் மூலோபாயங்களில் விசேட மாற்றங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள மறுசீரமைப்பு 1,2,6,8 மற்றும் 10 ஆம் தரங்களுக்காக 2023 ஆம் ஆண்டிலும் 3,4,5,7 மற்றும் 11 ஆம் தரங்களுக்காக 2024 ஆண்டிலும் அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

குறித்த பணிகளுக்காக தற்போது தேசிய கல்வி நிறுவகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் போதுமனாதல்ல என்பதுடன், அதற்காக அரச பாடசாலைகளில் ஆசிரியர் சேவையிலுள்ள குறிப்பிட்ட பாடவிதானங்களுடன் தொடர்புடைய, தேர்ச்சியுடன் கூடிய அனுபவம் வாய்ந்த 150 ஆசிரியர்களை தேசிய கல்வி நிறுவகத்திற்கு இணைத்துக் கொள்வதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment