(நா.தனுஜா)
கிறிஸ்மஸ் தீவிலுள்ள அவுஸ்திரேலியாவின் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தடுப்பு நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் அகதிகளான நடேசலிங்கம் குடும்பத்தினரை அங்கிருந்து வெளியேறுவதற்கு அவுஸ்திரேலியா அனுமதித்துள்ளது.
எனினும் அவர்கள் குயின்ஸ்லாந்தில் உள்ள அவர்களது வீட்டிற்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், மாறாக மேற்கு நகரான பேர்த்தில் சுமார் 2,485 மைல் தொலைவில் அமைந்துள்ள சமூகத் தடுப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழ் அகதிகளான நடேசலிங்கம் மற்றும் பிரியா ஆகியோர் முறையே 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் புகலிடம் கோரி தனித்தனியாகப் படகு மூலம் அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்தனர். அங்கு திருமணம் செய்துகொண்ட அவர்கள் குயின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள பிலோவீலா நகரில் குடியேறினர். அவர்களுக்கு கோபிகா, தருணிகா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அந்தக் குடும்பத்திற்கு அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கு உரிமையில்லை எனத் தெரிவித்து, கடந்த 2018 ஆம் ஆண்டில் அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
எனினும் அவர்களை வெளியேற்றுவதற்கு எதிராக அந்நாட்டு உயர் நீதிமன்றங்களில் முன்னெடுக்கப்பட்ட சட்டப் போராட்டங்களையடுத்து, அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதன் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டில் அவர்கள் கிறிஸ்மஸ் தீவிலுள்ள அவுஸ்திரேலியாவின் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தடுப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டார்கள்.
இது குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாகிவந்த போதிலும், அண்மையில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த தருணிகா என்ற 3 வயதேயான சிறுமி (இரண்டாவது மகள்) கடந்த மே மாதம் 27 ஆம் திகதி கடும் காய்ச்சல், வாந்தி, வயிற்றோட்டம், மயக்கம் என்பவற்றால் பாதிக்கப்பட்டு கடுமையான சுகவீனமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரது குடும்பத்தினரை விடுக்குமாறு கோரும் வலியுறுத்தல்களும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் மீதான அழுத்தங்களும் மீண்டும் வலுப்பெற்றன.
இத்தகைய அழுத்தங்களுக்கு மத்தியில் அந்தக் குடும்பத்தை அமெரிக்காவில் அல்லது நியூஸிலாந்தில் மீளக் குடியமர்த்துவது தொடர்பில் அவதானம் செலுத்தியிருப்பதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் கடந்த 8 ஆம் திகதி அறிவித்தது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே தற்போது அவர்களை கிறிஸ்மஸ் தீவிலிருந்து விடுவித்து, பேர்த்திலுள்ள சமூகத் தடுப்பு நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.
அந்தக் குடும்பத்தின் பெயரைக் குறிப்பிடாமல், இது பற்றிய அறிவிப்பை அவுஸ்திரேலியாவின் மீள்குடியேற்ற அமைச்சர் அலெக்ஸ் ஹவ்கே செய்திருக்கிறார்.
ஒருபுறம் தடுப்புக் காவலில் உள்ள சிறுவர்கள் தொடர்பான விடயங்களைக் கையாளும்போது, போதியளவான இரக்கத்துடன் செயற்படுவதற்கும் மறுபுறம் அரசாங்கத்தின் கொள்கைகளின் பிரகாரம் எல்லைப் பாதுகாப்புத் தொடர்பான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும் இடையில் இயலுமான வரையில் சமநிலையைப் பேணமுற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை 'கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தக் குடும்பம் விடுவிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் ஒன்றிணையவுள்ள செய்தி மகிழ்ச்சியளிக்கின்றது. எனினும் அந்தக் குடும்பம் பிலோவீலாவிற்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்' என்று நடேசலிங்கத்தின் குடும்பம் விடுவிக்கப்பட வேண்டும் என்ற போராட்டத்தை முன்நின்று நடத்தி வந்த அஞ்செலா பிரெட்டெரிக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
சமூகத் தடுப்பு நிலையத்தில் தடுத்து வைப்பதன் ஊடாக அந்தக் குடும்பத்தின் பாதுகாப்பையும் அமைதியான வாழ்வையும் உறுதிப்படுத்த முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ள அஞ்செலா, 'தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக மீண்டும் பிலோவீலாவில் பணிக்குச் செல்ல வேண்டும் என்பதில் நடேசலிங்கம் முனைப்பாக இருக்கின்றார்.
அதேபோன்று பிரியாவும் அவரது பிள்ளைகளான கோபிகா மற்றும் தருணிகாவை பாடசாலைக்குச் சேர்க்க வேண்டும் என்பதில் ஈடுபாட்டுடன் இருக்கின்றார். தருணிகா மீண்டும் அவர்களது வீட்டிற்குத் திரும்பியதும் பெரிய பிறந்தநாள் கொண்டாட்டமொன்றை ஒழுங்கு செய்வதாக நாங்கள் வாக்குறுதியளித்திருக்கிறோம். இந்தக் குழும்பத்தின் வீடு பிலோவீலா என்பதை அவுஸ்திரேலியா அறியும்' என்றும் அஞ்செலா கூறியிருக்கிறார்.
அதேவேளை இது குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அன்ரனி அல்பனிஸ்,
கடந்த 2019 ஆம் ஆண்டில் பிலோவீலாவிற்கு தான் விஜயம் செய்ததை நினைவு கூர்ந்திருக்கிறார். அங்குள்ள அனைவரும் நடேசலிங்கம் குடும்பத்தின் மீது கொண்டிருக்கும் அன்பு தொடர்பிலும் பகிர்ந்திருக்கும் அவர், அந்தக் குடும்பம் அவர்களது வீட்டிற்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment