திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திற்கு 22 இலட்சம் ரூபா பெறுமதியான சாதனங்களை முஸ்லிம் எய்ட் நன்கொடையாக வழங்கியது - News View

About Us

About Us

Breaking

Saturday, July 17, 2021

திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திற்கு 22 இலட்சம் ரூபா பெறுமதியான சாதனங்களை முஸ்லிம் எய்ட் நன்கொடையாக வழங்கியது

முஹம்மது ரஸீன் 

திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தில் 15ம் திகதி காலை 11:00 எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், 22 இலட்சம் பெறுமதியான மின்னியல் கற்பித்தல் மற்றும் கணணிச் சாதனங்கள் முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனத்தினால் திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. 

வலயக் கல்வி அலுவலகம் முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனத்துடன் இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.டி.ஏ. நிpஷாம் அவர்கள் பிரதம அதிதியாகக் பங்கேற்று இந்நிகழ்வினைச் சிறப்பித்ததுடன், நன்கொடையினை சம்பிரதாயபூர்வமாக முஸ்லிம் எய்ட் நிறுவனத்திடம் பொறுப்பேற்று வலயக் கல்வி அலுவலகப் பணிப்பாளர் எஸ். சுறிதரன் அவர்களிடம் கையளித்தார். 

மேலும், இந்நிகழ்வில் முஸ்லிம் எய்ட் சிறிலங்கா கல்விக்கான நிகழ்சித் திட்ட முகாமையாளர் செல்வி நாதியா அவர்கள் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டார். கூடவே திருகோணமலை மாவட்ட முஸ்லிம் எய்ட் சிறிலங்கா ஊழியர்களும் மற்றும் வலயக் கல்வி அலுவலக சிரேஷ்ட பணியாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இங்கு விசேட உரையாற்றிய கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் அவர்கள் ‘பொருத்தமான நேரத்தில் முஸ்லிம் எய்ட் இச் சாதனங்களை வழங்கியுள்ளது. சமகாலத்தில் தொலைக்கல்வி முறையை மேம்படுத்தும் சாதனங்களையும் அதேசமயம், பௌதிக ரீதியிலான கற்பித்தலில் ஆற்றலை மேம்படுத்தும் சாதனங்களையும் வழங்கியமை முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் தேர்ச்சினை எடுத்துக் காட்டுகின்றது. மேலும், திருகோணமலை மாவட்டத்தின் கல்வித் தேவைகளைக் கருத்தில் கொண்டு முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனம் தொடர்ச்சியாக சிறந்த முறையில், எமது ஆலோசனைகளைப் பெற்று செயலாற்றி வருகின்றது’ என்றார்.

‘ஒரு சிறந்த ஆரம்பம்’ என மின்பலகையில் தனது கைப்பட எழுதி, இக் கல்வி மேம்பாட்டுச் செயற்பாட்டினை பணிப்பாளர் ஆரம்பித்து வைத்தார். வரவேற்புரையாற்றிய திருகோணமலை மாவட்ட கல்விப்பணிப்பாளர் எஸ்.சிறிதரன் அவர்கள் ‘முஸ்லிம் எய்ட் நிறுவத்தின் இப் பங்களிப்பானது பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தற்போதைய கொவிட் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், அதற்குப் பின்னரும் நேரடியாகப் பயனடைக் காரணமாகியுள்ளது. இந்நன்கொடையானது எமது வலயம் முன்னெடுத்து வருகின்ற கற்றபித்தல் மற்றும் அதனுடன் கூடிய முகாமைத்துவச் செயற்பாடுகளுக்கு மென்மேலும் வலுச் சேர்க்கின்றது’ எனத் தெரிவித்தார்.

இன்டராக் ஸ்மார்போட் எனப்படும் டிஜிடல் மின்பலகைச் சாதனம், டுப்லோர் பிரின்டிங் இயந்திரம், மினி பிரிட்டர்கள், கெமரா, மடிக்கணணிகள், மல்டிமீடியா புரொஜெக்டர் ஆகிய சாதனங்கள் இந் நன்கொடைத் தொகுதியில் அடங்குகின்றன. 

தற்போது கொவிட் நெருக்கடி சவால்களை வெற்றி கொள்ளும் வகையில், நடைபெற்று வருகின்ற தொலைத் தொடர்புக் கற்பித்தல் தேவைகளையும் கருத்தில் கொண்டு திருகோணமலை மற்றும் குச்சவெளி எல்லைப்புறப் பாடசாலைகளில் கற்கும் மாணவர்களின் கல்வித் தகைமைகளை மேம்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ‘கல்விமேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம்’ என்ற ஒரு வருட கருத்திட்டத்தின் கீழ் இந்நன்கொடைத் தொகுதி வழங்கப்பட்டது. 
இத்திட்டத்தின் கீழ் வலயக்கல்வி அலுவலகத்தின் ஆற்றல், தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பாடசாலைகளின் ஆற்றல் மேம்பாடு என்பவற்றைக் கருத்தில் கொண்டு மேற்படி கல்வி நிகழ்ச்சித் திட்டமானது, கிழக்கு மாகாணத் திணைக்களம், திருகோணமலை வலயக் கல்வி அலுவலகம் என்பவற்றின் ஆலோசகளைப் பெற்று வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தவிர, தேவைகளையுடைய பாடசாலைகளில் ஒரு தொகுதி இனங்காணப்பட்டு அங்குள்ள பரிசோதனைக் கூடங்கள், நூல்நிலையங்கள் புனரமைப்பு, தளபாடங்கள் வழங்குதல் உட்பட, மாணவர்கள், பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுச் செயற்பாடுகள் மற்றும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சித் திட்டங்கள் என்பவற்றையும் உள்ளடக்கியதாக இக்கல்வி மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

20 பாடசாலைகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும்; பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுக்கள் என்பன இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றன.

உபகரணங்கள் கையளிக்கும் வைபவம் நிறைவுற்றதைத் தொடர்ந்து தேசிய மட்டத்திலான கணித அறிவுப் போட்டிகளில் சாதனைகள் படைத்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியும், விசேட அதிகளும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்கள், வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிக் கௌரவித்தனர்.

No comments:

Post a Comment