இந்தியாவின் பாதுகாப்பு கரிசனை குறித்து இரு நாட்டு இராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாடப்படுகிறது என்கிறார் அமைச்சர் கெஹெலிய - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 23, 2021

இந்தியாவின் பாதுகாப்பு கரிசனை குறித்து இரு நாட்டு இராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாடப்படுகிறது என்கிறார் அமைச்சர் கெஹெலிய

(எம்.மனோசித்ரா)

இந்தியாவின் பாதுகாப்பு கரிசனை குறித்து இரு நாட்டு இராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாடப்படுகிறது. பூகோள அரசியலில் பிராந்திய பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சினைகள் பல உள்ளன. இவ்வாறான பிரச்சினைகள் இராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாடப்படுகிறது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இலங்கை திட்டங்களில் சீனா பங்கேற்றிருப்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என இந்திய கடற்படையின் துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் அசோக் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ள அவர், இந்திய கடல் எல்லைகள் மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகவும் சீனாவுடன் பதற்றம் நிலவுவதால், அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானங்களை பயன்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த கருத்துக்கள் தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களால் கேள்வியெழுப்பப்பட்ட போதே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பூகோள அரசியலில் பிராந்திய பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சினைகள் பல உள்ளன. வரலாறு முழுவதும் இவ்வாறான பிரச்சினைகள் காணப்பட்டன. பிரச்சினைகள் இல்லை என்று கூற முடியாது. 

இவ்வாறான பிரச்சினைகள் இராஜதந்திர மட்டத்தில் , இடைக்கிடை இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும் போது அவை தொடர்பில் கலந்துரையாடி இதுவரை பயணித்ததைப் போன்று எதிர்காலத்திலும் பயணிக்க எதிர்பார்க்கின்றோம்.

பூகோள அரசியலில் சில சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அவற்றை நாம் உதாசீனப்படுத்தப் போவதில்லை. சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் பலவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

எனவே அரசாங்கம் என்ற ரீதியில் அவ்வாறானதொரு ஆபத்து ஏற்படாது என்ற நிலைப்பாட்டில் செயற்படாமல், அவ்வாறொன்று நடைபெற்றால் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே இது தொடர்பில் வெளிநாட்டலுவல்கள அமைச்சு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது என்றார்.

No comments:

Post a Comment