(எம்.எப்.எம்.பஸீர்)
கல்கிசை பகுதியில் வாடகைக்கு பெறப்பட்ட அறையொன்றில் தடுத்து வைத்து 15 வயது சிறுமி ஒருவரை இணையத்தளமூடாக பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் மிஹிந்தலை பிரதேச சபையின் உப தலைவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரத்திலுள்ள அவரது வீட்டுக்கு சென்ற பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் அவரை நேற்று முன்தினம் கைது செய்து நேற்று கொழும்புக்கு அழைத்து வந்து நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.
அத்துடன் வர்த்தகர் ஒருவர் உட்பட மேலும் மூவரையும் நேற்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் மன்றில் ஆஜர் செய்தனர். அதன்படி, இந்த விவகாரத்துடன் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் மிஹிந்தலை பிரதேச சபையின் உப தலைவரை மன்றில் ஆஜர் செய்த பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரநாயக்க, சந்தேகநபர் கடந்த மார்ச் 8 ஆம் திகதி குறித்த சிறுமியை பம்பல்பிட்டி ஹோட்டல் ஒன்றில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக குறிப்பிட்டனர்.
குறித்த பிரதேச சபை உப தலைவர், அன்றையதினம் இரவு 9.30 மணியளவில், குறித்த ஹோட்டலில் அறை பதிவு செய்து தங்கியுள்ளதாக ஆவணங்கள் ஊடாக உறுதியாகியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமி தன்னை பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் துஷ்பிரயோகம் செய்ததாக வாக்கு மூலத்தில் குறிப்பிட்டு, அவரது தொலைபேசி இலக்கத்தையும் வழங்கியதற்கமைய இந்த கைது முன்னெடுக்கப்பட்டதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.
இந்நிலையில், விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம, குறித்த பிரதேச சபை உப தலைவர் ஹோட்டலுக்கு சென்ற பின்னரேயே அச்சிறுமி அவர் தங்கியிருந்த அறைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளார் எனில், அவரை விநியோகித்தவர் மற்றும் ஹோட்டலின் பொறுப்பு குறித்து விசாரணை நடத்தவில்லையா என வினவினார்.
இதற்கு பதிலளித்த பொறுப்பதிகாரி மனோஜ் சமரநாயக்க, குறித்த விசாரணைகள் இடம்பெறுவதாகவும், சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்கு விநியோகித்த நபர் புனைப் பெயரொன்றினால் அறியப்படுவதாகவும் அவரது அடையாளத்தை வெளிப்படுத்த தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும் மற்றும் பிரதான சந்தேகநபர் ரஜீவிடம் விசாரிப்பதன் ஊடாகவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்நிலையில், சிறுமியை சட்ட ரீதியிலான பாதுகப்பிலிருந்து கடத்தியமை மற்றும் பாலியல் பலாத்காரம் புரிந்தமை தொடர்பில் இடம்பெறும் இந்த விசாரணைகள் பரந்துபட்ட நிலையில் முன்னெடுக்கப்படுவதாக பொலிசார் குறிப்பிட்டனர்.
இதன்போது பிரதேச சபை உப தலைவர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி டெனி பெர்ணான்டோ, தனது சேவை பெறுநர் குறித்த திகதியில் குறித்த ஹோட்டல் அறையில் இருந்ததை ஒப்புக் கொள்வதாக குறிப்பிட்டார். எனினும் அவர் சிறுமியை சட்ட ரீதியிலான பாதுகாப்பிலிருந்து கடத்தவில்லை எனவும், அறைக்கு அழைத்து வரப்பட்ட சிறுமியிடம் பாலியல் ரீதியில் உறவு வைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
தனது சேவை பெறுநர் கடந்த இரு வருடங்களாக பாலியல் பலவீனத்துக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அது குறித்த வைத்திய அறிக்கைகளை மன்றில் சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வறாயினும் விடயங்களை ஆராய்ந்த நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம சந்தேகநபரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டு அன்றையதினம் அடையாள அணிவகுப்புக்கு அவரை உட்படுத்தவும் உத்தரவிட்டார்.
இதனிடையே திறந்த மன்றில் நீதிவான் லோச்சனி அபேவிக்ரம பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்பில் விடயங்களை முன் வைத்தார்.
'குறித்த சிறுமி, பல்வேறு நபர்களால் பல்வேறு முறைகளில் பாலியல் நடவடிக்கைகளுக்கு மிக மோசமாக பயன்படுத்தப்பட்டுள்ளார்.
அச்சிறுமி நேற்றுமுன்தினம் எனது உத்தியோகபூர்வ அறையில் ஆஜர் செய்யப்பட்ட போது நான் அது தொடர்பில் ஆரய்ந்தேன். பாலியல் துஷ்பிரயோகங்களால், மிக மோசமாக அவர் பாதிக்கப்பட்டுள்ளார். போசனை இன்றி, மானசீக ரீதியிலும் உடலளவிலும் அவர் மிகவும் சோர்வடைந்துள்ளார்.
இந்நிலையில் சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பது போன்று, அச்சிறுமியை பழைய நிலைக்கு அழைத்து வருவதும், இந்நிலையிலிருந்து மீட்பதும் மிக முக்கியமாகும்.
அவர் மீண்டும் பாடசாலைக்கு செல்ல ஆசைப்படுகிறார். அதனால் எதிர்வரும் சாதாரண தரப் பரீட்சையை எழுதுவதற்காக, அவர் தயார் படுத்தப்படுவதுடன் சம வயதை உடைய சிறுவர்களுடன் அவர் வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் அவருக்கு உடல் மற்றும் மானசீக சிகிச்சைகள் வட கொழும்பு போதனா வைத்தியசாலை ஊடாக வழங்கப்படுகின்றன.' என குறிப்பிட்டார்.
இதனிடையே, சிறுமியை விற்பனை செய்வதற்கு உதவிய மற்றுமொரு நபர் குறித்த விசாரணைகளின் போது, குறித்தநபர் வேறொரு பெண்ணை விற்பனை செய்வதற்காக அழைத்து சென்றிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் மற்றும் சந்தேகநபர் ஆகியோர் வௌ்ளவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றில் ஆஜர் செய்த போது தெரிவித்தனர்.
அத்துடன், விஷேடமாக குறித்த சிறுமியை விற்பனை செய்ய இணையத்தளம் ஊடக விளம்பரபப்டுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் நேற்று மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம விசாரணையாளர்களை வினவினார்.
குறித்த விளம்பரமே பலரை குறித்த சிறுமியை பாலியல் ரீதியில் அனுபவிக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதால், சிறுமியை சட்ட ரீதியிலான பாதுகாப்பிலிருந்து கடத்தவும், பாலியல் துஸ்பிரயோகம் செய்யவும் உதவி ஒத்தாசை வழங்கியமைக்காக குறித்த விளம்பரத்தை பிரசுரித்த இணையத்துக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை என்ன என நீதிவான் பொலிசாரிடம் வினவினார்.
இது தொடர்பில் சி.ஐ.டி.யின் ஒத்துழைப்புடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்து பொறுப்புக்கூற வேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என பொலிசார் பதிலளித்தனர்.
இதனிடையே பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் உத்தரவுக்கு அமைய, கல்கிசை பொலிஸாரிடமிருந்து விசாரணைகளை பொறுப்பேற்றுள்ள பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக சிறப்பு பொலிஸ் குழுவினர், இந்த சம்பவத்தில் முதல் சந்தேகநபர் ஆஜர் செய்யப்பட்ட மொரட்டுவை நீதிமன்றில் உள்ள வழக்கையும் கொழும்பு பிரதான நீதிவானுக்கு உள்ள அதிகாரத்தின் பிரகாரம் கொழும்பு பிரதான நீதிமன்றின் கீழ் கொண்டுவர கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
இந்நிலையில் சிறுவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகம், மனிதக் கடத்தல் மற்றும் இணையத்தள குற்றங்கள் தொடர்பிலான விடயங்களை ஆராய்ந்து இவ்விசாரணைகளில் விஷேட நடவடிக்கை எடுக்க விரிவான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் குறித்த சிறுமியின் தாய், சிறுமியை முதன்முதலில் விற்பனை செய்தவருடன் தகாத முறையில் உறவுகளை பேணும் பெண்ணொருவர் (கள்ளக் காதலி), முச்சக்கர வண்டி சாரதி, கார் சாரதி, சிறுமி தொடர்பான தகவல்களை இணையத்தளத்தில் பதிவேற்ற விளம்பரம் தயாரித்தவர், பெளத்த பிக்கு, வர்த்தகர், பிரதேச சபை உப தலைவர், தரகர் ஒருவர் என 21 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக பணிப்பாளர் சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சர் தர்ஷிகா குமாரியின் கீழ் அதன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரநாயக்கவின் கீழான சிறப்பு குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment