தம் சொகுசு வாகனங்களை மக்களுக்காக அர்ப்பணித்து பிரபல பெளத்த தேரர்கள் முன்மாதிரியாக நடக்க வேண்டும் - மனோ கணேசன் - News View

Breaking

Post Top Ad

Friday, June 18, 2021

தம் சொகுசு வாகனங்களை மக்களுக்காக அர்ப்பணித்து பிரபல பெளத்த தேரர்கள் முன்மாதிரியாக நடக்க வேண்டும் - மனோ கணேசன்

வண எல்லே குணவன்ச தேரர், "பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்" என கூறுகிறார். இது நல்ல யோசனை. ஆனால் அதற்கு முன், இந்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த எல்லா அரசாங்கங்களும், தேரர்களை தம்வசம் வைத்துக் கொள்ள, வழங்கிய பென்ஸ், ரேஞ்ரோவர், டொயோடா போன்ற சொகுசு வாகனங்களையும், ஆலய சொத்துக்களையும், வரப்பிரசாதங்களையும், பொதுக் காரியங்களுக்காக வழங்கி, பிரபல வண. தேரர்கள்தான் முன்மாதிரியாக இந்த பணியினை ஆரம்பித்து வைக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

இது பற்றி மனோ எம்பி மேலும் விவரித்து கூறியுள்ளதாவது, வண எல்லே குணவன்ச தேரர், "பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்" என கூறுகிறார். நல்லது. ஆனால், உண்மையில் எனக்கு வண. தேரர்கள் இதை போதிக்க தேவையில்லை.

1999ம் ஆண்டில் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டதில் இருந்து எனக்கு கிடைக்கும் சம்பளம், கொடுப்பனவுகள் எல்லாவற்றையும் நான் பொது காரியங்களுகாகவே தொடர்ந்தும் அர்ப்பணித்துள்ளேன். அது மட்டுமல்ல, எனது கடும் சொந்த உழைப்பினால் நான் தேடிப்பெற்ற பெறுமதியான சொத்துக்களையும், பொது காரியங்களுகாகவே விற்று செலவழித்துக் கொண்டு இருக்கின்றேன்.

நான் ஒருபோதும் பொது சொத்தை திருடியது கிடையாது. ஏனெனில் எனக்கு திருட தெரியாது. இவைதான் என் தந்தை எனக்கு சொல்லித்தந்து விட்டு போன பாடங்கள். விட்டுத்தந்த மிகப்பெரிய சொத்துகள். என் தந்தையைவிட, எனக்கு வழிக்காட்ட பெரிய மதத் தலைவர் என்று எவருமில்லை.

ஆனால், இந்நாட்டின் இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மத தலைவர்களை விட, விசேட அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ள மிகப்பல பெளத்த தேரர்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.

இந்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த எல்லா அரசாங்கங்களும், உங்களை போன்ற தேரர்களை தம்வசம் வைத்துக் கொள்ள, வழங்கிய பென்ஸ், ரேஞ் ரோவர், டொயோடா போன்ற சொகுசு வாகனங்கள், சொகுசு வசிப்பிடங்கள் உட்பட்ட வசதிகளையும், வரப்பிரசாதங்களையும் பொது மக்களுக்காக அர்ப்பணியுங்கள். ஆலயங்களுக்கு சொந்தமான சொத்துக்களையும், பொதுக் காரியங்களுக்காக வழங்கி இந்த பணியினை ஆரம்பித்து வையுங்கள்.

கெளதம புத்தன் போதித்ததை போன்று, “கொலை இல்லை, திருட்டு இல்லை, பணம் இல்லை, பாலியல் உறவு இல்லை, பொய் இல்லை, போதைப் பொருள் இல்லை, மதிய உணவுக்குப் பிறகு சாப்பாடு இல்லை, நடனம், இசை இல்லை, நகைகள் ஒப்பனைப்பொருட்கள் இல்லை, எழுந்த படுக்கையில் தூக்கம் இல்லை,” என்ற பெளத்த துறவியின் எளிய துறவு வாழ்க்கையை வாழ உங்களால் முடியாவிட்டாலும் “பரவா-இல்லை”.

தேரர்களாகிய நீங்கள், “இன மதவாத அரசியல் இல்லை” என்று வாழ்ந்தாலே போதும். இந்நாடு உருப்படும். நாளாந்தம் கொடுமைகளின் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் அப்பாவி தமிழ், முஸ்லிம் மற்றும் அப்பாவி ஏழை சிங்கள மக்களும் உங்களை போற்றி வணங்குவார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad