உலக வல்லவர் இளையோர் மெய்வல்லுநர் போட்டி : இலங்கை குழுவினரை தெரிவு செய்வதற்கான இறுதி போட்டிகள் 27 ஆம் திகதி - News View

About Us

About Us

Breaking

Thursday, July 8, 2021

உலக வல்லவர் இளையோர் மெய்வல்லுநர் போட்டி : இலங்கை குழுவினரை தெரிவு செய்வதற்கான இறுதி போட்டிகள் 27 ஆம் திகதி

எம்.எம்.சில்வெஸ்டர்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கென்யாவின் நைரோபி நகரில் நடைபெறவுள்ள உலக வல்லவர் இளையோர் மெய்வல்லுநர் போட்டிக்கு இலங்கை மெய்வல்லுநர் குழுவினரை தெரிவு செய்வதற்கான இறுதி போட்டிகள் இம்மாதம் 27 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த இறுதிக்கட்ட தகுதிகாண் போட்டிகளுக்காக குறிப்பிட்ட சில போட்டி நிகழ்வுகளை மாத்திரம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த இலங்கை மெய்வல்லுநர் சங்கமானது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீர, வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகளை பாதுகாத்து கொள்வதற்காகவும் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அச்சங்கம் மேலும் குறிப்பிடுகின்றது.

உலக வல்லவர் இளையோர் மெய்வல்லுநர் போட்டியில் 20 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கவுள்ளனர். அதவாது 2002 ஜனவரி மாதம் 1 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் பிறந்த திறமைமிக்க வீர, வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்கத் தகுதியானவர்கள் என சர்வதேச மெய்வல்லுநர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி மேற்கூறப்பட்ட 20 வயதுக்குட்பட்ட வீர, வீராங்கனைகளை மாத்திரம் இந்த இறுதிக்கட்ட தகுதிகாண் போட்டிகளில் பங்கேற்கச் செய்வதற்கு இலங்கை மெய்வல்லுநர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தால் நடத்த எதிர்பார்த்துள்ள போட்டிகளாவன, ஆண்கள் மற்றும் ‍பெண்கள் இரு பாலாருக்குமான 100 மீற்றர் ஓட்டப் போட்டி, 200 மீற்றர் ஓட்டப் போட்டி, 400 மீற்றர் ஓட்டப் போட்டி , 800 மீற்றர் ஓட்டப் போட்டி , 400 மீற்றர் சட்டவேலி, உயரம் பாய்தல், நீளம் பாய்தல், முப்பாய்ச்சல், ஈட்டி எறிதல், குண்டெறிதல் ஆகியனவும், பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி, ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஆகிய போட்டி நிகழ்வுகளின் இறுதி கட்டப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

2019.08.01. முதல் 2021.06.30 வரையான காலப்பகுதியில் நிலைநாட்டப்பட்ட சிறந்த பெறுதிகளை உடையவர்கள் இந்த இறுதிக்கட்ட தகுதிகாண் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவர்.

இதேவேளை, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி உலக வல்லவர் இளையோர் மெய்வல்லுநர் போட்டியில் பங்கேற்பதற்கு இதுவரையில் நான்கு பேர் தகுதி பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

கொழும்பு லும்பினி வித்தியாலயத்தின் மெதானி ஜயமான்ன (200 மீற்றர் பெண்கள்), மத்துகம ஆனாந்தா சாஸ்திராலாய வித்தியாலயத்தின் இசுரு கெளசல்ய (400 மீற்றர் ஆண்கள்), வலல ஏ. ரத்நாயக்க மத்திய வித்தியாலயத்தின் தருஷி கருணாரத்ன (400 மீற்றர் பெண்கள்), கம்பஹா திருச்சிலுவை கன்னியர் மடத்தின் ஷானிக்கா லக்சானி (800 மீற்றர் பெண்கள்) உலக வல்லவர் இளையோர் மெய்வல்லுநர் போட்டியில் பங்கேற்பதற்கு தகுதி பெற்றவர்களாவர்.

இம்முறை நடைபெறவுள்ள உலக இளையோர் மெய்வல்லுநர் போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை கென்யாவின் நைரோபி நகரிலுள்ள நயாயோ விளையாட்டரங்கில் நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடும் உலக மெய்வல்லுநர் சங்கம், 44 போட்டி நிகழ்வுகளை நடத்தவுள்ளது.

No comments:

Post a Comment