சுகாதார வழிகாட்டலை மீறிய விதத்தில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம், இலங்கை அரசாங்கத்திற்கு தெளிவில்லை - விசேட வைத்தியர் நிஹால் அபேசிங்க - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 2, 2021

சுகாதார வழிகாட்டலை மீறிய விதத்தில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம், இலங்கை அரசாங்கத்திற்கு தெளிவில்லை - விசேட வைத்தியர் நிஹால் அபேசிங்க

(ஆர்.யசி)

பொதுமக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும், அதிகாரிகளுக்கும் தெளிவான வேலைத்திட்டமொன்றும் இல்லை, தொற்றுப்பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கையானது சுகாதார தரப்பின் தீர்மானத்திற்கு முரணானதென தொற்று நோய்கள் குறித்த நிபுணரும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் முன்னாள் ஆலோசகருமான விசேட வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவித்தார்.

ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் தடுப்பூசியில் ஒரு டோஸ் பயன்படுத்தினால் போதுமானதாக சுகாதார அமைச்சும், நிபுணர்களும் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ள நிலையில், குறித்த கருத்தானது நிபுணர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தொற்று நோய்கள் குறித்த நிபுணரும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் முன்னாள் ஆலோசகருமான விசேட வைத்தியர் நிஹால் அபேசிங்கவிடம் வினவியபோதே அவர் இவற்றை தெளிவுபடுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில், கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வெவ்வேறு நாடுகளிடம் இருந்து தடுப்பூசிகளை அரசாங்கம் பெற்று வருகின்றது. அதில் தவறேதும் இல்லை, ஐரோப்பாவிற்கு ஏற்ற வகையிலும், ஆசியாவிற்கு ஏற்ற வகையிலும் தடுப்பூசிகளின் தன்மைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். ஆனால் பொதுவான ஒரு நோயை கட்டுப்படுத்த சகல தடுப்பூசிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

எவ்வாறு இருப்பினும் இலங்கையில் மக்களுக்கு தடுப்பூசிகளை ஏற்ற முன்னர் தடுப்பூசியின் தன்மை, அதன் தாக்கம், ஒருவருக்கு எத்தனை டோஸ் ஏற்றப்பட வேண்டும் என்பது குறித்த முழுமையான அறிவும், தெளிவும் சுகாதார அமைச்சிற்கும், தீர்மானம் எடுக்கும் நபர்களுக்கும் இருக்க வேண்டும்.

ஸ்புட்னிக் தடுப்பூசியில் ஒரு டோஸ் ஏற்றிக் கொண்டால் போதும் என்ற கருத்தொன்று பரப்பப்பட்டு வருகின்றது. அவ்வாறான கருத்தொன்றினை தெரிவிக்க முன்னர் சுகாதார தரப்பினர் கலந்துரையாடி தெளிவான நிலைப்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

நினைத்தால் போல் கருத்துக்களை கூறி மக்களை குழப்பக்கூடாது. இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற முன்னர் அரசாங்கமே முதலில் தெளிவான அறிவிப்பை விடுத்திருக்க வேண்டும்.

எனினும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் குறித்து யாருக்குமே தெளிவில்லை, வேலைத்திட்டமொன்றும் இல்லை, எமக்கு கிடைத்திருந்த தடுப்பூசிகளை அவசியமான பகுதிகளுக்கும், அவசியமான நபர்களுக்கும் கொடுத்திருந்தால் தொற்றுப்பரவலை இலகுவாக கட்டுப்படுத்தியிருக்க முடியும்.

ஆரம்பத்தில் சுகாதார தரப்பினரால் வழிகாட்டியொன்று உருவாக்கிக் கொடுக்கப்பட்டது. ஆனால் அதனை மீறிய விதத்தில் செயற்பட்டு வருகின்றது என்பதே வெளிப்படுகின்றது. அரசாங்கம் இதில் பாரிய தவறிழைத்துள்ளது எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment