முடியாவிட்டால் வெளியேறிச் செல்லுங்கள், தேசப்பற்றாளர்கள் யார்? தேசத்துரோகிகள் யார்? பிரேரணை முடிவில் தெரியவரும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 22, 2021

முடியாவிட்டால் வெளியேறிச் செல்லுங்கள், தேசப்பற்றாளர்கள் யார்? தேசத்துரோகிகள் யார்? பிரேரணை முடிவில் தெரியவரும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் நாங்கள் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளோம். தேசப்பற்றாளர்கள் யார்? தேசத்துரோகிகள் யார்? என்பதை இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் மக்கள் அறிந்துகொள்ள முடியுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து பாராளுமன்றத்திற்கு செல்லும் வழியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட போராட்டத்தின் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களின் துன்பங்களை இல்லாமல் செய்வதற்கு பதிலாக இந்த அரசாங்கம் மக்களுக்கு மேலும் துன்பத்தையே கொடுத்து வருகின்றது. கொரோனா தொற்று நிலைமை, உர நெருக்கடி, தொழில் நெருக்கடி, பிள்ளைகளுக்கு கல்வி இல்லாமை, பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றை அரசாங்கம் செய்து வருகின்றது. கொவிட்19 தொற்று நிலைமையில் மக்களுக்கு தடுப்பூசி இல்லை, ஆனால் அரசாங்கத்துடன் இருப்பவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி உள்ளது.

இதேவேளை விவசாயிகள், மீனவர்கள், அரச ஊழியர்களுக்கு இன்று வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவற்கு எந்தவொரு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. மக்களுக்கு நிவாரணங்களை கொடுக்கவோ, நாட்டை அபிவிருத்தி செய்யவோ முடியாத நிலையில் அரசாங்கம் இருக்கின்றது.

இந்த நேரத்தில் அரசாங்கத்திற்கு நாங்கள் கூறுவது என்னவென்றால், முடியாவிட்டால் வெளியேறிச் செல்லுங்கள் என்று கேட்கின்றோம். நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

இன்று இந்த போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வாகனங்களை நாங்கள் பயன்படுத்தியுள்ளோம். அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலைகளை குறைக்குமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்கின்றோம்.

இதேவேளை எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் நாங்கள் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்துள்ளோம். தேசப்பற்றாளர்கள் யார்? தேசத் துரோகிககள் யார் என்பதனை இந்த நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் மக்களுக்கு பார்க்க முடியும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment