மலையகத்தில் தேசிய பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளன கூட்டணி - 12 தொழிற்சங்கங்கள் இணக்கம் என்கிறார் பேராசிரியர் விஜயசந்திரன் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 18, 2021

மலையகத்தில் தேசிய பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளன கூட்டணி - 12 தொழிற்சங்கங்கள் இணக்கம் என்கிறார் பேராசிரியர் விஜயசந்திரன்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஓரணியில் திரண்டு எதிர்ப்பதற்கும், தேசிய பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனம் எனும் கூட்டணியை உருவாக்குவதற்கும் மலையகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் பிரதான தொழிற்சங்கங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளன.

இணையவழி ஊடாக நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி உட்பட மலையகத்தில் செயற்படும் 12 தொழிற்சங்கங்கள் இதற்கான விருப்பத்தை வெளியிட்டதாக மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் விஜயசந்திரன் தெரிவித்தார்.

ஹட்டனில் இன்று (18.07.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர் தொழிலாளர்கள் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. அவர்களின் தொழில் உரிமைகள் மறுக்கப்படுவதுடன் சலுகைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதுடன், வேலை சுமையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மறுபுறத்தில் தோட்டப்பகுதிகளில் மலையக தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளை தடுப்பதற்கு கம்பனிகள் முற்படுகின்றன. அவ்வாறு செய்து தொழிற்சங்கங்கள் இல்லாத காலப்பகுதியில் ஆங்கிலேயர்கள் நிர்வாகத்தை முன்னெடுத்ததுபோல செயற்படுவதற்கு முற்படுகின்றன.

இது பயங்கரமானதொரு நிலையாகும். தொழிற்சங்க கட்டமைப்பு சிதைக்கப்பட்டால் தொழிலாளர்கள் உதிரிகளாக்கப்படுவார்கள். ஒற்றுமை சிதைக்கப்படும். அடக்குமுறை தலைதூக்கும்.

எனவே, இவ்வாறானதொரு நிலை ஏற்படுவதை தடுப்பதற்கு மலையகத்திலுள்ள பிரதான தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் இணையவழி கலந்துரையாடலொன்று நடைபெற்றது. மலையக புத்திஜீவிகள் சிலரும் இதில் பங்கேற்றனர்.

இதன் அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்கள்மீதான அடக்குமுறையை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் எனவும், தேசிய பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனமொன்றை உருவாக்கி, வழிகாட்டல் குழுவை அமைத்து அதன் ஊடாக இவ்விடயங்களை கையாளன வேண்டும் என இணக்கம் காணப்பட்டுள்ளது.

தொழிலாளர் நலன்சார் விடயத்தில் கட்சி, தொழிற்சங்க பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைவதற்கு தொழிற்சங்கங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன. எனவே, சட்டம் மற்றும் அரசியல் ரீதியில் வெவ்வாறாக அன்றி ஒன்றாக அழுத்தம் கொடுக்கக்கூடிய சூழல் இதன்மூலம் உருவாகும்.

அதேவேளை, கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும்பட்சத்தில் கம்பனிகளின் சார்பில் முதலாளிமார் சம்மேளனம் கைச்சாத்திடுவதுபோல தொழிலாளர்களின் சார்பில் தொழிற்சங்க சம்மேளனத்தை கைச்சாத்திட வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்யக்கூடியதாக இருக்கும். அதேபோல இதர தொழிற்சங்கங்களின் ஆதரவையும் திரட்ட முடியும்.” என்றார்.

No comments:

Post a Comment